வேலைக்குச் செல்லும் பெண்கள்தான் விதவிதமான ஆபத்துகளை எதிர்கொள்கிறார்கள் என்றால் வீட்டிலிருக்கும் பெண்களும் நிறைய ஆபத்துகளை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அப்படி யாரும் யூகித்திராத ஒரு முக்கியமான ஆபத்தைச் சொல்லி நம்மை சீட்டின் நுனியில் கட்டிப் போடுகிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில்.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சுற்றி நடக்கும் கதை. நான்கு பெண்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்க, அதைத் துப்பறியும் காவல் ஆய்வாளரான பரத்தும், அவரது மேலதிகாரியான சுரேஷ் மேனனும் எதிர்கொள்ளும் மர்மங்களும், ஆச்சரியங்களும்தான் கதை.
தலைப்பின் நாயகனாக பரத். நீண்ட இடைவெளிக்குப்பின் அவருக்கு அமைந்திருக்கும் அருமையான படம் இது என்றால் மிகையில்லை. எப்படிப் பார்த்தாலும் கடைசியில் கதநாயகியே அதிகம் ஸ்கோர் செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பது தெரிந்தும், அலட்டிக்கொள்ளாமல் ஸ்கிரிப்டின் தன்மை புரிந்து ஆழமாக நடித்திருக்கிறார் பரத். அந்த அனுபவ அணுகுமுறையைப் பாராட்டலாம்.
சொல்லப்போனால் இது ‘ஹீரோயின் ஓரியன்டட்’ என்று சொல்லக்கூடிய நாயகியை முன்னிறுத்தும் கதைதான். ஆனால், நாயகியை கிளைமாக்ஸ் தவிர அடக்கியே வாசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
முன்னிலை நடிகைகள் மட்டுமே நடித்திருக்கக் கூடிய கதாநாயகி வேடத்தில் மலையாள வரவு ‘ஆன் ஷீத்தல்’. அவரை அறிமுகப்படுத்தும்போது இவர்தானா நாயகி என்று கொஞ்சம் அலுப்பாகவே இருக்கிறது. ஆனால், படம் முடியும்போது அவரே மனத்தில் நிறைகிறார். அவர் புதுமுகமாக இருந்ததே படத்துக்கு பலம் என்பது கடைசியில்தான் புரிகிறது.
தமிழுக்கு நல்லதொரு வரவு ஆன் ஷீத்தல். அவருக்கு ‘நல்வரவு’ சொல்லி வரவேற்கலாம்..!
காவல் உயரதிகாரியாக நடித்திருக்கும் சுரேஷ்மேனனை விட்டால் அந்த வேடத்தில் யாரும் அப்படி மிளிர்ந்திருக்க முடியாது. நாயகனுக்கு இணையான கேரக்டர் அவருக்கும். ஒரு கட்டத்தில் அவர்தான் எல்லா பிரச்சினைகளுக்கு காரணமோ என்றெண்ண வைக்கிறார்.
இவர்களுக்கு இணையாக பளிச்சிடும் இன்னொரு முக்கிய பாத்திரம் ஆதவ் கண்ணதாசனுடையது. இயல்பாக அறிமுகமாகி கடைசி கடைசியாக வில்லனாக உருவெடுக்கையில் “அடடா… நல்ல ஹீரோவாக வந்திருக்க வேண்டியவர் இப்படி வில்லனாகி விட்டாரே என்று கவலை கொள்ள வைத்திருக்கிறார். ஆனாலும், அவரை இயக்குநரின் புத்திசாலித்தனம் காப்பாற்றி விடுகிறது.
இரண்டே காட்சிகளில் வரும் பிரியதர்ஷினிக்கும் படத்தில் அப்படி ஒரு முக்கியத்துவம இருக்கிறது.
சீரியஸான படம் என்பதால் காமெடிக்குக் கொஞ்சமே வாய்ப்புள்ள படத்தில் அந்த வேலையை பரத்துடன் கூடவே ‘சிங்கமாக’ வரும் கான்ஸ்டபிள் ஏற்றிருக்க்கிறார். யாருக்கு போன் போட, அது அவரது மேலதிகாரிக்குப் போய்விட இவர் படும்பாட்டை ரசிக்கலாம்.
படத்தில் வரும் எந்தப் பாத்திரமும் தேவையில்லாமல் இல்லை. அத்தனைப் பாத்திரங்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்கிறது.
சுரேஷ்பாலாவின் ஒளிப்பதிவும், விஷால் சந்திரசேகரின் இசையும் இணைந்து ஒரு த்ரில்லருக்கான சாத்திய நேர்த்தியை உயர்த்தியிருக்கின்றன. பாடல்களும் கதைக்குப் பொருத்தமாக இருப்பதுடன் ரசிக்கவும் வைக்கின்றன. அதிலும் ‘சுப்ரமணிய பாரதியார்’ பாடல் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
படத்துக்குள் பாலியல் வக்கிரங்களை திணிக்க வாய்ப்பிருந்தும் அவற்றை அண்ட விடாமல் கதையை விறுவிறுப்புடன் நகர்த்தியிருக்கும் இயக்குநரின் திறன் ரசித்துப் பாராட்ட வைக்கிறது.
படம் தொடங்கி கொஞ்சம் நேரம் பொறுமையாக நகர்வதால் நம்மை இரண்டரை மணிநேரம் சோதித்து விடுவார்களோ என்று நினைக்க வைப்பது மட்டுமே படத்தின் குறை. ஆனால், ஒரு மணிநேரத்துக்குள் மெல்ல நம்மைக் கதையுடன் ஒன்ற வைத்து கடைசியில் அருமையாக முடித்திருக்கிறார் இயக்குநர்.
இது ஆணுக்கான படமா, பெண்ணுக்கான படமா என்றால் இருவருக்கும்தான். முக்கியமாக கணவனும், மனைவியும் ஒன்றாக அமர்ந்து பார்க்க வேண்டிய உளவியல் முயற்சி. ஆக, குடும்பங்கள் பார்த்துக் கொண்டாட வேண்டிய படம்.
காளிதாஸ் – ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒரு சந்திரமுகி..!