எத்தனைக் காலம்தான் காத்திருக்க வைத்தால்தான் என்ன..? கௌதம் மேனன் இயக்கத்தில் வந்திருக்கும் இந்த ‘தோட்டா’வில் இளமை சீறிப் பாய்வதைச் சொல்லியே ஆக வேண்டும்…
கதை என்று பெரிதாக ஒன்றுமில்லைதான். கௌதம் மேனனிடம் எப்போதும் இருக்கும் அதே ஸ்கிரிப்ட்தான். இதில் அண்ணன் சென்டிமென்ட் ஒன்று புதிதாக முளைத்திருக்கிறது. மற்றபடி தனுஷுக்கு மேகா ஆகாஷைக் கணடதும் காதல் வந்து அதைத் தொடர்ந்த பிரச்சினைகள்தான் கதை.
அவரது வழக்கப்படியே ஹீரோவின் நரேஷனிலேயே கதை பயணிப்பதிலும் வழக்கமான ‘மேனன் டெம்ப்ளேட்’தான். ஆனால், அதை இளமை பொங்கப் பொங்கப் பொங்க சொல்லியிருக்கும் விதத்தில் அந்த வித்தையை கௌதம் மேனனிடம் இளம் தலைமுறையினர் கற்க வேண்டும்.
ஒரு காதல் முகிழ்த்து அது இலை விட்டு கிளைவிட்டு மணம் பரப்பி மலராக நிற்கும் வித்தையை மனோஜ் பரமஹம்சாவின் கண் கொண்டு, தர்புகா ஷிவாவின் இசை பரப்பி அவர் சொல்லியிருக்கும் வனப்பைக் காணக் கண்கோடி வேண்டும்.
எப்போதோ வெளியாகியிருக்க வேண்டிய படம் இப்போது தாமதமாக வெளியானாலும் டிரென்ட் செட்டராக அப்டேஷனில் முன்னிலை வகிக்கிறது.
தனுஷைக் கல்லூரி மாணவனாக, தாடி வைத்த இளைஞனாக எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிறோம். அதேதான் இதிலும் என்றாலும் அதையே இத்தனை ஸ்டைலிஷ்ஹாகக் காட்டியிருப்பது மேனன் மேஜிக்.
அசராத தனுஷும் அனுபவித்து நடித்திருக்கிறார்.