டைட்டிலை பார்த்ததும் “இப்படி ஒரு படமா..?” என்று சலித்துக் கொள்ளத் தோன்றலாம். ஆனால் படத்தைப் பார்த்தாலும் “இப்படி ஒரு படமா..?” என்றே கேட்கத் தோன்றும். ஆனால் இதன் பொருள் வேறு.
தமிழில் கே.பாக்யராஜை திரைக்கதை ஜாம்பவான் என்பார்கள். அவருக்குப் பின் பல திரைக்கதை ஆசிரியர்கள் அற்புதமான திரைக்கதைகளைத் தந்திருந்தாலும் பாக்கியராஜின் இடம் அப்படியேதான் இருப்பதாக தோன்றுகிறது. அந்த இடத்தை நிரப்ப வந்திருக்கிறார் இந்த பட இயக்குனர் ‘செல்லா அய்யாவு’ எனலாம்.
அந்த அளவுக்கு ஒரு குடும்ப கதையை நகைச்சுவை ததும்ப சென்டிமென்ட் கலந்து சமுதாயத்துக்கான செய்தியுடன் கொடுத்து இருக்கிறார் அவர்.
அத்துடன் பாக்யராஜ் படங்களில் காணக் கிடைக்காத ஒரு விஷயமும் இதில் இருக்கிறது அது ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதுதான்.
இதில் இயக்குனர் செல்லாவை எந்த அளவு பாராட்டுகிறோமோ அந்த அளவுக்கு படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஷ்ணு விஷாலையும் பாராட்டியாக வேண்டும் – இந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்ததுடன் அதை தயாரித்ததற்காகவும்.
நாயகி ஐஸ்வர்யா லஷ்மி அறிமுகத்திலிருந்து தொடங்கும் படம் அவரை ஒரு கட்டா குஸ்தி வீராங்கனையாகக் காட்டுகிறது. ஆனால் அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் பெண் பார்க்க வருபவர்களுக்கு ஒன்று ஐஸ்வர்யா லட்சுமி குஸ்தி போடுவது பிடிக்கவில்லை அல்லது பெரிய வரதட்சனை கேட்கிறார்கள். இந்த இரண்டு விஷயமும் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்காமல் அது அவரது அப்பாவின் நெஞ்சுவலி வரை கொண்டு சேர்க்கிறது.
ஐஸ்வர்யாவின் இன்னொரு அப்பாவாகவும் உற்ற தோழனாகவும் இருக்கிறார் சித்தப்பா முனிஷ்காந்த் ராமதாஸ். இந்த குடும்பம் கேரளாவில் இருக்க ராமதாஸின் நண்பரும் ஊர் தலைவருமான கருணாஸ் பொள்ளாச்சியில் வசித்து வருகிறார்.
ஆணாதிக்கத்தின் மொத்த உருவமான கருணாஸ் தனது மாப்பிள்ளையான விஷ்ணு விஷாலையும் அதுபோலவே வளர்த்து வருகிறார். பெற்றோர் இல்லாத விஷ்ணு விஷாலும் மாமா கருணாஸ் சொற்படியே அதிகம் படிக்காமலும் முரட்டுத்தனத்துடன் கபடி வீரராகவும் இருக்கிறார்.
இவருக்கு இங்கே பெண் பார்க்க இவரது ஒரே கண்டிஷன் தன்னைவிட குறைந்த படிப்பு படித்தவராகவும் தலைமுடி நீளமாகவும் இருக்கும் பெண்தான் வேண்டும் என்பது. ஆனால் சந்தர்ப்ப வசமாக இது இரண்டும் இல்லாத ஐஸ்வர்யா லட்சுமி அவரை மணம் முடிக்கச் செய்கிறார் ராமதாஸ் சில பல பொய்களைச் சொல்லி.
அந்த உண்மை தெரிந்த போது இருவருக்கும் ஏற்படும் உரசல் என்ன ஆனது என்பதுதான் மீதிக் கதை.
இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒத்துக் கொண்ட விஷ்ணு விஷால் மிகவும் பாராட்டுக்குரியவர். ஏனென்றால் அவரை தூக்கி சாப்பிடும் வேடம் கதாநாயகிக்கு இருக்க அதை ஏற்றுக் கொண்டு நடிக்க ஒரு ஹீரோவுக்கு பெருந்தன்மை வேண்டும் அதுவும் இடைவேளையில் இவரை ஓவர் டேக் பண்ணி விடுகிறார் ஐஸ்வர்யா லஷ்மி. ஆனாலும் கதை மீது இருந்த துணிவில் இந்த படத்தை ஒத்துக் கொண்டு அவர் நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் முரட்டு வாலிபனாக, மாமாவின் சொல்படி ஆணாதிக்கம் மேலிட்டு காணப்பட்டாலும் மனைவியின் பெருமையைக் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ளும் கட்டத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. என்னதான் மனைவியை தண்டிக்க நினைத்தாலும் கிளைமாக்சில் ஐஸ்வர்யா மயங்கி விழுகையில் பதறும்போது… இப்படி ஒரு கணவன் வேண்டுமென்று எல்லா பெண்களும் விரும்பும் காட்சி அது.
இந்தப் படத்தின் வேடம் நாயகி ஐஸ்வர்யா லட்சுமிக்கு லைஃப் டைம் கேரக்டர் என்று சொல்லலாம். அதைப் புரிந்து கொண்டு அவரும் தன்னுடைய 100 சதவீத பங்களிப்பை இதற்காக அளித்திருக்கிறார்.
எந்த நாயகியும் ஏற்கத் தயங்கும் குஸ்தி வீராங்கனையாக பயிற்சி பெற்று நடித்திருப்பது ஐஸ்வர்யாவுக்கு பல விருதுகளை இந்த படத்துக்காக பெற்று தரலாம். தன்னுடன் மோதும் பெண்களாகட்டும் ஆண்களாகட்டும் அவர்களை அப்படியே அலாக்காக தூக்கிப் போடுவது அவருக்கு கைவந்த கலையாகி இருக்கிறது.
“இங்கே ஒரு பெண் ஜெயிக்கணும்னா முதலில் அவ குடும்பத்தை ஜெயிச்சாகணும்…” என்று அவர் உணர்ந்து பேசும் வசனம் எழுந்து நின்று கைதட்ட தோன்றுகிறது. அத்துடன் “இந்த வாழ்க்கை பிடிச்சிருக்கா..?” என்று கேட்கும் உறவினரிடம், தன் கவலையை மறைத்துக் கொண்டு “எனக்கு அவரை பிடிச்சிருக்கு…” என்று சொல்லும் ஒற்றை வரியில் காதலையும் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதேபோன்று சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் ஐஸ்வர்யா லட்சுமிதான் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார்.
விஷ்ணு விஷாலின் மாமாவாக வரும் கருணாஸ் வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டர் அதகளப்படுகிறது. அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் வாழ்க்கை அனுபவத்திலிருந்து எடுத்தவை. ஆகவே ரசித்துச் சிரிக்கிறோம்.
அதில் ஹைலைட், “நாங்கல்லாம் அம்மாகிட்டயே காசு வாங்கி குடிச்சவங்க..!” என்று அவர் சொல்லப் போக பதிலுக்கு, ராமதாஸ் “அம்மாகிட்ட மட்டுமா வாங்கி குடிச்சே…’சின்னம்மா’கிட்டயும்தான் வாங்கிக் குடிச்சே..!” எனும்போது அதன் இரண்டாவது அர்த்தம் புரிந்து தியேட்டர் அதிர்கிறது.
கருணாஸ் இப்படி ஒரு பக்கம் நம்மை குதூகளிக்க செய்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் காளி வெங்கட், ராமதாஸ், ரெடின் கிங்ஸ்லி என்று ஆளாளுக்கு ஸ்கோர் செய்து படத்தைக் கலகலப்பான கதகதப்பிலேயே வைத்திருக்கிறார்கள்.
வழக்கமாக படங்களில் பார்வையாலேயே மிரட்டும் வில்லன் ஹரிஷ் பெராடி கூட இதில் சிரிக்கவே பயன்பட்டு இருக்கிறார் என்பது சிறப்பு.
விஷ்ணு விஷாலும், ஐஸ்வர்யாவும் கணவனும், மனைவியுமாக கிளைமாக்சில் குஸ்தி போட ஒத்துக் கொண்டிருக்க, எப்படித்தான் இது நடக்கப் போகிறது என்று நமக்குத்தான் பதைபதைப்பாக இருக்கிறது. யார் ஜெயித்தாலும் யார் தோற்றாலும் அது மேலும் பிரச்சனையையே வளர்க்கும் என்று இருக்க அதை லாவகமாக கையாண்டு நம்மை திருப்திப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
கிட்டத்தட்ட இடைவேளையிலேயே படம் ஒரு முடிவுக்கு வந்துவிட இதற்குப் பின் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்ற கேள்வி எழ, ஆனால் அதற்குப் பின்னும் சுவாரசியமான திரைக் கதையை அமைத்திருப்பது செல்லா அய்யாவுவின் திறமைக்குச் சான்று.
ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு ‘ரிச்’சாக இருக்கிறது. இதை அப்படியே இந்தியில் டப் செய்து வெளியிட்டால் கூட ஒரிஜினல் இந்திப் படம் போன்றே தோன்றும் அளவுக்கு பிரம்மாண்டமாக படமாக்கி இருக்கிறார் அவர்.
இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் பிரபாகர். பின் பாதிக்கதை சீரியஸ் ஆக இருந்தாலும் அதிலும் நகைச்சுவையே மேலோங்கி நிற்க, படத்தின் சீரியஸ் தன்மையை பின்னணி இசை மட்டுமே நமக்குள் விதைத்துக் கொண்டிருப்பது ஆகச்சிறப்பு.
மிகச் சில குறைகளே படத்தில் இருந்தாலும் இப்படி ஒரு படம் பார்த்து நெடுநாளாகிறது என்ற அளவில் குடும்பத்துடன் பார்க்க உகந்த படமாகி இருக்கிறது.
தலைப்பை மட்டும் மாற்றி யோசித்து இருந்தால் இன்னும் உயிர்த்திருக்கும்.
கட்டா குஸ்தி – கட்டாயமாக ஒஸ்தி..!
– வேணுஜி