‘தமிழ் படம்’ என்ற தலைப்பில் வந்த படம் இதுவரை வந்த எல்லா தமிழ் படங்களையும் ஸ்பூஃப் செய்து வந்தது போல் இது எல்லா ஃபேமிலி படங்களையும் ஸ்பூஃப் செய்யும் படமோ என்று நினைத்து விட வேண்டாம்.
மாறாக இந்த ஃபேமிலி படம் என்ற தலைப்பு இந்தக் கதையைத் தவிர வேறு எந்தக் கதைக்கும் இ த்தனை பொருத்தமாக இருக்குமா என்றும் தெரியவில்லை.
மூத்த சகோதரர் விவேக் பிரசன்னா வழக்கறிஞர், அதற்கு அடுத்த சகோதரர் பார்த்திபன் குமார் ஐடி ஊழியர் என்ற நிலையில் இவர்களின் கடைசி சகோதரராக நாயகன் உதய் கார்த்திக் மட்டும் சினிமா இயக்குனராக முடிவெடுத்து செட்டிலாகமல் இருக்கிறார்.
ஆனால் குடும்பம் மொத்தமும் அவர் எப்படியும் இயக்குனர் ஆகி விடுவார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தோழி ஒருவர் அதை கார்த்திக்குக்கு உற்சாகம் அளிக்க அவர் பேசும் போதெல்லாம் ஒரு நன்மை நடக்கிறது. அது தொடர்ந்து அவருக்கு இயக்குனராகம் வாய்ப்பு ஒரு பெரிய தயாரிப்பாளர் மூலம் கிடைக்க, அந்தப் படத்தில் ஒரு உச்ச நட்சத்திரம் நடிப்பதாக இருந்தும் கடைசி நேரத்தில் தயாரிப்பாளரின் சூது கவ்வி, அந்த இயக்க வாய்ப்பு பறிபோகிறது.
இப்படியே போனால் அதை கார்த்திக்கின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வியில் அவருடைய அண்ணன்கள் இருவரும் சேர்ந்து ஒரு முக்கிய முடிவு எடுக்கிறார்கள் அது என்ன என்பதுதான் கதை.
இந்த முயற்சியில் உதய் கார்த்திக்குக்கு காதலியாக மாறும் இன்ஸ்டாகிராம் தோழி சுபிக்ஷாவும் துணை இருக்கிறார்.
’டைனோசர்ஸ்’ படத்தில் நமக்கு அறிமுகமான நாயகன் உதய் கார்த்திக்கின் அடுத்த படம் இது., புதுப்பட வாய்ப்புக்காக அலைந்து திரியும் ஒரு உதவி இயக்குனர் பாத்திரத்தில் அற்புதமாக பொருந்தி இருக்கிறார்.
தயாரிப்பாளரிடம் கதை சொல்ல உட்காரும்போது காட்டும் உடல் மொழியிலும் அவரது சூது தெரிந்து கோபப்படும்போது காட்டும் ஏமாற்றத்திலும் பரிமளிக்கிறார் உதய் கார்த்திக். அவரே ஒரு ஹீரோ போன்று இருக்க அவர் எடுக்கும் படத்தில் ஏன் வேறு ஹீரோவை போட வேண்டும்..?
ஏற்கனவே இங்கு ஒரு சுபிக்ஷா இருக்க, இன்னொரு சுபிக்ஷாவாக களம் இறங்கி இருக்கிறார் இந்தப் பட நாயகி. அப்பாவித்தனமான அழகில் கவர்ந்தாலும், அவரைப் பார்த்தவுடன் பரிதவித்துப் போகும் உதயகுமாரை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
அவர் இயக்குனராகி தமன்னா, சமந்தாவை எல்லாம் நேரில் பார்த்தால் என்ன ரியாக்ட் செய்வார் என்று புரியவில்லை.
உதய் கார்த்திக்கின் சகோதரர்களாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார் மற்றும் அப்பா, அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீஜா ரவி, தாத்தா மோகனசுந்தரம் எல்லோருமே ஒரு குடும்பத்தைப் பார்த்த உணர்வை ஏற்படுத்தி இருப்பது படத்தின் முக்கிய பலம்.
பெண் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் காயத்ரி தொடக்கத்தில் மிரட்டுகிறார் போகப் போக என்ன செய்வாரோ என்கிற பதட்டத்தை ஏற்படுத்துகிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் காமெடியன் சந்தோஷின் நகைச்சுவை நடிப்பு கவனிக்க வைக்கிறது. சரியாக முயற்சி செய்தால் இப்போது இருக்கும் காமெடியன் பஞ்சத்தை அவர் தீர்க்க முடியும்.
மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு துருத்திக் கொண்டு தெரியாமல் ஒரு குடும்பத்தை நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
அனீவியின் இசையில் பாடல்கள் மற்றும் அஜீஷின் பின்னணி இசை படத்தின் நோக்கத்திற்கு உறுதுணையாக பயணிக்கிறது.
இதுவரை சினிமா பற்றி வந்த படங்கள் தமிழில் ஓடியதில்லை என்கிற சென்டிமெனட் இருந்தும் தைரியமாக இப்படி ஒரு கதையைச் சொல்லி படமாக்கி இருக்கும் இயக்குனர் செல்வகுமார் திருமாறனின் தில் ‘ வியக்க வைக்கிறது.
சினிமாவுக்கு வரும் இளைஞர்களின் வலயை சொல்லி இருந்தாலும் ஒரேயடியாக கண்ணீரை சிந்தாமல் நேர்மறை சிந்தனையுடன் படத்தை கொடுத்திருக்கும் அவருக்கு பாராட்டுகள்.
தலைப்பு கேட்கிறார் போல் ஃபேமிலியோடு சேர்த்து பார்க்க தகுதியான ஒரு படம் இந்த ஃபேமிலி படம்..!
– வேணுஜி