April 27, 2024
  • April 27, 2024
Breaking News
November 11, 2023

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்பட விமர்சனம்

By 0 168 Views

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்களிலேயே ஜிகர்தண்டா ஒரு தனி ரகம். எது மாதிரியும் இல்லாத அந்தப் புது மாதிரியான படம் தந்த வெற்றியில் இப்போது அதன் இரண்டாவது பாகமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தைத் தந்திருக்கிறார்.

எழுபதுகளில் நடக்கும் கதைக்களம். ஒரு பக்கம் காட்டுக்குள் யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை கடத்தும் பயங்கரவாதியைப் பிடிக்க முடியாமல் போலிஸ் திணறிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் சுத்த தொடை நடுங்கியான எஸ் ஜே சூர்யா சபஇன்ஸ்பெக்டர் ஆகும் ஆசையில் தேர்வு எல்லாம் எழுதிவிட்டு சம்பந்தமில்லாமல் ஒரு கொலைக் கேசில் சிக்குகிறார்.

மூன்றாவது பக்கம் தமிழகத்தை ஆளும் பெண் முதலமைச்சர் மத்தியில் பிரதமராகும் ஆசை வைத்து காய் நகர்த்த, அடுத்த முதல்வர் பதவிக்கு நடிகராக இருக்கும் நடிகர் ஷைன் டாம் சாக்கோவும், ராஜதந்திரியான இளவரசவும் போட்டியிடுகிறார்கள்.

ஷைன் டாம் சாக்கோவின் புகழை சரிக்க மதுரையில் இருக்கும் தாதா ராகவா லாரன்ஸ் இளவரசுக்கு உதவி செய்கிறார். எனவே ராகவா லாரன்ஸை கொல்ல ஷைன் டாம் சாக்கோ சதித் திட்டம் தீட்டி அதற்கு எஸ்.ஜே. சூர்யாவை அனுப்புகிறார்கள். அதை முடித்தால் அவர் மேலுள்ள பழி துடைக்கப்பட்டு அவர் போலீஸ் வேலையில் சேர முடியும்.

அதற்குத் தோதாக ராகவா லாரன்ஸுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வர அதற்கு ஒரு நல்ல இயக்குனரை தேடிக் கொண்டிருக்கிறார். அந்த இடத்துக்கு எஸ்.ஜே.சூர்யா வந்து அவரைப் போட்டுத் தள்ள திட்டமிடுகிறார்.

இதெல்லாம் என்னென்ன விதமாக முடிவுக்கு வந்தன என்பது கிளைமாக்ஸ்.

இந்த எல்லா முடிச்சுகளையும் ஒன்றோடு ஒன்று சிக்கவிட்டு இரண்டே முக்கால் மணி நேரம் ஒரு ஜாலி ரைடு நடத்தி கடைசியில் சமுதாய நோக்குடன் ஒரு கருத்தைச் சொல்லி… அதுவும் போதாதென்று சினிமாவின் சக்தி என்ன என்று சொல்லி படத்தை முடிக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

ராகவேந்திரா லாரன்ஸ் இதுவரை நடித்த படங்களிலேயே இதில்தான் சிறப்பான வேடம் ஏற்றிருக்கிறார் என்று சொல்லலாம். லோக்கல் தாதாவாக இருக்கும் அவர் ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான கிளின்ட் ஈஸ்ட்வுட் மீதுள்ள பற்றால் ஒரு தியேட்டர் கட்டி அவர் படத்தை மட்டுமே ஓட்டி அதில் வைத்து அவரது எதிரிகளுக்கு தண்டனை கொடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பது புதிய விஷயம் தான்.

இந்தப் படத்தின் மூலம் வரிசையாக ஹேட்ரிக் அடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவருக்காகவே இயக்குனர்கள் அவரது பாத்திரத்தை மெருகேற்றி நடிக்க வைத்து விடுகிறார்கள் அவரும் அதைத் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி அதைகளப்படுத்தி விடுகிறார்.

சொல்லப் போனால் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவா அல்லது எஸ் ஜே சூர்யா ஹீரோவா என்று ஒரு பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு இருவருக்கும் சரிசமமான வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார் கா.சு.

கிளைமாக்ஸ் காட்சியை முடிப்பது எஸ் ஜே சூர்யாதான் என்றாலும் அதற்கு முன்பே முடிந்து போகும் ராகவா லாரன்ஸின் பாத்திரம் நம் மனதில் தனியிடம் பிடித்து விடுகிறது.

மக்கள் அபிமானம் பெற்ற சூப்பர் ஸ்டாராக வரும் ஷைன் டான் சாக்கோ பாத்திரம் ரசனையுடன் படைக்கப்பட்டுள்ளது. அவரும் அதைப் புரிந்து கொண்டு நன்றாக நடித்திருக்கிறார்.

அவருக்கு எதிரியாக வரும் இளவரசவும், தன் அனுபவ நடிப்பால் கவர்கிறார். கடைசியில் அவர் சாக்கோவுக்கு வைக்கும் ஆப்பு அட்டகாசம்.

ராங்கி பிடித்த அந்த அடாவடி முதல்வர் வேடம் யாரையோ நினைவு படுத்தினாலும் எழுபதுகளில் அப்படி ஒரு அராஜக பெண் முதல்வர் தமிழகத்தில் இல்லை என்பதால் யூகம் பொய்த்துப் போகிறது.

ராகவா லாரன்ஸ் மனைவியாக வரும் நிமிஷா சஜயன் தன் வித்தியாச நடிப்பைக் காட்டி கடைசியில் நெகிழ வைக்கிறார்.

ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டுக்கு தமிழகத்தில் வைத்து ஒரு கதையும் சொல்லி அதை ராகவா லாரன்ஸ் பாத்திரத்துடன் இணைத்து அவரையும் ஒரு கேரக்டர் ஆக்கி இருப்பது தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புது ஐட்டம்.

அதனாலேயே கிளின்ட் ஈஸ்ட்வுட்டுக்கு நன்றி தெரிவித்து ஒரு டைட்டில் கார்டு போடுகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

திருவின் ஒளிப்பதிவு அபாரம். இதற்கென்று தனி டோன் வைத்து வேறு ஒரு காட்சி அனுபவத்தைக் கொடுக்கிறார் அவர். 

தன்னிகரில்லா தன் பாணியில் இசையமைத்து புதிய அனுபவத்தைத் தருகிறார் சந்தோஷ் நாராயணன்.

படத்தின் மிகப்பெரிய பலவீனம் இன்னும் ஒரு அரை மணி நேரம் கத்தரித்து இருந்தால் சூப்பர் டூப்பர் படமாக கொண்டாடப்பட்டு இருக்கும் இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிதான் என்கிற தன்னம்பிக்கையில் மூன்றாவது பாகமாக ட்ரிபிள் எக்ஸ் வரவிருப்பதாக படத்தை முடிக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

ஆனால் அதையும் மூன்று மணி நேரத்துக்கு இழுத்து விடாதீர்கள் கார்த்திக்..!

தீபாவளிக்கான டபுள் வெடி இந்த டபுள் எக்ஸ்..!