ரஜினியின் தீவிர ரசிகரான ஆடுகளம் நரேன், ‘தர்மத்தின் தலைவன்’ ரிலீசன்று நிறைமாத மனைவியுடன் படம் பார்க்கப் போகிறார். தியேட்டரிலேயே வலி வந்து மனைவிக்கு பிரசவம் ஆக, அங்கே பிறந்த மகனுக்கு ரஜினிகாந்த் என்றே பெயர் வைக்கிறார். ஆனால், ரஜினிகாந்த் வளர வளர தர்மத்தின் தலைவன் ரஜினி போலவே ஞாபகமறதிப் பேராசிரியராக ஆகிவிட எதையும் ஒருமுறைக்குப் பலமுறை செய்ய நேர்வதால் அவரை கஜினிகாந்த் என்று கலாய்க்கிறார்கள்.
அந்த கஜினியின் காதல் வாழ்க்கை இந்த ஞாபகமறதியால் என்னென்ன அலைக்கழிப்புக்கு உள்ளாகிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா இல்லையா என்கிற இலகுவான கதை. ‘பாலியல் காமெடி’ பட புகழ் இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார் ‘பால்’ கலக்காமல் ஸ்ட்ராங்கான காமெடி டீ போட்டு வைத்திருக்கும் ஜாலி டீ பார்ட்டிதான் படம்..!
ரஜினியின் பெயரை வைத்துக் கொண்டிருந்தாலும் ஞாபகமறதி கொண்டவர் என்பதால் ரஜினி பெயருக்குக் களங்கம் விளையாமல் பார்த்துக் கொள்கிறார் நாயகன் ஆர்யா. அவர் எசகு பிசகாக சொதப்பி மாட்டிக்கொள்ளும் இடங்களில் எல்லாம் ‘ரெம்ப நல்லவனாகி’ ஒரு பிட்டைப் போட்டு ‘எஸ்’ ஆவது சுவாரஸ்யம். கொஞ்சநாள் காணாமல் போயிருந்த ஆர்யாவை மீட்டெடுத்திருக்கிறது படம். இருந்தும் கிளைமாக்ஸில் அவர் அழ முயற்சிக்கும் போதும் நமக்கு சிரிப்பு வருவது நிச்சயம் காமெடியினால் அல்ல.
வாரா வாரம் ஒரு புதுப்படம் ரிலீசாகும் சாயிஷாவை ரசிகர்களின் கனவுக்கன்னியாக இந்தப்படத்திலேயே முடிசூட்டி விடலாம். எப்படிப் பார்த்தாலும் குறையில்லா அழகு அவருக்கு வாய்த்த வரம். முழுதும் மூடிய நாட்டிய உடையிலும் சரி… தொடை தெரியும் ஷார்ட்ஸிலும் சரி எந்த உடையிலும் அப்பழுக்கில்லாமல் மின்னுகிறார். இதுபோன்ற ஜாலியான காதல் படங்களுக்கு சாயிஷாவே நல்ல சாய்ஸ்..!
கதையே லந்தாக ஆனதால் ஆர்யாவின் பெற்றோராக வரும் ஆடுகளம் நரேன் – உமா பத்மநாபனும் சரி, சாயிஷாவின் அப்பாவாக வரும் சம்பத் அண்ணியாக வரும் நீலிமாவும் சரி என்ன ஏதென்று கேட்கவிடாமல் நம்மை நம்பவைக்கிறார்கள்.
“உனக்கு எங்கே பொண்ணு கிடைக்கும்..? டிவி ஷோ வச்சு எடுத்தாகூட நீ எந்தப் பொண்ணையும் செலக்ட் பண்ணமாட்டே…!” என்று ஆர்யாவை சதீஷ் கலாய்க்க… “படம் நல்லாயிருக்குன்னு புளூ சட்டைக்காரனும், பாண்டாவும் கூட சொல்லிட்டாங்க…” என்று ஆர்யா கலாய்க்க, யாரோ யாரையோ படம் முழுக்க கலாய்த்து நம்மை சிரிக்கப் பண்ணுகிறார்கள்.
இருந்தும் சதீஷ், கருணாகரன், மொட்ட ராஜேந்திரனும் ‘ஆன் போர்ட்’டில் இருப்பதால் இன்னும் கூட நம்மை சிரிக்க வைத்திருக்க திரைக்கதையில் வாய்ப்பு இருக்கிறது. முதல் பாதியைவிட இரண்டாம் பாதியில் காமெடி தூக்கலாக இருப்பதால் நிறைவுடன் வெளியே வருகிறோம்.
இன்னொரு எம்.ராஜேஷாக வரும் வாய்ப்பு இருப்பது இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமாரைப் பொறுத்தவரை நன்றாகவே புரிகிறது. அவர் அதைப் புரிந்துகொள்ளாமல் ‘பாலியல் காமெடிப் படங்கள்தான் எடுப்பேன்’ என்றால் அது அவரது ‘டெஸ்டினி..!’
பல்லுவின் ஒளிப்பதிவு ஜில்லென்றிருக்கிறது. பாலமுரளி பாலுவின் இசை கமர்ஷியலுக்கு கச்சிதம்..!
கஜினிகாந்த் – கலாய்காந்த்..!