ஒரு நாள் இரவில் நடக்கும் வன்முறை களத்தில் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட பலரும் மாற்றி மாற்றிக் கொால்லப்படுகிறார்கள்.
அது ஏன் எதற்காக அதன் பின்னணி என்ன என்பதுதான் கதையாக விரிகிறது.
வன்முறையை கையில் எடுத்த அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரை கொல்ல ஒவ்வொரு குறிக்கோள் இருக்கிறது
நாயகன் அனிஷ் மாசிலாமணியும் கே.பி.ஒய் தீனாவும் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கையில் தீனா எதிர்பாராத விதமாக தாக்கப்படுகிறார்.
தாங்கள் கொலை செய்ய முயன்றவர்கள் தங்களை எப்படியும் தேடி வருவார்கள் என்ற நோக்கிலும் காயம்பட்ட தீனாவின் உயிரை காப்பாற்றும் நோக்கிலும் ஒரு இடத்தில் தலைமறைவாகிறார்கள்.
ஆனால், தீனாவோ அனிஷ் மாசிலாமணியை கொலை செய்ய திட்டமிடும் கூட்டம் ஒன்றுக்கு உவுகிறார்.
இன்னொரு பக்கம் தாதாவாக இருக்கும் மைன் கோபிக்கு ஒருவரை போட்டுத் தள்ளி எம்எல்ஏ ஆகும் திட்டம் இருக்கிறது.
மைம் கோபியின் திட்டம் நிறைவேறியதா..? அனிஷ் மாசிலாமணி கொல்ல முயன்றது யாரை, அவருடன் இருக்கும் தீனா அவரைக் கொல்ல முயல்பவர்களுக்கு ஏன் உதவி செய்கிறார் ? அதிலிருந்து அனீஷ் தப்பிக்க முடிந்ததா..? என்பதெல்லாம் மீதிக்கதை.
ஹீரோவாக நடித்திருக்கும் அனிஷ் மாசிலாமணி மீட்டருக்கு மிகாத நடிப்பின் மூலம் கவர்கிறார். சந்தர்ப்பவாசத்தால் தான் ரவுடியானது போல் தனது தம்பி அப்படி ஆகிவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஒரு அண்ணனாக மிளிர்கிறார்.
கே.பி.ஒய் தீனாவுக்கு இதில் லைஃப் டைம் கேரக்டர் எனலாம். சுமாரான கதாபாத்திரமாக அறிமுகமாகும் அவர் திடீரென்று திரைக்கதையையே திருப்பிப் போடும் அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறார்.

மைம் கோபி தனது வழக்கமான அனுபவ நடிப்பின மூலம் தனது பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார்.
அவர்களுடன் ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் உள்ளிட்டவர்கள் சின்ன சின்ன பாத்திரங்களில் வந்தாலும் கதைக்கு பெரிய அளவில் உதவி இருக்கிறார்கள்.
இயல்பான வெளிச்சத்தில் கண்முன் நடக்கும் வாழ்க்கையைப் போன்ற உணர்வை கொண்டு வர நினைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ், அதற்காகவே சற்று நீளமான காட்சிகளையும் பயன்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் டுமே ( என்ன பெயர் சார் இது..?) வித்தியாசமாக இருக்கட்’டுமே’ என்று சில ஒலிகளை எழுப்பி பரபரப்பைக் கூட்டுகிறார், பிரவீன்.எம்-ன் படத்தொகுப்புக்கு உயிர் கொடுக்கும் விதத்தில்.
எழுதி இயக்கியிருக்கும் ஹரி வெங்கடேஷ், வன்முறைக்களத்தை கையில் எடுத்திருந்தாலும் கதை சொல்லும் விதத்தில் அந்தந்த பாத்திரங்களின் கோணத்தில் சொல்லி இருப்பது சுவாரசியத்தை தருகிறது.
வெறும் ரத்தம், வெட்டு, குத்து என்று இல்லாமல் வன்முறைக் களத்தில் பின்னணியில் இருக்கும் மனித உணர்வுகளை பேசி இருப்பதால் இந்தப் படம் வித்தியாசப்படுகிறது.
எப்படியும் ஒரு வெள்ளிக்கிழமைதான் படம் ரிலீஸ் ஆகப்போகிறது – அது எந்த வெள்ளியாக இருந்தாலும் பொருந்துமே என்றுதான் ஃப்ரைடே என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
ஃப்ரைடே – கொலை கொலையாம் காரணமாம்..!
– வேணுஜி