January 23, 2026
  • January 23, 2026
Breaking News
December 27, 2019

இரண்டு பேர் நடிக்க 10 நாளில் உருவான டோலா

By 0 978 Views

இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது…

தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது,

“ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன். அதுதான் சினிமா. சினிமாவை நேசியுங்கள், அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள். நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் குடும்பமும் ஒரு காரணம். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தை எடுத்தேன். இப்படத்திற்குப் பிறகு ‘ரகுடு’ என்ற கேங்ஸ்டர் படத்தை அதிகப் பொருட்செலவில் எடுக்கவிருக்கிறோம்..!” என்றார்.

கதாநாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது,

“இந்த படத்தில் நாயகனாக நடிப்பதற்கு என்னை அழைத்து கதை கூறினார்கள். இரண்டு பேர் தான் என்றாலும் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் அனைவரின் கடுமையான உழைப்பால் 10 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். 

மேலும், சண்டைக் காட்சிகளில் நான் நன்றாக நடித்திருப்பதற்கு பாண்டியன் மாஸ்டர் தான் காரணம். சிலம்பம் முதல் எனக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். நாயகி பிரேர்னாவும் சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்..!” என்றார்.

கதாநாயகி பிரேர்னா பேசும்போது,

“இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு தமிழ் தெரியாததால் கதாநாயகன் ரிஷி ரித்விக் படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உதவி புரிந்தார்..!” என்றார்.

இயக்குநர் ஆதிசந்திரன் பேசும்போது,

“இப்படத்தைப் பற்றி பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றது. நான் ஏகலைவன் போல் இயக்குநர் பாக்யராஜிடம் இயக்கத்தைக் கற்றுக் கொண்டேன். பொதுவாக நான் பாடல்களிலும், இசையிலும் தலையிடுவேன். என் விருப்பத்திற்கேற்றாற்போல் இசையமைத்துக் கொடுத்த அணில் மற்றும் மணி இருவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளரைப் பற்றி காட்சிகளே கூறும். தயாரிப்பாளர் ஷாம் நல்ல மனிதர்..!” என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,

“டோலா’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்க்கும்போது ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் புதுமுகம் தான். காட்சி அமைப்புகளைப் பார்க்கும்போது ஒளிப்பதிவாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. கதாநாயகியும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போதும் நல்ல கதையம்சம் கொண்ட படம் வெற்றிபெறும். இப்படமும் வெற்றிபெற வாழ்த்துக்கள்..!” என்றார்.

நிகழ்ச்சியின் நிறைவாக ‘டோலா’ படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது. அதன்பின்பு ஜோக்கர்ஸ் கிரியேஷன்ஸ்-ன் இரண்டாவது தயாரிப்பான ‘ரகுடு’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.