சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டாலும் 50/50 என்ற அளவில்தான் அவர் ஹீரோயிஸத்தையும், நகைச்சுவையையும் கலந்து கொடுத்து கொண்டு இருந்தார். ஆனால், இதுவரை சந்தானம் நடித்த படங்களிலேயே இவ்வளவு சீரியஸான ஒரு படத்தை நாம் பார்த்ததில்லை.
ஒரு உலக அரசியல் பேசும் கனமான படம் இது. மொழி தெரியாதவர்களின் அவஸ்தையையும், ஒரு மொழி அழிக்கப்பட்டால் ஒரு இனமே எப்படி பாதிக்கப்படும் என்பதும்தான் கதை கரு. உச்ச பட்ச ஹீரோக்கள் நடிக்க கூடிய அளவில் கனமான இந்தக் கதைக்கு எப்படி சந்தானம் பொருந்தி வருவார் என்று இயக்குனர் ரத்னகுமார் எதிர்பார்த்தாரோ தெரியவில்லை.
ஆனால் இப்படி ஒரு கதையைதான் நான் எதிர்பார்த்தேன் என்று சந்தானம் வந்த கதையை உடனே பிடித்துக் கொண்டு பிக்கப் செய்து விட்டார் போலிருக்கிறது.
பட ஆரம்பத்தில் சந்தானம் தன் கதை சொல்லும் போது இது கண்டிப்பாக நகைச்சுவை படம்தான் என்கிற அளவில்தான் இருக்கிறது. அமேசான் பழங்குடியான அவர் அமேசானில் இருந்து வெளி நட்டவரால் கடத்தப்பட்ட போது அங்கிருந்து தப்பி நாடு நாடாக சுற்றி கடைசியில் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வந்து சேர்கிறார். இங்கே அவர் தங்கிவிடுவதன் காரணம் இங்கே பல மொழி பேசுபவர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது – வந்தாரை வாழ வைக்கிறது தமிழகம் என்பதுதான்.
வந்தவர் சும்மா இருக்கவில்லை. உதவி என்றால் முதல் ஆளாக ஓடோடிச் சென்று நிற்கிறார். அப்படி உதவுவதன் காரணமாக உதையும் படுகிறார். அப்படி உதைபட்டதில் அவரை சிகிச்சை செய்யும் ஒரு செவிலியர், “உதவி செய்ய வேண்டியதுதான்… ஆனால் அது முதல் உதவி செய்யக்கூடிய அளவுக்கு போகக்கூடாது..!” என்று அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்கும் போதே வெளியில் யாருக்கோ உதவி தேவைப்பட ஓடுகிறார் சந்தானம். இதுதான் அவரது பாத்திரப்படைப்பு.
அப்படி கடத்தப்பட்ட தங்கள் நண்பன் ஹரீஷ் குமாரை மீட்டுத் தருமாறு மூன்று இளைஞர்கள் அவரை அணுக, அவர்களது நண்பனை மீட்க கிளம்புகிறார். இந்தப் படையில் அவர்களது தோழியும், கடத்தப்பட்ட இளைஞனின் காதலியுமான நமீதா கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து கொள்கிறார்.
ஹரீஷ் குமாரைக் கடத்தியவர்களை நமக்கு முன்பே அறிமுகம் செய்து விடுகிறார்கள். ஜார்ஜ் தலைமையிலான நான்கு கடத்தல்காரர்கள்தான் இந்தப் படத்தைப் பொறுத்தவரை காமெடி பீஸ்கள். ஆனாலும் அவர்களை இலங்கைத் தமிழர்கள் என்று சொல்லி கொஞ்சம் நமது தலையை சொரிய வைக்கிறார் இயக்குனர்.
ஹரீஷ் குமாரைக் கடத்தியதன் காரணமும் கூட ஒரு பெண்ணைக் கடத்த சொன்னதற்கு தவறுதலாக அந்த இளைஞனை கடத்தி விட்டார்கள் அவர்கள் என்பதுதான். அந்த பெண் அதுல்யா சந்திரா. அதுல்யாவைக் கடத்தச் சொன்னவர்கள் வேறு யாரும் அல்ல, படத்தின் வில்லன்களான அவளது அண்ணன்கள்தான். ஒரே தந்தைக்கு ஆனால் வேறு வேறு தாய்க்கு பிறந்தவர்களாக இருப்பதால் தங்கள் சொத்துக்கு வாரிசாக அவள் வந்து விடக்கூடாது என்று வில்லன்கள் முடிவெடுத்து அவளைக் கொல்வதற்காக கடத்தச் சொல்கிறார்கள்.
துப்பாக்கிகளை எடுத்து ‘பட பட’வென்று குண்டு மழை பொழியும் அந்த வில்லன்கள் ஏன் இந்தக் காமெடிப் பீஸ்களிடம் அந்த வேலையை ஒப்படைத்தார்கள் என்பது புரியவில்லை – அதுவே பெரிய காமெடி.
பலவித குழப்பங்களுக்கும் நகைச்சுவைகளுக்கும் இடையில் சந்தானம் எப்படி தனது ‘டாஸ்க்’கை நிறைவேற்றுகிறார் என்பது மீதிக் கதை.
இந்தப் படத்தில் சந்தானம் ஒரு இடத்தில் கூட சிரிக்கவில்லை – நம்மை சிரிக்கவும் வைக்கவில்லை. அவ்வளவு சீரியஸாக இருக்கிறார். அவரது கேரியரில் இந்த பாத்திரப்படைப்பு உண்மையிலேயே புதுமையானதுதான். பசி என்று வந்த பிச்சைக்காரப் பெண்ணிடம், தான் சாப்பிடுவதை அப்படியே கொடுத்ததுடன் அதை பிடுங்கி எறியும் அராத்து இன்ஸ்பெக்டரை அந்தப் பெண் விருப்பப்படி ‘பளார்’ என்று அறையும் இப்படியான பாத்திரப்படைப்பு ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு மட்டுமே வாய்க்கும். இதில் சந்தானத்துக்கு வாய்த்து இருக்கிறது.
படத்தில் இரண்டு பெண்கள் இருந்தும் இருவருமே சந்தானத்துக்கு ஜோடியாகவோ, கதாநாயகியாகவோ இல்லை. இதுவும் ஒரு புதுமை தான். அவர்களின் நமீதா கிருஷ்ணமூர்த்தி இன்றைய நவநாகரீக பெண்களை ஜெராக்ஸ் எடுத்தது போல் இருக்கிறார். அவரைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையிடம், “என்னை ஒருத்தன் காதலிச்சிட்டு உட்டுட்டு ஓடிட்டான்..!” என்று சொல்ல, “அவ்வளவுதானே… வேறு ஏதும் நடக்கலையே..?” என்று கேட்கிறார் அவர். அதற்கு, “அதான் சொன்னேனே ‘உட்டுட்டு’ ஓடிட்டான் என்கிறார் நமீ. ‘கிர்ர்ர்ர்ர்’ராகும் மாப்பிள்ளை தலை தெறிக்க ஓட, இவரையும் வீட்டிலிருந்து விரட்டுகிறார் இவரது அப்பா.
பல நாள் ஆண் நண்பர்களுடனே பயணம் செய்யும் நமீதா ஒரு கட்டத்தில் சந்தானத்தின் நல்ல உள்ளத்தில் மயங்கி “உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குது. ஐ லவ் யூ… ஆனா நாளைக்கு உன்ன லவ் பண்ணுவேனான்னு தெரியாது…” என்பதுடன் சொன்னபடியே அடுத்த நாள் தன்னை உட்டுட்டு ஓடிய பழைய காதலனைப் பார்த்து அவருடன் இணைகிறார்.
ஆனால் இன்னொரு நாயகி அதுல்யா சந்திரா கொஞ்சம் புதுமைப் பெண்ணாக வருகிறார். தன் கண்ணெதிரே பள்ளிச் சிறுமி ஒருத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக, அதைச் செய்யும் காமுகர்களிடம் அவளை விட்டுவிடு என்னை வேண்டுமானால் அனுபவித்துக் கொள்ளுங்கள் என்கிறார். அப்படி ஒருவன் அனுபவிக்க வரும்போது அவனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதில் அவரது வீரம் அடங்கி இருக்கிறது.
படத்தின் இறுதியில் அவர்தான் சந்தானத்தின் ஜோடியாக கூடும் என்று நமக்கு ஒரு மாதிரி புரிகிறது.
வில்லன்களில் முரட்டு வில்லனான பிரதீப் ராவத் நடிப்பு அதிரிபுதிரியாக இருக்கிறது. அவரது தம்பியாக வரும் பப்ஜி பிரியன் வில்லன்களில் இன்னொரு ரகம். ஆனால் இது என்ன தமிழ் படமா ஹாலிவுட் படமா என்று நினைக்கக்கூடிய அளவில் படம் முழுவதும் கிட்டத்தட்ட 1000 தடவை பலவித துப்பாக்கிகளில் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டில் சாத்தியமா என்று தெரியவில்லை
கிளைமாக்ஸ் கன்டெயினர் காட்சி பிரமிக்க வைக்கிறது.
சந்தோஷ் நாராயணனின் இசை வேற லெவல். அதிலும் ‘மாட்னா காலி’, ‘அம்மா நானா’ பாடல்கள் செம. பின்னணி இசை ஹாலிவுட் லெவல்.
அது சரி குலு குலு என்றால் என்ன தெரியுமா..? சந்தானத்தின் பெயர் google. அது மருவி ‘குலு குலு’ ஆனதாம்.
ஆக. குலு குலு – எது மாதிரியும் இல்லாத புது மாதிரி..!