ஒரே ஒரு வீடு, நான்கே பாத்திரங்கள் – இதை வைத்து சமூகத்துக்கு ஒரு செய்தியுடன் நீட்டான ஒருபடத்தைக் கொடுக்க முடியுமா?
‘முடியும் ‘ என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் அபிஷேக் லெஸ்லி. அப்படி என்ன கதை என்கிறீர்களா?
இன்றைக்கு நடுத்தர மக்களின் வாழ்க்கை எல்லாத் தேவைகளுக்கும் லோன் வாங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளது.
ஆனால், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதிலும் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி அதற்காகப் பல இடங்களில் கடன் பெற்று அதைத் திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகம்.
இதை வைத்து ஒரு கதையை ஒரே வீட்டுக்குள், அடுத்து என்ன என்ற அளவில் பரபரப்பான ஒரு நேர்த்தியான திரில்லராகக் கொடுத்திருக்கிறார் அவர்.
நாயகன் நிவாஸ் ஆதித்தன் கொரோனா காலத்தில் வேலையை இழந்து விடுகிறார். பிழைக்க வழி இல்லாததால் அவர் மனைவி எஸ்தர் நோரோனா வேலைக்கு செல்ல அவள் சம்பளத்தில் குடும்பம் நடக்கிறது.
ஆனால் சூதாட்டத்தில் விருப்பமுள்ள நிவாஸ் ஆதித்தன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி அதற்காகப் பல இடங்களிலும் பல லட்சம் கடன் வாங்குகிறார்.
ஒருநாள் அவர் மனைவி வேலைக்கு போய்விட, அந்நேரத்தில் இரண்டு மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நிவாசைக் கட்டிப்போடுகிறார்கள். கடனை வசூலிக்க வந்ததாகச் சொல்லும் அவர்களின் தேவை என்ன, அவர்களின் பிடியிலிருந்து நிவாஸ் தப்பினாரா என்பதுதான் கதை.
நாயகன் நிவாஸ் ஆதித்தன் நல்ல உடல் கட்டுடன் திறமையானவராகவும் இருக்கிறார். தன்னால் தன் குடும்பத்துக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்துடன் மனைவியும், மகனும் தன்னால் படப்போகும் அவமானத்தை எண்ணி வருந்துவது நெகிழ்ச்சியாக உள்ளது.
அவரது மனைவியாக வரும் எஸ்தர் வனப்பும், நடிப்பும் நன்று. கணவனின் மனச்சோர்வு தனக்கு எந்த சுகத்தையும் தரவில்லை என்று அவர் சிந்தும் சின்னக் கண்ணீரே சாட்சி சொல்கிறது.
வில்லனாக வரும் அபிநய்யைப் பார்த்து எவ்வளவு காலமாகிறது..? தன் ஸ்டைலிஷான உடை மற்றும் உடல் மொழியில் அசத்துகிறார். அவ்வப்போது போதையை ஏற்றிக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு சைக்கோ போலவே நடந்து கொள்ளும் அவர் நடத்தை, நடிப்பு போலவே தெரியவில்லை.
அவரது உதவியாளராக வரும் ஆத்விக் ஜலந்தரும் நியாயமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
சபரியின் ஒளிப்பதிவுக்குதான் ஒட்டுமொத்த டீமில் முதல் மதிப்பெண்ணே. ஒரே வீட்டுக்குள் எப்படி எல்லாம் கோணத்தை மாற்றி அமைக்கலாம் என்று அவர் முயற்சித்திருப்பது ஒரு பக்கம் இருக்க, நல்ல கலரிங் நேர்த்தியுடன் அதைத் தந்திருப்பதும் சிறப்பு.
ஜோ கோஸ்டாவின் இசையும் திருப்திகரமாக இருக்கிறது.
கதை எழுதி திரைக்கதை வசனத்தில் பங்களித்திருக்கும் அபிஷேக் லெஸ்லியே படத்தின் இயக்குனராகவும் இருப்பதால் கதைக்கு என்ன தேவையோ அதைத் தெளிவாக எடுத்திருக்கிறார்.
இரண்டாம் பாதி பரபரப்புடன் நகர முதல் பாதியில் கதை சூடு பிடிக்கும் வரை மந்தமாகவே செல்வதைத் தவிர்த்து இருக்கலாம்.
உண்மையிலேயே இப்படி எல்லாம் நடக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் இந்தக் கற்பனை சற்றே மிரட்டலாக இருக்கிறது – குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும், கண்ட மேனிக்கு கடன் வாங்கித் திரிபவர்களுக்கும்..!
Game of Loans – Deadly Game..!
– வேணுஜி