முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இன்று காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
பத்திரிகையாளர், தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட ஜார்ஜ் பெர்ணாண்டஸ், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். 2009ஆகஸ்ட் முதல் 2010ஆம் ஆண்டு ஜூலை வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்த அவர், பார்க்கின்சன் மற்றும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், டெல்லியில் இன்று காலை ஜார்ஜ் பெர்ணாண்டஸ் காலமானார். அவருக்கு வயது 88. ஜார்ஜ் பெர்ணாண்டஸ் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எளிய வாழ்க்கையும், உயர்ந்த சிந்தனையும் கொண்டவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். வெளிப்படையான, துணிச்சலான, ஒளிவுமறைவற்ற தன்மையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட ஜார்ஜ் பெர்ணாண்டஸ், நாட்டிற்கு மதிப்புமிக்க பங்களிப்பு செய்தவர், இந்தியாவை வலிமையாகவும், பாதுகாப்பாகவும் ஆக்கிய சிறந்த பாதுகாப்பு அமைச்சர் என அவரை நினைவுகூர்வதாகவும் ட்விட்டரில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு இந்தியாவிற்கே ஒரு பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார்.
கார்கில் போரில் இந்திய வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த, முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் – மூத்த தொழிற்சங்கத் தலைவருமான ஜார்ஜ் பெர்ணான்டஸ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.