March 1, 2024
  • March 1, 2024
Breaking News
December 3, 2022

வதந்தி வெப் தொடர் விமர்சனம்

By 0 628 Views

நாகர்கோயில் பகுதியில் நடக்கும் கதை. அங்கு விருந்தினர் விடுதி வைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஆங்கிலோ இந்தியன் பெண்மணியான லைலாவின் மகள் வெலோனி என்கிற சஞ்சனா மர்மமான முறையில் இறந்து போக அந்த வழக்கில் துப்பறிய வருகிறார் உதவி ஆய்வாளரான எஸ் .ஜே.சூர்யா.

இது ஒரு வரி கதையாக இருந்தாலும் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஓடக்கூடிய எட்டு தொடர்கள் கொண்ட வெப் சீரிஸ் என்பதால் இந்த விசாரணையின் இன்று இடுக்கு எல்லாம் பயணப்பட்டு விழா வாரியாக தொடர் இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ்.

இந்த மர்டர் மிஸ்டரியின் ஊரே வன பாதுகாப்பு கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறைகள், கணவனை இழந்த கைம்பெண் வாழும் சூழல், தந்தையை இழந்த பருவப் பெண் படக்கூடிய துன்பங்கள், இவை அனைத்தையும் பார்க்கும் ஒரு எழுத்தாளரின் பார்வை என்று பல்வேறு நிலைகளில் கதை பயணப்பட்டு ரசிக்க வைத்திருக்கிறது.

பிரபல இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி தயாரித்து அமேசான் பிரைமில் வெளியாகி  இருக்கும் இந்த தொடரின் மூலம் பெரிய திரையிலிருந்து வெப் சீரிஸ்க்குள் அடி எடுத்து வைத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

தன்னுடைய வழக்கமான மிரட்டல் நடிப்பை எல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு கதையோட்டத்துடன் கூடிய இயல்பான நடிப்பில் நிமிர்ந்து இருக்கிறார் அவர். ஒவ்வொரு போலீசின் வாழ்விலும் ஒரு வழக்கு முடிவு தெரியாமல் இழுத்துக் கொண்டே போகும்.

அதன் முடிவை அடைய அவர்கள் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்பதை தன் நடிப்பின் மூலமே உணர்த்தி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

அவரது அடையாளமான மிரட்டல் நடிப்புக்கு என்று ஒரு எபிசோடை இயக்குனரிடம் கேட்டு வாங்கி இருப்பார் போல. வீட்டில் சரக்கு அடித்துக் கொண்டே அவர் பேசும் வசனங்களில் அவரது ‘ மொத்த சரக்கும்’ வெளியே வந்திருக்கிறது.

இந்தத் தொடரின் முக்கிய பிளஸ் பாயிண்ட் கதாநாயகியாக இளமையும் அழகும் ஒருங்கே பொருந்தியிருக்கும் சஞ்சனாவின் தேர்வுதான்.

அப்பா இல்லாத… ஆனால் அப்பாவித்தனமான அழகான சிரிப்புக்கு சொந்தக்காரியான சஞ்சனாவின் வாழ்வுக்கு அந்த விஷயங்களே எவ்வளவு எதிராகப் போய் விடுகிறது என்பது பரிதாபமாக இருக்கிறது. அன்புக்கு ஏங்கும் அவர் இறந்து போனாலும் கூட சுற்றம் எத்தனை வதந்திகளை அவர் மேல் சுமத்திக் கொண்டிருக்கிறது என்பது நாம் வாழும் சமுதாயத்தின் கொடுஞ்செயல்களில் ஒன்று.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவுக்குள் வந்த லைலா இந்தத் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு உள்ளும் வந்திருக்கிறார். ஆங்கிலோ இந்தியப் பெண் வேடத்தில் வரும் அவருக்கு அவரது ஆங்கிலமும், ப்ரோக்கன் தமிழுமே மிகப் பொருத்தமாக இருக்கிறது. 

தானும் அழகாக இருந்து அழகான பெண்ணைப் பெற்று ஆனால் கணவன் இல்லாமல் கைம்பெண்ணாக வாழும் நிலை எவ்வளவு கொடுமையானது என்பதைத் தன் நடிப்பின் மூலம் உணர்த்தி இருக்கிறார் அவர்.

எஸ்.ஜே.சூர்யாவுடன் வரும் இன்னொரு காவல்துறை உதவி ஆய்வாளர் விவேக் பிரசன்னா சீரியசான தொடர் நெடுக சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் இந்துவாக இருக்க கிறிஸ்தவரான அவர் மனைவிக்கும் அவருக்கும் உள்ள உறவு முறை இயல்பாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

முதுபெரும் எழுத்தாளராக நடித்திருக்கிறார் அனுபவ நடிகர் நாசர். அவர் ஏற்கனவே நமக்கு வில்லனாக அறிமுகமாகி இருக்க இந்த மர்டர் மிஸ்டரியில் அவரும் ஒரு வில்லனாக இருக்கக்கூடும் என்று நினைக்க வைக்கும் அளவில் இருக்கிறார்.

ஆனால் கற்பனை என்ற பெயரில் மெலோனியின் வாழ்க்கையைத் தவறாக சித்தரித்து கதையில் எழுதி இருக்கிறாரே என்ற வருத்தம் நமக்கு எழாமல் இல்லை.

அதுவும் அவற்றையெல்லாம் காட்சிகளில் காண நேரும் போது அப்பழுக்கற்ற பெண்ணின் வாழ்க்கையை அழுக்காக்கிக் காட்டுவது போல் அமைந்து விடுகிறது.

எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட், தன் கணவனின் நிலை குறித்து அவரை விட்டு விலகி பெற்றோர் வீட்டுக்கு செல்வதும் அவரை மீட்டு அழைத்து வர, எஸ்.ஜே.சூர்யா படும் பாடும் ரசிக்க வைக்கிறது.

குமரன் தங்கராஜ், ஹரீஷ்பெராடி, அவினாஷ், அஸ்வின்குமார், ஆதித்யா, வைபவ் முருகேசன், அஸ்வின்ராம் உள்ளிட்ட பலரும் அவரவர் பாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

ஊர், காடுகள், வனாந்தரங்கள் என்று அலைந்து திரிந்து ஒளிப்பதிவு செய்து இருக்கும் சரவணனின் ஒளிப்பதிவு இந்த வெப் தொடருக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

இதுபோன்ற மர்ம தொடர்களில் பின்னணி இசையமைப்பே பிரதானமாக கருதப்படும். அந்தப் பணியை சைமன் கே.கிங் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

நாகர்கோவில் வட்டார வழக்கு, தொடர் முழுவதும் ஒலித்துக் கொண்டிருப்பது தொடரின் நம்பகத்தன்மைக்கு உதவுகிறது.

வெப் தொடர்களுக்கு சென்சார் இல்லை என்பதற்காக ஆபாச வார்த்தைகளை உபயோகிப்பது, பாலியல் தொடர்பான காட்சிகளை பாரபட்சமில்லாமல் எடுப்பது போன்ற விஷயங்களுக்கு இந்தத் தொடரும் இலக்காகி இருக்கிறது.

குடும்பத்துக்குள் வரும் இது போன்ற தொடர்களில் பொது நன்மை கருதி, தயாரிப்பாளர்கள் இந்த விஷயங்களை குறைத்துக் கொள்ளுதல் நலம்.

ஆனாலும்…

வதந்தி – விறுவிறுப்பான வஜ்ரதந்தி..!