January 27, 2026
  • January 27, 2026
Breaking News
June 27, 2025

குட் டே திரைப்பட விமர்சனம்

By 0 154 Views

குடிகாரர்களைப் பற்றியும் குடி நோயாளிகளைப் பற்றியும் இதுவரை அனேக படங்கள் வந்துள்ளன. அவற்றிலிருந்து சற்று மாறுபட்டு சூழ்நிலை கொடுத்த அழுத்தத்தால் குடிக்கப் போன ஒருவரின் ஒரு நாள் இரவு எப்படி இருந்தது என்பதைப் படம் பிடித்துக் காட்டி இருக்கும் படம்.

வேலை செய்யும் இடம், குடும்பம், நண்பர்கள் என்று எல்லா மட்டத்திலும் ஒருநாள் சூழ்நிலைக் கைதியாகும் நாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம், அந்த அழுத்தத்தில் மதுபானத்தை உள்ளே தள்ளி விடுகிறார். உள்ளே போன மது அவரது ஆற்றாமைகளை வெளியே தள்ளிவிட தன்னிலை மறந்து கூத்தடிக்கிறார்.

அதே இரவில் காணாமல் போன ஒரு சிறுமியை காவல்துறை தேடிக் கொண்டிருக்க, அந்தப் பணிக்கிடையே பிரித்விராஜ் அவர்களிடம் வந்து சிக்க, அது போலீசுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்த… குழந்தை கிடைத்ததா… போலீசை சிக்கலுக்கு உள்ளாக்கிய பிரித்விராஜ் என்ன ஆனார் என்பதெல்லாம் மீதிக் கதை. 

நாயகனாக நடித்திருக்கும் பிரித்திவிராஜ் ராமலிங்கம். நடிப்பை நேசிப்பதைத் தாண்டி சுவாசிப்பவர் என்பது புரிகிறது. தேர்ந்த ஹீரோ மட்டுமே நடிக்கக்கூடிய ஒரு திரைக்கதையில் தயாரிப்பாளராகவும் இருந்து கொண்டு, தானே நாயகனாகி இருப்பது அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. 

முதல் படம் என்கிற பதட்டம் ஏதுமின்றி… அதே நேரத்தில் நடிப்பைக் கூட்டவும் குறைக்கவும் செய்யாமல் சரியான அளவுகோலில் நடித்திருக்கிறார். 

அவரது கல்லூரி தோழியாக நடித்திருக்கும் மைனா நந்தினி  வரும் காட்சிகள் எல்லாம் கலகலக்க வைககிறது. மைனா நந்தினியிடம் பிரித்திவிராஜ் போதையில் இயல்பாக பேசும் விஷயங்கள் எல்லாம்  அவரது கணவர் ஆடுகளம் முருகதாஸை அதிர்ச்சியடைய வைப்பது அவருக்கு கலக்கத்தை தந்தாலும் நமக்கு கலகலப்பு.

ஆனால் அதை நந்தினி அசால்டாக சமாளிப்பது அருமை.

அதேபோல் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் விஜய் முருகனின் விரைப்பும், அவரது பதட்டத்தை இரட்டிப்புக்கு உள்ளாகும் பிரித்விராஜின் செய்கைகளும் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று அச்சப்பட வைக்கிறது.

இவர்களைத் தவிர ஆட்டோ ஓட்டுநராக நடித்திருக்கும் காளி வெங்கட், தையல்காரராக நடித்திருக்கும் பகவதி பெருமாள்,  வெட்டியானாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, அறிவுரை தரும் போஸ் வெங்கட் எல்லோரும் அங்கங்கே வந்து கவனம் பதிக்கிறார்கள்.

வழக்கப்படியே கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம் கூட்டி இருக்கிறது.

சவால் தரும் இரவு நேர ஒளிப்பதிவை மதன் குணதேவ் அற்புதமாக கையாண்டிருக்கிறார். படத்தொகுப்பம் அவரே என்பதால் எதார்த்தமாக கதை சொல்ல முடிந்திருக்கிறது. 

பூர்ணா ஜெஸ் மைக்கேலின் திரைக்கதை மற்றும் வசனம் படு இயல்பு.

கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள் மற்றும் கூடுதல் வசனமும் அப்படியே. அத்துடன் சாமியாராகவும் வந்து சரக்கு அடிக்கிறார்.

“குடிகாரர்களைப் பொறுத்தவரை அன்றைக்கு செய்த அட்டூழியங்கள் எல்லாம் அடுத்த நாள் செய்ய மாட்டார்கள் என்பதற்கான எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை… நாளை என்பது அவர்களுக்கு மற்றும் ஒரு நாளே..!” என்று படத்தை ஆரம்பிக்கும் இயக்குனர் என்.அரவிந்தன், கடைசியில் எப்படி முடிக்கிறார் என்பது சுவாரஸ்யமான விஷயம். 

இந்தப் படத்துக்கு ‘ குட் டே’ என்று நேர்மறையன தலைப்பு வைத்திருப்பதும் பாராட்டுக்குரியது. 

குட் டே –  சரக்குள்ள படம்..!

– வேணுஜி