எல்லோருக்குமே அவரவர்களின் அப்பாக்கள்தான் ஹீரோ. அப்பா எந்த தப்பும் செய்ய மாட்டார் என்பதுதான் அனைத்து குழந்தைகளின் கருத்தாகவும் இருக்கும். நமக்கு ஒன்று என்றால் வந்து நிற்பார் அப்பா… அவருக்கு ஒன்று என்றால் குழந்தைகள் எப்படி துடித்துப் போவோம்..?
அதுவும் அவர்மேல் கொடும் பழி சுமத்தப்பட்டால்..? அவருக்குப் பிறந்தது மகனோ மகளோ அவர்கள் எப்படி அவரை மீட்க போராடுவார்கள் என்பதுதான் இந்த கதையின் மையப்புள்ளி.
இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற 60 வயது முதியவராக வரும் சிவாஜி ஒரு அடுக்கக காவலாளியாக இருக்கிறார். அந்த அடுக்ககத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்படுகிறார். நான்கு வடமாநில இளைஞர்களுடன் சேர்ந்து ஐந்தாவது ஆளாக அவரும் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டார் என்பது காவல்துறையினரின் குற்றச்சாட்டு. (சில வருடங்களுக்கு முன் இதே போன்று ஒரு சம்பவம் சென்னை அயனாவரத்தில் நிகழ்ந்தது நினைவிருக்கலாம்…)
அவரது இரண்டு மகள்களில் மூத்தவர்தான் இந்தக் கதையின் நாயகியான சாய் பல்லவி. பள்ளி ஆசிரியையாக வரும் அவர் காதலித்தவனையே கைப்பிடிக்கும் நோக்கத்தில் இருக்கும்போது இந்தப் பேரிடி அவரை வந்து தாக்க, தன் அப்பாவை இந்தப் பழியில் இருந்து காப்பாற்ற எப்படிப் போராடுகிறார் என்பதுதான் கதை.
இதுவரை பாலியல் குற்றங்கள் இடம் பிடித்த கதைகளில் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையிலேயேதான் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதை மாற்றி முதன்முறையாக குற்றம் சுமத்தப்பட்டவரின் பார்வையில் இருந்து கதை சொன்னதே இந்த வகையில் முதல் முறை எனலாம். சமுதாயத்துக்குத்தான் அவர் குற்றவாளியே தவிர அவருக்கென்று இருக்கும் குடும்பத்தினர் அதற்காகக் கையைக் கட்டிக்கொண்டு குற்றத்தை ஏற்றுக்கொண்டு சும்மா இருந்து விட முடியுமா என்ன..?
இந்தக் கதையை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கையாளலாம். ஆனால் இந்தப் படத்தின் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இந்த கதையை கையாண்டிருக்கும் விதம் அலாதியானது. ஒரு சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக நகரும் இந்தக் கதையில் ஃபேமிலி சென்டிமென்ட் பின்னிப் பிணைந்து கிடப்பது படத்தில் நம்மை ஒன்றச் செய்கிறது.
சாய் பல்லவிக்காகவே கதைகள் எழுதப்படுகின்றனவா அல்லது அவர்தான் இப்படிப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறாரா என்பது புரியவில்லை. ஒரு பருவப் பெண்ணான அவரது தந்தை பாலியல் குற்றத்தில் ஈடுபட்டார் என்ற பழி சுமத்தப்பட இன்னொரு புறம் ஒட்டுமொத்த சமுதாயமும் கையறு நிலையில் அவரை ஆக்க, தனி ஒரு மனுஷியாக நின்று எப்படி அப்பாவைக் காப்பாற்ற போராடுகிறார் என்பதை அங்குலம் அங்குலமாக அல்ல… மில்லி மீட்டர் மில்லி மீட்டராக பூரணத்துவத்துடன் சொல்லி அந்தக் குடும்பத்து உறுப்பினராகவே நம்மையும் ஆக்கி இருக்கிறார் இயக்குனர்.
மலர் டீச்சரோ, ரவுடி பேபியோ அல்லது இந்த படத்து கார்கியோ எதுவானாலும் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடும் திறமை சாய் பல்லவிக்கு சர்வ சாதாரணமாக வாய்த்து இருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை படும் வலியை ஒருபுறம் உணர்ந்தாலும் தன் தந்தையைக் காப்பது மட்டுமே லட்சியம் என்கிற அளவில் எடுத்த குறிக்கோளில் பின்வாங்காமல் சாய் பல்லவி நகர்த்தும் ஒவ்வொரு காய்களும் அற்புதம்.
எல்லாம் சரியானபடி முடிந்தது என்கிற ஒரு திருப்தியான வேலையில் குடித்துவிட்டு வந்த அப்பாவின் நண்பர் லிவிங்ஸ்டன் ஒரு சின்ன விஷயத்தை உளறிவிட அதிலிருந்து நுட்பமாக உண்மையைக் கண்டுபிடிக்கும் சாய் பல்லவியின் சாதுரியம் வியக்க வைக்கிறது. அதை வைத்து அவர் அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் ஆகப்பெரிய கிளைமாக்ஸை உறுதி செய்கிறது.
படங்களில் துணைப் பாத்திரமாக வரும் இவருக்கு இப்படி ஒரு கனமான பாத்திரமா என்று வியக்க வைக்கும் அளவில் சாய் பல்லவிக்கு உதவும் ஒரே துணையாக வருகிறார் காளி வெங்கட். புகழ்பெற்ற வழக்கறிஞரின் உதவியாளராக இருந்து கொண்டு அந்த வழக்கறிஞரே சாய் பல்லவிக்கு உதவ முடியாது என்று சொன்ன சூழலில் தன் திக்குவாய் குறையையும் பெரிதாக எண்ணாமல் சாய்பல்லவிக்காக வாதாட முன் வரும் காளி வெங்கட் மீது நமக்கு என்ன அவநம்பிக்கை வருகிறதோ அதேதான் சாய்பல்லவிக்கும் முதலில் வருகிறது.
ஆனாலும் இருக்கும் சின்ன வாய்ப்பில் முதல் பந்திலேயே பௌண்டரி அடிக்கும் போது “அடடே ..!” என்று ஆச்சரியமாக இருக்கிறது.
60 வயது முதிவராக வரும் எஸ்.ஆர்.சிவாஜி இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட தைரியத்தை முதலில் பாராட்டியாக வேண்டும். ஒவ்வொரு கணமும் அவருக்கு எதிராக இருக்கும் சாட்சியங்கள் இந்த சன்னமான மனிதர் என்ன பாடுபடப் போகிறாரோ என்று அவரை விடவும் நம்மை பயமுறுத்தவே செய்கின்றன.
சாய்பல்லவியின் அம்மா, தங்கை, இந்த வழக்கை மேற்கொள்ளும் இன்ஸ்பெக்டர், வழக்கை நடத்தும் திருநங்கையான நீதிபதி என்று ஒவ்வொருவரும் அந்தப் பாத்திரமாகவே வந்திருப்பது என்றோ அரிதாக தமிழ்ப் படங்களில் காணக் கிடைக்கிற அதிசயம்.
“என்னால்தான் ஒரு ஆணின் வலிமையையும் பெண்ணின் வலியையும் உணர முடியும்..!” என்று தன்னை நக்கலடிக்கும் பப்ளிக் புராசிக்யூட்டருக்கு நீதிபதியாக வரும் திருநங்கை சுதா உணர்த்தும் இடம் கைத்தட்டலுக்கானது.
இப்படியே தொடர்ந்து கைத்தட்ட படத்தில் ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன. அதில் “மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்னு சொன்னதை எல்லாம் நம்பாதே… ஒரு பெண் பூப்படைஞ்சுட்டா ஒவ்வொரு நாளும் அவளுக்கு சோதனைதான் ..!” என்று பத்திரிகையாளர் ஐஸ்வர்யா லட்சுமி சாய் பல்லவியின் தங்கைக்கு அவளது மஞ்சள் நீராட்டு விழாவில் அறிவுறுத்தும் இடம் அப்படியான ஒன்று. அங்கே பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கைதட்டுவதை அனுபவிக்கலாம்.
அதேபோல் ‘ சித்தப்பு’ வாக லந்தடித்த சரவணன் இந்தப் படத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் அப்பாவாக வந்து பேசும் ஒவ்வொரு வசனமும் நம் இதயத்தைப் பிசைய வைக்கிறது. ” என் மக என்னை அப்பாவா பாக்கல… ஒரு ஆம்பளையா பார்த்து விலகிப் போறா ..!” என்று அவர் அரற்றும்போது நமது ஈரல் குலையை அறுப்பது போல உணர்கிறோம்.
ஒரு இயக்குனர் மிகச் சிறந்தவராக அமைந்து விட்டால் மற்ற எல்லாமே சிறப்பாக அமைந்து விடும் என்பதற்கு இந்தப் படம் இன்னும் ஒரு உதாரணம். படத்தில் கோவிந்த் வசந்தாவின் இசையாகட்டும், ஒளிப்பதிவாகட்டும், படத்தொகுப்பு ஆகட்டும் ஒலி அமைப்பு ஆகட்டும் அத்தனையும் மிகத் துல்லியமாக இந்த படத்தில் பிணைந்திருக்கிறது – இயக்குனரால் கவனமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது.
எல்லாம் முடிந்த பிறகு யாரை கார்கி தன் எதிர்காலக் கணவனாக எண்ணி இருந்தாளோ, அவனே அவள் வீட்டின் வழி செல்லும்போது விசேஷம் நடக்கும் அவள் வீட்டை ஏறெடுத்துக் கூடப் பார்க்காமல் கடக்கும் ஒரு ஷாட் போதும் இயக்குனரின் திறமை சொல்ல – இதற்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூட மகளுடன் ‘கார்கி’ வீட்டுக்கு வருகிறார். கார்கியின் அப்பா கைதாகக் காரணமான ஐஸ்வர்யா லஷ்மியும் போன் போட்டுப் பேசுகிறார்… வாதாட முடியாது என்ற வழக்கறிஞரும் கூட குடும்பத்துடன் வந்திருக்கிறார்.
இத்தனை சீரியஸான ஒரு படத்தைத் திரையில் வைத்த கண்ணை எடுக்க முடியாமல், சிந்தனையை செல்போன் பக்கம் திருப்ப முடியாமல் படம் பார்க்கும் அனுபவம் இதுபோன்று எப்போதோ ஒருமுறைதான் வாய்க்கும்.
இதிகாசத்தில் நீதிமானாக வரும் பெண்ணின் பெயரான ‘கார்கி’யைத் தன் பெயரில் கொண்டிருந்தாலும் பழைய பஞ்சாங்கமாக இல்லாமல் புது யுகத்துக்கான புதுமைப் பெண்ணாக சாய் பல்லவி முன்னிறுத்தும் கிளைமாக்ஸ் இன்னும் பல காலத்துக்கு நம்மால் நினைக்கப்படும்.
தன் கணவனைக் காப்பாற்ற கண்ணகி போராடியது போல் தன் தந்தையைக் காப்பாற்ற இந்த கார்கி போராடுவதிலும் இலக்கியச் சுவையை உணர முடிகிறது. ஆனால், கண்ணகியும் செய்யத் துணியாத காரியம் கடைசியில் கார்கி செய்வது.
எப்படிப்பட்ட ரசனை உள்ளவர்களும் ஒட்டு மொத்தமாகப் பாராட்டும் படைப்புகளில் இந்த கார்கியும் ஒன்று. இந்த வருட தமிழ் சினிமாவின் டாப் 3 படங்களை பட்டியலிட்டால் அந்த மூன்று இடங்களில் ஒரு இடம் ‘கார்கி’க்காக ஒதுக்கப்படும்.
விருதுகள் குவியும் என்பதெல்லாம் சம்பிரதாயமான பாராட்டுகள்தான். அதைத் தாண்டி மக்களின் மனதில் அழிக்க முடியாத இடத்தில் உட்கார்ந்து கொள்வாள் ‘கார்கி’ என்பது மறுக்க முடியாத உண்மை.
கார்கி – புதுமைப் பெண்ணின் புதிய வடிவம்..!
– வேணுஜி
Related