நடிகர் நிதின் சத்யா, வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தாலும் சினிமா அவரை சென்னையோடு கட்டிப் போட்டு விட்டது. நடிகராகத் தெரிந்த அடையாளம் போதுமென்று நினைத்தாரோ என்னவோ, படா படா ஹீரோக்களே கைவைக்கத் தயங்கும் தயாரிப்புத் துறையில் இறங்கிவிட்டார்.
அவர் தயாரித்து முடித்திருக்கும் படம், ‘ஜருகண்டி’. இந்தியா முழுக்கத் திருப்பதி போனவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்த ஒரு சொல்லாக இருக்கவே ‘சீக்கிரம் போங்க’ என்று பொருள்படும் தெலுங்குச் சொல்லையே ‘நேஷனல் லாங்குவேஜ்’ ஆக நினைத்துத் தலைப்பில் வைத்துவிட்டார்.
யூனிட் முழுக்க அவர் பழகிய ஆட்களே நிரம்பி வழிகிறார்கள். அவரது நண்பரும், பேவரிட் இயக்குநருமான வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த ‘பிச்சுமணி’ சொன்ன கதை தியேட்டரில் பிச்சு உதறும் என்று கணித்து 42 நாள் ஷெட்யூலில் ‘பேக் அப்’ சொல்லி பக்காவாக முடித்துவிட்டார் – அதுவும் பிரச்சினை தருபவராகக் கோலிவுட்டில் கருதப்படும் ஹீரோ ‘ஜெய்’யை வைத்து.
‘ஜருகண்டி’ டிரைலரை சூர்யாவை வைத்து வெளியிட நிதின் சத்யா சொன்ன காரணம். “யாருமே டிரைலரைக் காட்டினால் ‘வெளியிடுகிறேன் அல்லது மாட்டேன்…’ என்பார்கள். ஆனால், சூர்யா மட்டும் பார்த்துவிட்டு இரண்டு கரெக்ஷன்கள் சொன்னார். அவை இரண்டுமே சரியாகவும் இருந்தது. அதைச் சரி செய்து அவரையே விட்டு வெளியிட முடிவு செய்தேன்..!” என்கிறார் நிதின்.
ஹீரோவாக மட்டுமல்லாமல் ஒரு நண்பனாகவும் படத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஜெய், படத்துக்கு இசையமைத்திருக்கும் போபோ சஷி தன் சகோதரர் என்பதால் அவருடன் உட்கார்ந்து இசையமைப்பு வேலைகளிலும் மெனக்கெட்டிருக்கிறார்.
“சீக்கிரமே ரிலீஸுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன..!” என்கிறார் நிதின் தன்னம்பிக்கையுடன். “ஜருகண்டி… ஜருகண்டி…” என்று தியேட்டர்களில் கூட்டமும் முண்டியடிக்கட்டும்..!