November 22, 2024
  • November 22, 2024
Breaking News
August 2, 2019

ஜாக்பாட் திரைப்பட விமர்சனம்

By 0 1233 Views

ஜோதிகா முக்கிய வேடமேற்றாலே பெண்ணுரிமைக்காகவும், கல்விக்காகவும் போராடுகிற வேடமாகத்தான் அது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது நிஜம்தான்.

ஆனால், ‘நாங்களும் ஹீரோதான்…” பாணியில் ஒரு கமர்ஷியல் ஆக்‌ஷன் ஹீரோ என்னென்ன சாகசங்கள் புரிவாரோ அப்படியெல்லாம் ஒரு ஹீரோயினாக இருந்து ஹாலிடே மூடில் ஜோ நடித்துக் கொடுத்திருக்கும் படம்தான் இந்த ஜாக்பாட்.

ஹீரோவின் படம் போலவே அதிகாலை 5.30 மணி ப்ரீமியர் காட்சியெல்லாம் தியேட்டரில் வைத்து கலக்கி விட்டார்கள்.

கமர்ஷியல் படம் என்ற ஒற்றைவரி செய்தி போதும்… ‘கதையாவது பிரிஞ்சாலாவது…’ என்று இயக்குநர் கல்யாண் லாஜிக்கையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு என்ன கதை சொன்னரோ அதில் ஏன், எதற்கு எப்படி என்றெல்லாம் எந்தக் கேள்வியும் கேட்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் ஜோ.

சுயநலம் மிக்க இந்த உலகில் ஏமாற்றிப் பிழைத்தால் தப்பில்லை என்ற தாரக மந்திரத்துடன் அறிமுகமாகும் ஜோவின் பாத்திரம் இதுவரை நாம் திரையில் பார்க்காததுதான். மேலோட்டமாகப் பார்த்தால் சமுதாயத்துக்கு உதவி செய்கிற மாதிரி செய்துவிட்டு பின்னால் ஆட்டையைப் போடுகிற கேரக்டர்.

Jackpot Review

Jackpot Review

இன்னொரு பக்கம் இதே பாணியில் ரேவதி ஒருபக்கம் லந்து பண்ணிக் கொண்டிருக்க, ஒரு சில காட்சிகளில் இருவரும் ‘ஒரே குட்டை ஒரே மட்டை’யாக இருக்கிறார்கள்.

ஒரு ஜக்கு கிடைக்கும் என்றாலே ஜகத்தை விற்றுவிடும் திறமை படைத்த இருவரிடமும் ஒரு ‘ஜாக்பாட்’ கிடைத்தால் விட்டுவிடுவார்களா..? ஒரு அடிதடி வழக்கில், சிறைக்குப் போன இருவரிடம் அங்கே கைதியாக இருக்கும் சச்சு, அப்படி ஒரு ‘அட்சய பாத்திரம்’ பற்றிய துப்பு கொடுக்கிறார்.

அள்ள அள்ளக் குறையாத செல்வம் வழங்கும் அந்த பாத்திரம் ஏற்கனவே இவர்கள் இருவரும் ஆட்டையைப் போட்டு அவமானப்படுத்திய ஆனந்தராஜ் வீட்டில் இருக்க, அதை இருவரும் அடைந்தார்களா என்பதுதான் மொத்தக் கதை.

பிரேமுக்கு பிரேம் ஜோ வந்தாலும் அலுக்கவில்லை. அவருக்காகவே எழுதப்பட்ட கதையானதால் ஓபனிங் சாங், சண்டைக் காட்சிகள் என்று அமர்க்களப்படுத்தியதில் நடனம், சண்டை என்று அதகளம் புரிந்திருக்கிறார் ஜோ. ஒரு நாய்க்குட்டிதான் ஜோவாக மாறிவிட்டதாக யோகிபாபுவிடம் ரேவதி அடித்துவிட, நாய்க்குட்டி மேனரிஸங்களில் கூட கொள்ளை ‘லொள்ளு’கிறார் ஜோ.

அவருக்கு இந்த வயதில் ஈடு கொடுத்தாலும் ரேவதியைப் பார்த்தால் கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கிறது – ‘மொட்ட’ ராஜேந்திரன் அவரை ஒருதலையாகக் காதலிக்கிறார் என்பதில். கமல், ரஜினி, கார்த்திக், மோகன் எல்லாம் படங்களில் காதலித்த ரேவதியை இன்று ‘மொட்ட’ ராஜேந்திரன் காதலிப்பதை காமெடியாகவே ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்னொரு பக்கம் யோகிபாபு எப்படி உருவானார் (?) என்ற ஹிஸ்டரி. நம்பகமில்லாத கதை என்றாலும் யோகிபாபு படத்துக்குள் வந்துவிட்டபின் காமெடி சூடு பிடிக்கிறது. இயல்பான முகத்தை இழந்து யோகிபாபு ஆகிவிடும் அவர் கடைசியில் சினிமாவில் நடித்து செல்வந்தராவது தனி டிராக்.

காமெடிக்கென்று யோகிபாபு, ‘மொட்ட’ ராஜேந்திரன், ‘கோலமாவு கோகிலா’ கிங்ஸ்லி, மனோபாலா, தங்கதுரை, ஜெகன், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, கும்கி அஸ்வின், தேவதர்ஷினி என்று நடிகர்கள் வரிசைக் கட்டினாலும் அவர்களை பின்னுக்குத் தள்ளி விடுகிறார் இரட்டை வேடமேற்றிருக்கும் ஆனந்தராஜ். இரண்டாவது வேடம் பெண் வேடம் என்பது ஆனாலும் லந்து.

‘தாதா’வாக இருக்கும் ஆனந்தராஜின் அக்கா பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருவது ‘டெரர்’ கற்பனை. அதிலும் அவர் கன்னி கழியாத கட்டழகி என்பது இன்னும் குறும்பு. பெண் வேடத்திலும் பின்னிப் பெடலெடுக்கிறார். கடைசியில் அவர் யாருக்கு ஜோடியாகிறார் என்பது எதிர்பாராத காமெடி.

Jackpot Review

Jackpot Review

ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவு அள்ளுகிறது. கடைசியில் வரும் மழை மற்றும் ஆற்றின் காட்சிகள் மலைப்பாக இருக்கிறது. வெல்டன்..! விஷால் சந்திரசேகரின் இசையில் ‘ஷீரோ’ பாடலும், பின்னணி இசையும் மிரட்டல். படம் முடிந்தும் ஆர்ஆர் காதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.

அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம், குடுகுடுப்பைக்காரனின் மந்திரம் என்றெல்லாம் வரும் ‘மேஜிக்கல் சரடு’ ஐடியாக்களை நம்புகிற விதத்தில் மாற்றியிருக்கலாம். அந்த மாதிரிக் காட்சிகள் மட்டுமே இடிக்கின்றன.

ஜாக்பாட் – ‘ஜோ’வின் அதகளம் நிறைந்திருப்பதால் ‘ஜோ’க்பாட் என்பதே சரி..!