தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த வில்லன் நடிகர் நம்பியாரின் நூற்றாண்டு வருடம் இது. அதற்கான விழாவில் இளையராஜா கலந்து கொண்டது சிறப்பு.
அவ்விழாவில் இளையராஜா பேசியதிலிருந்து…
“1980-ல் குருசாமி நம்பியார் சுவாமிகளிடம் ஐயப்பனுக்கு மாலை போட்டுக் கொண்டேன். அப்போது சபரிமலை சென்று வந்த மூன்று நாள்களும் அவற்றில் நம்பியார் சுவாமிகளிடம் பெற்ற அனுபவங்களும் மறக்க முடியாதவை.
நான் தேக்கடிக்குக் கீழே சபரிமலை சென்றால் தங்கிச்செல்ல ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டியிருக்கிறேன். நான் என் வேலை காரணமாக தொடர்ந்து சபரிமலை செல்ல முடியவில்லை. ஆனால், நம்பியார் சுவாமிகள் ஒருமுறை “உன் கெஸ்ட் ஹவுஸில வருஷாவருஷம் நான் தங்கிட்டுப் போறேன். உனக்குக் கூட தெரியாது. உன் மனைவிடம் சாவி வாங்கிட்டுப் போறேன்..!” என்றார்.
அவர் அப்படி வந்துத் தங்கிப்போன புண்ணியம்தான் இப்போது அந்த இடம் வேதபாடசாலையாக விளங்குகிறது. நான்கு வயதிலிருந்து 12 வயது வரை கொண்ட இந்தியா முழுவதிலுமுள்ள மாணவர்கள் அங்கு தங்கி வேதங்களை பாராயணம் செய்து வருகிறார்கள்.
நம்பியார் சுவாமிகள் வில்லனாக நடித்தது பற்றி எல்லோரும் பேசினார்கள். அதை அவர் உணர்ந்தேதான் செய்து கொண்டிருந்தார். அந்த வில்லன் வேடத்தில் நடிக்கும்போது கூட தெய்வீக உள்ளத்துடன்தான் அவர் நடித்திருக்கிறார். அதன் பலன்தான் இப்போது அவர் வழி வந்தவர்களை இப்படி சிறப்பாக நூறாண்டு விழா கொண்டாடச் செய்திருக்கிறது.
என்னையும் 1000 படங்கள் சிறப்பாக இசையமைத்தேன் என்கிறார்கள். விட்டால் அது 3000 வரை கூட போயிருக்கும். யார் வருகிறார்களோ அவர்களுக்கு எது தேவையோ, அப்போது எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை இசையாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நான் நன்றாக இசையமைக்கிறேன் என்பது நான் நன்றாக மூச்சு விடுகிறேன் என்பது போல. அப்படித்தான் நான் நினைத்துக் கொள்வேன். யாராவது நீங்கள் இத்தனை தடவை நன்றாக மூச்சு விடுகிறீர்கள் என்பார்களா..? எனக்கு இசை அப்படித்தான்..!”
உங்கள் மூச்சில் நாங்கள் சுவாசிக்கிறோம் ராஜா சார்..!