April 29, 2024
  • April 29, 2024
Breaking News
August 12, 2023

ஜெயிலர் திரைப்பட விமர்சனம்

By 0 236 Views

ஒரு காலத்தில் நம் ஹீரோக்கள் எல்லாம் தன் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழி தீர்த்துக் கொண்டிருந்தார்கள். இது ஹீரோக்களின் (வயதான) சீசன் 2 என்பதால் மகன்களைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க அதே ஹீரோக்கள் புறப்பட்டருக்கிறார்கள்.

இதிலும் ரஜினி அப்படி நேர்மையாக வளர்த்த தன் பிள்ளையை அந்த நேர்மைக்காகவே பறிகொடுக்க நேர, அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து பழி தீர்க்கும் கதைதான்.

இந்தக் கதை எல்லாம் தேவையே இல்லை – ரஜினி ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு தனி பிராண்ட் வேல்யூ கிடைத்து விடுகிறது. அதற்குப் பின்னர்தான் கதை, கத்தரிக்காய், கடாரங்காய் எல்லாம்.

அப்படிப் பேரன் எடுத்த ஒரு தாத்தாவின் வேடத்திலேயே வருகிறார் ரஜினி. என்றாலும் அவரது வேகத்துக்கோ சுறுசுறுப்புக்கோ ஆற்றலுக்கோ குறை வைக்காமல் ஒரு திரைக் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

வழக்கமான அதிரி புதிரி அதிரடி சரவெடி ஓப்பனிங் எல்லாம் வைக்காமல், பூஜை அறையில் தியானம் செய்து கொண்டிருக்கும் ரஜினியை அறிமுகப்படுத்தும் போது இதில் சற்று வித்தியாசமான ரஜினியைக் காட்டப் போகிறார் நெல்சன் என்பது விளங்கி விடுகிறது.

தன் மகன் வசந்த் ரவியை ஒரு போலீஸ் அதிகாரியாக்கி விட்டு அவரது நேர்மையை மெச்சிக் கொண்டும், பேரனுடன் அவன் நடத்தும் youtube சேனலுக்கான உதவிகளை செய்து கொண்டிருக்கும் ஒரு தாத்தாவாகத்தான் ரஜினி அறிமுகமாகிறார்.

ரிடையர்ட் ஆன ஒருவருக்கு வீட்டில் என்ன மரியாதை கிடைக்குமோ அதுதான் அவர்களுக்கும் கிடைக்கிறது. ஆசைப்பட்ட டிபன் கிடைக்காமல்… கிடைத்த டிபனை வைத்த ஆறுதல் பட்டுக் கொள்ளும் அந்த வேடத்தில் அற்புதமாக தன்னை வெளிக்காட்டி இருக்கிறார் ரஜினி.

இந்தப்பக்கம் சிலை கடத்தல் கும்பல் ஒன்றைப் பிடிப்பதற்காக பெரு முயற்ச்சி செய்து வரும் வசந்த் ரவி, வைக்க கூடாத இடங்களில் எல்லாம் கை வைக்கப் போக, அவர் கண்ட்ரோலில் இன்ஸ்பெக்டராக இருக்கும் பெண், ரஜினியிடம் வந்து அந்த விஷயத்தை புகார் செய்கிறார்.

‘என் மகன் தப்பா நடந்தா அதை கம்ப்ளைன்டா எடுத்துக்கலாம். ஆனால் அவன் நேர்மையா நடந்துக்கிறான்கிறது எப்படி கம்ப்ளைன்ட் ஆகும்..?” என்று பதில் சொல்லி அனுப்பி விடுகிறார் ரஜினி. அதுதான் அவரது கேரக்டர்.

அப்படிப்பட்ட நேர்மையான பிள்ளை வசந்த் ரவியை அந்த சிலை கடத்தல் கும்பல் கொன்றுவிட்டதாக செய்தி வர, அந்தக் கும்பலைத் தேடி கண்டுபிடித்துக் களை எடுக்க ரஜினி எடுக்கும் ஆக்சன் அவதாரம்தான் மீதி முக்கால்வாசிப் படமும்.

இந்தப் படத்தில் ரஜினி பெரிதாக சண்டை எல்லாம் போடவில்லை. அவரை உட்காரவும் நடக்கவும் வைத்து மட்டுமே எடுத்திருக்கும் நெல்சன் அவர் எடுத்த ஆக்சன் எவ்வளவு வன்மையாக இருக்கிறது என்பதை மட்டும் காட்சிகளினூடே நமக்கு விளக்கியிருக்கிறார்.

இருந்தும் கையில் கொடுவாளை எடுத்து சதிகாரனின் காது, தலை என்று சரக்கு சரக்கு என்று அறுத்துத் தள்ளும் ரஜினியின் வேகம் இன்னும் பல வருடங்களாக அப்படியேதான் இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் என்ற தகுதிக்கு இருக்கிற தகுதியே அவர் எந்த நேரத்திலும் காமெடி செய்ய முடியும் – எந்த நேரத்திலும் சீரியஸ் ஆகிவிட முடியும். 

அப்படித்தான் இதில் யோகி பாபுவுடன் சேர்ந்து கொண்டு காமெடி அலப்பறை செய்து கொண்டிருக்கும் ரஜினி ஆக்ஷன் பாதைக்குத் தாவிய பின்னரும் கூட பல இடங்களில் நம்மை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினியின் மகனாக நடிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் வசந்த் ரவிக்கு. சில காட்சிகளே வந்துவிட்ட அவர் இறந்து போகிறார் எனும் போது ஏற்படும் ஏமாற்றம் பின் பாதியில் வேறு விதமாக சரி செய்யப்படுகிறது.

ரஜினிக்கு ஜோடியாக இதில் ரம்யா கிருஷ்ணன் அமைதியான குடும்பத் தலைவியாக வருகிறார். மருமகளாக மெர்னாவும், பேரனாக குட்டி பையன் அஸ்வத்தும் வருகிறார்கள்.

பிரதான வில்லன் பாத்திரத்தில் வரும் விநாயகன்தான் பட ஓப்பனிங்கிலேயே நமக்கு அறிமுகம் செய்யப்படுகிறார். என்ன ஒரு அசாத்தியமான வில்லன் நடிப்பு விநாயகனிடத்தில்..? “என் கூட இத்தனை வருஷம் இருந்து, என்னை பத்தி நல்லா தெரிஞ்சும் என்ன கருணை காட்ட சொல்றியே..?” என்று உடனிருந்த துரோகியை சுத்தியலால் அடித்துக் கொள்ளும் அவரது பாத்திரப்படைப்பு பயங்கரம்.

இந்தியாவெங்கும் இருக்கும் குட்டி தாதாக்களாக கன்னடத்து சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஹிந்தி வில்லன் ஜாக்கி ஷராஃப் போன்றோர் அங்கங்கே வந்து உற்சாகம் ஏற்படுத்துகிறார்கள்.

ஆனால் அவர்கள் எல்லோருமே திகார் ஜெயிலில் ஜெயிலராக இருந்த ரஜினியின் காவலில் இருந்த குற்றவாளிகளாக இருந்து… இப்போதும் சதி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களாக இருப்பததான் இடிக்கிறது

“சட்டத்தை மதிக்கிறவனுக்குதான் சட்டம் – அதை மதிக்காதவனுக்கு அது இல்லை” என்கிற சித்தாந்தத்தை வைத்துக்கொண்டு இந்தக் குட்டி தாதாக்களின் உதவியோடு தன் மிஷனை ரஜினி எப்படி முடிக்கிறார் என்பதைப் பரபரப்பாக சொல்லி முடித்திருக்கிறார் நெல்சன்.

படம் முழுவதும் நெல்சன் பிராண்ட் நகைச்சுவை இரைந்து கிடக்கிறது அதுவும் சீரியஸாகப் போகும் இரண்டாம் பாதியில் கூட தெலுங்கு சுநிலையும், சுனில் ரெட்டியையும் வைத்துக்கொண்டு ஒரு கூத்தடிக்கிறார். அந்தக் கூத்தில் தமன்னாவுக்கும் பங்கு உண்டு.

டைகர் முத்துவேல் பாண்டியன் ஆக ரஜினி பிளாஷ்பேக் விரியும் அந்த பத்து நிமிட எபிசோட் பரபரப்பானது. அந்த பத்து நிமிடத்தில் ரஜினியின் நிஜ முகம் எப்படிப்பட்டது என்பதை சொல்லிவிடுகிறார் இயக்குனர்.

ஆனால் அவருடன் வாழ்க்கைப்பட்டு 40 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு அவருக்கு அப்படி ஒரு சிங்க முகம் இருப்பது தெரியவே தெரியாது என்பது போல் அமைக்கப்பட்ட திரைக்கதை லாஜிக்குடன் இல்லை.

அதேபோல் அத்தனை கொடூரங்களையும் புரியும் விநாயகர் அவராவது சந்தோஷமாக இருந்தாரா என்றால் இல்லை. ஒரு துணியை தரையில் விரித்துக் கொண்டு படுத்துத் தூங்கும் அவர் என்ன காரணத்துக்காக இவ்வளவு கோடிகள் புழங்கும் இந்தத் தொழிலில் உயிர் உத்தரவாதம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லை.

அடுத்தவர்களை கொல்கிற அத்தனை பேரும் அயோக்கியர்கள்தான் என்று இருக்க ரஜினிக்கு உதவுவதால் மட்டும் ஜாக்கி ஷரஃப், மோகன்லால், சிவராஜ்குமார் போன்றோர் நல்ல (!) தாதாக்கள் போல் சித்தரிக்கப்பட்டு இருப்பதில் எந்த நியாயமும் இல்லை.

மின்னல் அடித்தாற்போன்ற ஒளிப்பதிவும், இடி இடித்ததைப் போன்ற பின்னணி இசையும் மாஸாக இருக்கிறது. இப்போதெல்லாம் அனிருத் பின்னணி இசையில் ரொம்பவே தேறி விட்டார்.

இருக்கிற ஒரே உற்சாக பாடலான காவாலையா பாடலை துண்டு துண்டாக்கி இருப்பதே ரசிக்க முடியவில்லை.

ஆனாலும் வித்தியாசமான ரஜினியைக் காட்டிய முன்பாதியும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ரஜினியைக் காட்டிய பின்பாதியும் அலுப்பில்லாமல் படத்தை நகர்த்த உதவுகிறது.

அந்த வகையில் இந்த ஜெயிலர் ரஜினி ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான ஒரு படமாகவும், இயல்பான ரசிகர்களுக்கு ஜாலியான பொழுதுபோக்குப் படமாகவும் அமைந்ததில் வியப்பில்லை.

என்ன… கொஞ்சம் கொடூரம் அதிகமாகவே இருக்கிறது. ரஜினியே ஓர் இடத்தில் இயக்குனர் சுனில் ரெட்டிடம் “குடும்பத்தோடு பார்க்கக்கூடிய நல்ல படமா எடுங்க…” என்ற அட்வைஸை நெல்சனும் பின்பற்றி இருக்கலாம்.

சுத்தியலால் மண்டையை சுக்கு நூறாக்கும் விநாயகன் , விளையாட்டு மட்டையால் மண்டையைப் பிளக்கும் மோகன் லால், வாளால் கழுத்தை சீவி தள்ளும் ரஜினி என்று படம் முழுவதும் ரத்தக்களரியாக இருப்பதை குடும்பத்துடன் பார்க்கும் போது கொஞ்சம் பதட்டமாகதான் இருக்கிறது.

இருந்தாலும் பரபரப்புக்கு குறைவில்லாத படத்தை தந்ததற்காகவும், நீதியுடன் படத்தை முடித்ததற்காகவும் நெல்சனுக்கு நேர்மையான இந்தியன் என்ற பட்டத்துடன் தங்கப்பதக்கமும் தரலாம்.