படத்துக்குப் படம் கத்தி, சுத்தி, துப்பாக்கி, பீரங்கி, ரத்தம் என்று சுத்திச் சுத்தி அடித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இது போன்று எப்போதோ அபூர்வமான குடும்ப நலன் பேசக்கூடிய படங்கள் வருகின்றன – அதை முதலில் வரவேற்க வேண்டும்.
இதுபோன்று ஆரோக்கியமான படங்களைத் தருவதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோசும், அதே பொட்டன்ஷியலுடன் நல்ல படங்களை மட்டுமே எடுப்பேன் என்கிற அளவில் நேர்த்தியான கதைகளை எழுதி இயக்கிக் கொண்டிருக்கும் யுவராஜ் தயாளனும் சேர்ந்திருப்பதால் இந்தப் படத்துக்கு சற்று எதிர்பார்ப்பு கூடுதலாகவே இருக்கிறது.
கதைக்கேற்ற நாயகர்களாக விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ நடித்திருக்க, அவர்களது இணையர்களாக முறையே ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன் நடித்திருக்கிறார்கள்.
புதிதாக மணமான இந்த மூன்று ஜோடிகளுக்குள் இயல்பாகவே ஏற்படும் உளவியல் சிக்கல்கள்தான் படத்தின் கருப்பொருள்.
விக்ரம் பிரபு ஹீரோவாக இருந்தாலும் அவர் மனைவியாக வரும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தான் படத்தை முழுவதும் தாங்கிச் செல்கிறார். அவரே படத்தைத் தொடங்கியும் வைக்கிறார்.
சைக்காலஜிஸ்ட் எனப்படும் உளவியல் ஆலோசகராக வரும் அவர், மணமான தம்பதி களுக்குள் வரும் பிணக்குகளை அழகாகத் தீர்ப்பவராக இருக்கிறார். இந்த லாவகம் கை வரப்பட்டிருப்பதாலேயே தன் கணவர் விக்ரம் பிரபுவையும் மீட்டருக்கு மிகாமல் வைத்திருக்கிறார்.
அங்கங்கே விக்ரம் பிரபு எல்லை மீறும்போது அவரை எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருப்பதால் அவர்களுக்குள் வருடக்கணக்காக எந்தப் பிணக்கும் ஏற்படாமல் வாழ்க்கை வண்டி தடம் மாறாமல் சென்று கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் ஒரு குழந்தைக்குத் தந்தையாக இருக்கும் விதாரத்துக்குத் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் விருப்பப்படி வாழ முடியாத சூழல் அமைந்திருக்க, அதை முழுதும் மனைவி மேல் ஏற்றி வைத்து விவாகரத்தை நோக்கி பயணிக்கிறார். அதற்கு அவர் வைத்திருக்கும் காரணம் ‘மனைவி குண்டாக இருப்பது’.
மூன்றாவதாக… காதலித்து மணந்த தம்பதியர் ஸ்ரீ மற்றும் சானியா ஐயப்பனுக்குள் முறையான புரிதல் இல்லாமல் நாளொரு சண்டையும், பொழுதொரு அழுகையுமாக போய்க்கொண்டிருக்கிறது.
கடைசி இரண்டு தம்பதிகளுமே மேற்படி உளவியல் ஆலோசகர் ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் ஆலோசனைக்கு வர, அவர் என்ன விதமான ஆலோசனைகள் கொடுத்தார், அவை அவர்களுக்குக் கை கொடுத்ததா, பிரச்சினை இல்லாத ஸ்ரத்தா – விக்ரம் பிரபு வாழ்க்கை அவர்கள் கைக்குள் இருந்ததா என்பதை எல்லாம் அலசிப் பிழிந்து காயப்போட்டிருக்கும் படம் இது.
மூன்று நாயகர்களில் ஒருவராக நடிக்க ஒத்துக் கொண்ட விக்ரம் பிரபுவின் தைரியம் பாராட்டத்தக்கது. அதிலும் தன்னுடைய கோபத்தைக் கூட வெளிக்காட்ட முடியாத ஒரு ஆண்மகனாக படம் முழுவதும் வந்திருக்கும் அவரைப் பாராட்டலாம்.
தன் ஆற்றாமையைக் கூட காட்ட முடியாமல் மனைவியிடம் பொங்கும் காட்சியில் விக்ரம் பிரபுவிடம் நடிப்பின் மரபணுக்கள் நன்றாகவே வேலை செய்திருக்கின்றன.
பெயருக்கு ஏற்றாற்போல் தன்னுடைய பாத்திரத்தை சிரத்தையுடன் உள்வாங்கி அற்புதமாகப் பயணித்திருக்கிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். தன்னிடம் வருபவர்களை ‘கேஸ்’ களாகப் பார்க்காமல் உணர்வு பூர்வமான மனிதர்களாகப் பார்த்து அவர்களைப் புன்னகையுடன் கையாளும் அவரது பாத்திரமும், நடிப்பும் நன்று.
அதேபோல் கணவன் எங்கே தனக்கு முரண்பட்டு விடுவானோ என்று அவர் பதறும்போதும், மருகும் போதும் உளவியலை மிஞ்சிய ஒரு சராசரிப் பெண்ணின் மனத் துடிப்பை ஆழமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
தன் இயலாமையைக் கோபமாகப் பாவிப்பதும் அடுத்தவர் மீது காட்டுவதுமாக வரும் விதார்த் பாத்திரம், நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு மனிதரைப் பார்ப்பது போலவே இருக்கிறது. உளவியல் ஆலோசனைக்கு வரச் சொன்னால் “நான் என்ன பைத்தியக்காரனா.?” என்று அவர் இரைந்து கோபமடைவதும், அதே ஆலோசகரிடம் உடைந்து தன் கவலைகளை வெளிப்படுத்துவதுமாக அற்புதமாக நடித்திருக்கிறார் விதார்த்.
ஒரு துணைப் பாத்திரத்திடம் அடி வாங்கி நடிப்பதுவும் கூட விதார்த்தின் எதார்த்த நடிப்புக்குச் சான்று.
அவரது மனைவியாக வரும் அபர்ணதிக்கும் இது அவரது நடிப்பில் ஒரு கிலோ மீட்டர் கல்லான பாத்திரம்.
பாத்திரத்துக்கு ஏற்றவாறு உடல் எடையைக் கூட்டுவதும் குறைப்பதும் ஹீரோக்களுக்கே ஒரு பெரும் சவாலாக இருக்க, இந்தப் படத்துக்காகத் தன் எடையை ஏற்றி குண்டாகத் தெரிவதும், பின்னர் அதை இறக்கி ஸ்லிம்மாக வருவதுமாக கமல், விக்ரம், சூர்யா வரிசையில் இடம் பிடித்து விடும் அபர்ணதிக்கு மறு பெயர் அர்ப்பணிப்பு.
காதலிக்கும் போது தன் காதலி தேவதையாகத் தெரிவதும் கல்யாணமான பின் அவள் தன் சொல் கேட்பவளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆணாதிக்க மனப்பான்மையுடன் வரும் ஸ்ரீயும் தன் பாத்திரத்தில் அருமையாகப் புதைந்து தெரிகிறார்.
அழகுப் பதுமை சானியா ஐயப்பனை அழுகாச்சிப் பெண்ணாகக் காட்டியிருக்கும் இயக்குனருக்கு நம் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.
தன் பங்கில் முக்கால்வாசிப் பகுதியில் சானியா அழுது கொண்டே வருகிறார். எஞ்சிய அவரது சந்தோஷக் காட்சிகள் மட்டுமே அவருக்கும், நமக்கும் ஆறுதல். ஆனால் அப்படி ஒரு அழுத்தமான நடிப்பை அவரிடம் வாங்கியதற்காக இயக்குனரைத் தனியே அழைத்துப் பாராட்டலாம்.
சானியாவின் காஸ்ட்யூமருக்கு தனியே ஒரு பொக்கே பார்சல்..!
உளவியல் சார்ந்த இந்தக் கதையை அதற்கே உரிய ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் ஸ்கிரிப்டாக வடிவமைப்பது ஆகப்பெரிய சவால்தான். அந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குனர் யுவராஜ் தயாளன்.
ஒவ்வொரு நடிகர், நடிகையிடமும் அவரவர் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடிப்பைத் திறமையாக வாங்கி இருக்கும் அவர், இந்தக் கதையை சற்றே இழுத்தவாறு சொல்லி இருப்பது படத்தின் வேகத்தை சற்று கட்டுப்படுத்துகிறது.
இன்றைய இளம் இயக்குனர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கும் ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், இந்தப் படத்தில் சம்பவங்களை அழகியலுடன் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
“நானும் இங்கே இருக்கிறேன் என்னை கவனியுங்கள்..!” என்று இல்லாது, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்தின் உணர்வுக்கு ஏற்றவாறு அடக்கி வாசித்திருப்பதே அழகான இசையைத் தந்திருக்கிறது.
பாடல்கள் மெலடியாக இருந்தாலும், படத்தின் ஓட்டத்துக்குத் தடையாக இருக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தன் தவறை உணர்ந்து பாத்ரூமுக்கு சென்று உடைந்து அழும் ஶ்ரீயிடம் மனோபாலா சென்று சமாதானப்படுத்தும் காட்சி ஹைலைட் – தியேட்டரே குதூகலிக்கிறது.
திருமணம் ஆனவர்களோ, ஆகப்போகிறவர்களோ, திருமணம் ஆகி பல வருடங்கள் வாழ்ந்தவர்களோ… குடும்பத்தோடு இந்தப் படத்தை ஒரு தரம் சென்று பார்த்தால் தங்களுக்குள் இருக்கும் மண அல்லது மனப் பிரச்சனைகளைத் தாங்களே சரி செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில் தவிர்க்காமல் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய குடும்ப படம் என்றால் இந்தப் படத்தை நிச்சயமாக சிபாரிசு செய்யலாம்.
இறுகப் பற்று – (குடும்பப்) பற்று வரவுள்ள படைப்பு..!