படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு விழா, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் இலக்கிய எழுத்தாளர் இராமகிருஷ்ணன், முன்னாள் நீதிபதி சந்துரு, இயக்குநர் எழில், சசி, சமுத்திரகனி, த.செ. ஞானவேல், எழுத்தாளர் அஜயன் பாலா, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் சிறப்புக்களை பகிர்ந்து கொண்டனர்..!”
இயக்குநர் கரு பழனியப்பன் கூறியது…
“இந்த படம் எப்படி சாத்தியமாகும் என்ற சந்தேகமும், இதனை எப்படி தமிழில் எடுக்க முடியும் என்ற சந்தேகமும் எல்லாருக்கும் இருக்கும். மேலை நாடுகளில் மட்டுமே இது சாத்தியமாகும் என்ற சந்தேகம் இருந்த போது, இதை தமிழில் செய்ய பார்த்திபன் போன்ற ஒருத்தர் இருக்கிறார் என கூறுவதற்கான சாட்சியே இரவின் நிழல். ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்தில் பணியாற்ற வேண்டும் என அவர் எடுத்த முடிவு, தமிழ்நாட்டில் எல்லாம் சாதிக்க முடியும் என்பதை கூறுவதற்காகவே. படத்தில் பணியாற்றிய அந்த 200 பேருக்கும் ஒரு பெரிய நன்றி கூறிகொள்ள வேண்டும்.
இந்த படத்தின் மேல் அவர்கள் வைத்த நம்பிக்கை தான் இந்த படத்தில் பார்த்திபன் பெற்ற முதல் வெற்றி. பார்த்திபன் சார் உடைய படங்கள் அடுத்த தலைமுறைக்கு பெரிய உத்வேகமாக இருக்கும். இந்த படம் உங்களுக்கு ஒரு அனுபவமாக இருக்கும். எல்லா படங்களும் முதலில் குறை கண்டுபிடிப்பதற்காக இருக்கும், அதனை தாண்டி இந்த படம் உங்களுக்கு அனுபவமாக இருக்கும். இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவை இந்த படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான் லீனியர் திரைப்படம் என அங்கீகரித்துள்ளது..!”
எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கூறியதாவது..
“பார்த்திபன் தமிழ் சினிமாவில் புதுமைகள் செய்ய கூடியவர், இந்த தமிழ் சினிமாவிற்கு ஒரு பெருமை. பார்த்திபன் உடைய இரவின் நிழல் வேறு வேறு வயது உடையவர்களின் கதை, நான் லீனியராக நடக்கிறது. இது மிகப்பெரிய விஷயம். உலகம் முழுவதும் எடுக்கபட்ட சிங்கிள் ஷாட் திரைப்படங்கள் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார். காட்சிகளை தாண்டி, இசை வழியாக புதுமையை காட்டியுள்ளார். இந்த படத்தை சாத்தியமாக்க உறுதுணையாக இருந்த கேமராமேன் ஆர்தர் மிகபெரிய பணியாற்றியுள்ளார். கொரொனா காலத்தில் இந்த படம் எடுக்கப்பட்டது என்பது மிக கடினமான விஷயம். இந்த படத்தின் கலை இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்…”
இயக்குநர் எழில் கூறியதாவது..
“இந்த படம் எடுக்கப்பட்ட போது, அங்கு பணியாற்றிவர்கள் என்னிடம் வந்து கூறியதை கேட்கும் போது எனக்கு பதட்டமாய் இருந்தது. படம் ஓடிகொண்டிருக்கும் போது, ஆடை மாற்ற வேண்டும் அது போல இன்னும் பல பெரிய சவால்கள் இருக்கிறது. இந்த படம் 100 சதவீதம் சிங்கிள் ஷாட் தான். படத்தின் மேக்கிங் தெரிந்து பார்த்தால் படம் இன்னும் உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்..!”
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதாவது…
“பார்த்திபன் எப்பொழுதும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துபவர். படம் ஆரம்பித்ததிலிருந்தே படம் எனக்கு பிரம்மிப்பாய் இருந்தது. கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர் எப்படி இதை சாத்தியமாக்கினார்கள் என பிரம்மிப்பாய் இருந்தது. தமிழ் சினிமாவில் ரசனை குறைந்துவிட்டது, மற்ற மொழி படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். நம் சினிமாவை கண்டுகொள்வதில்லை, தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி எல்லோருக்கும் இருக்கும் சந்தேகம் இந்த படத்தை பார்த்தால் அந்த எண்ணம் மாறிவிடும். பார்த்திபன் சார் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டுபோய்விட்டார். இந்த படம் முடிந்த போது, படத்தில் பணியாற்றிய அனைவரும் அவர்கள் வெற்றியடைந்தது போல் சந்தோசம் அடைந்தனர். ஏ ஆர் ரஹ்மான் உடைய பாடல் படத்திற்கு மிகப்பெரிய பலம். பார்த்திபன் இந்திய சினிமாவின் பொக்கிஷம்.!”
முன்னாள் நீதிபதி சந்துரு கூறியதாவது….
“பார்த்திபன் படம் என்றாலே ஒரு வித்தியாசம் இருக்கும். இந்த படம் வடசென்னை சார்ந்து வெளியான படங்கள் சொல்லாத விஷயத்தை சொல்கிறது. நலிந்தவர்கள் பற்றி இந்த திரைப்படம் பேசுகிறது. விளிம்பு நிலை மனிதர்களை காட்டிய பார்த்திபனுக்கு நன்றி. இந்த தீபகற்ப இந்தியாவில் மொழி தேவை இல்லை. தென்னிந்திய மக்களின் மொழி பற்றுக்கு இந்த படம் அடையாளமாய் இருக்கும்..!”
எழுத்தாளர் அஜயன் பாலா கூறியதாவது..,
“முதலில் இந்த படத்தை வெட்டி, ஒட்டி எடுத்திருப்பார்கள் என நான் நினைத்தேன் ஆனால் படம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பலருக்கு இந்த படம் மேல் சந்தேகம் ஏற்பட்டது. அனைவரது சந்தேகத்திற்கும் விடை படத்தின் மேக்கிங் வீடியோவில் இருக்கும் படத்தின் கிம்பல் ஆப்ரடேட்டருக்கு பெரிய கைதட்டல் கொடுக்க வேண்டும். மிகப்பெரிய சாதனை செய்ய வேண்டும் என்ற நினைப்பில், மிகப்பெரிய உழைப்பை படத்தில் பணியாற்றிய 365 பேரும் அளித்துள்ளனர். பார்த்திபன் முதல் படத்தின் உழைப்பை போல் அனைத்து படத்திற்கும் கொடுத்துள்ளார். பார்த்திபனின் அசுரத்தனமான மூளை இந்த படத்தில் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ் சினிமாவின் மைல்கல்..!”
பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியாதவது…
“இந்த கதையை என்னிடம் முதலில் சொன்ன போது எனக்கு தோன்றியது, இந்த கதையை எப்படி இவர் சொல்ல போகிறார் என்று தான். ஒரு சில கலைஞர்கள் தன்னை தானே புதுப் பித்துகொள்வார்கள். ஆனால் பார்த்திபன் உலக சினிமாவை புதுபித்துள்ளார். இந்த கதை மிகவும் ஆழமானது. இதில் அவர் கதாபாத்திரத்தை எழுதிய விதம் அருமையாக இருந்தது. இந்த கரடுமுரடான கதையை மென்மையாக்கியது ஏ ஆர் ரஹ்மான் தான். மொத்த படக்குழுவின் கடினமான உழைப்பு இது. இன்னும் பல ஆண்டுகள் கழித்து இந்த படம் பற்றி உலகம் முழுவதும் பேசப்படும்..!”
ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் கூறியதாவது…
“தமிழராக நாம் பெருமை பட வேண்டும். அதிகமான விமர்சனம் தமிழில் தான் இருக்கிறது. முக்கியமாக சினிமாக்களை அதிகம் விமர்ச்சிக்கிறார்கள். நாம் பாராட்ட கற்றுகொள்ள வேண்டும். இந்த கதையை பார்த்திபன் சொன்ன போது, அவரால் முடியும் என எனக்கு தெரியும். புதிய பாதையில் இருந்து அவர் புதிய விஷயங்களை செய்துள்ளார். உலக சினிமா உலக சினிமா என்கிறார்கள் நம்ம தமிழும் சேர்ந்தது தான் உலக சினிமா. இந்த சாதனையோடு பார்த்திபன் நிறுத்தமாட்டார், இன்னும் தொடர்வார்..!”
இயக்குநர் த செ ஞானவேல் கூறியதாவது..
“இந்த படம், படமாய் என்னை முழுதாய் திருப்திபடுத்தியது. புதியபாதை வந்து 35 வருடம் கழித்தும் அவரிடம் இந்த வேகம் இருப்பது எங்களுக்கு உத்வேகமாக இருக்கிறது. இந்த படம் ஆச்சர்யமாய் இருந்தது. படத்தின் மேக்கிங் பார்த்து பார்த்திபன் மேல் மரியாதை வந்தது. படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன்..!”
இயக்குநர் சசி கூறியதாவது…
“ஒரு இயக்குனருக்கு பெரிய பொறுப்புகள் உள்ளது. கதையிலிருந்து, நடிகர்கள் தேர்ந்தெடுப்பது வரை நிறைய பொறுப்பு உள்ளது. அதில் முக்கியமான ஒன்று ரசிகர்களை கட்டிபோட்டு வைப்பது. பார்த்திபன் சார் உடைய உழைப்பு, படத்தின் கதையை மனதிற்குள் ஓட்டி படதொகுப்பை மனதிற்குள்ளே முடித்துவிட்டு படத்தை தொடங்கியுள்ளார். ரிகர்சலை மீண்டும் மீண்டும் செய்து ரசிகர்களை கட்டிபோட்டு வைத்துள்ளார். ஒரு திரைப்படமாக புது அனுபவம் தந்துவிட்டார்..!”
நடிகர் இயக்குநர் சமுத்திரகனி கூறியதாவது…
“இந்த கதையை பார்த்திபன் என்னிடம் கூறிய போது, இதை எப்படி எடுக்கபோகிறீர்கள் என்று கேட்டேன். எடுத்துவிடலாம் என்றார். இடையில் பல தொழில்நுட்ப கலைஞர்கள் மாறிவிட்டார்கள். இந்த படத்தில் பணியாற்ற பெரும் உழைப்பு வேண்டும். இந்த படத்தில் நடிக்காதது எனக்கு வருத்தம்…!”
இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் கூறியதாவது…
“ஏ ஆர் ரஹ்மான் அவர்களுடன் ஏலேலோ படத்தில் வேலை செய்ய வேண்டியது. அந்த படம் நடக்கவில்லை. அவருடன் வேலை செய்ய 20 வருடம் காத்திருந்தேன். இந்தப்படம் அவர் இருந்ததால் மட்டுமே சாத்தியம். அவர் இருக்கும் தைரியத்தில் தான் இந்த முயற்சியை செய்தேன். இந்த முயற்சி செய்ய ஆரம்பித்த போது எல்லோரும் முடியாது என்றார்கள் ஏன் முடியாது என முயற்சித்தது தான் இந்தப்படம். இதன் கதை சொன்னவுடனே அவரே பாவம் செய்யாதிரு மனமே என ஒரு சித்தர் பாடலை இசையமைத்து தந்தார். எப்படி படத்திற்கு முன்னதாக படத்திற்கு பொருத்தமாக ஒரு பாடலை தந்தார் என ஆச்சர்யமாக இருந்தது. இந்த கதைக்கு முழுக்க முழுக்க அவர் இசையால் உயிர் தந்துள்ளார், ஒரு பாடல் இருந்த இந்தப்படத்தில் ஆறு பாடல்கள் ஆகிவிட்டது. இந்தப்படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். எல்லோரது பாராட்டும் ஊக்கமும் தான் இந்தப்படம் எடுக்க காரணம்..!”
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கூறியதாவது…
“இயக்குநர் பார்த்திபன் சொல்லி இந்த கதை கேட்டபோது பிரமிப்பாக இருந்தது. அவரிடம் சினிமா மீதான காதல் இன்னும் இருக்கிறது. அவர் இந்த ஐடியா சொன்ன போது பைத்தியகாரத்தனமாக இருந்தது. இவ்வளவு நன்றாக செய்வார் என நினைக்கவில்லை. மிக நன்றாக எடுத்தார். நான் ஒரு படம் எடுத்தேன் 99 சாங்ஸ் ஆனால் அதை சரியாக ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்தப்படம் எடுக்கும்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி எடுக்கிறார்கள் என பார்த்தேன் பிரமிப்பாக இருந்தது. இந்தப்படம் வெளிநாட்டில் வெளியாகி இருந்தால் கொண்டாடி இருப்பார்கள் பரவாயில்லை இங்கு தமிழ் நாட்டில் கொண்டாடுவோம்..!”