இளைய வசூல் மன்னன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என அடுத்தடுத்து இரண்டு மெகா வெற்றிகளைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம், சீமராஜாவும் வெற்றிதான் என்ற உறுதியில் இருக்கும் அதே சமயம் ரசிகர்களின் வரவேற்பைக் காண்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார்.
“ஒரு மாணவர் பரீட்சை முடிவுக்கு காத்திருப்பதை போலவே நானும் காத்திருக்கிறேன்..!” என சிரிக்கிறார் பொன்ராம். முழு படக்குழுவும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், “எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு இருக்கிறது..!” என்கிறார்.
சிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணைந்தது பற்றி, “சீமராஜா மூலம் எங்கள் முந்தைய படங்களில் இருந்து நாங்கள் மேம்பட்டிருக்கிறோம். எங்கள் வழக்கமான பொழுதுபோக்கு விஷயங்கள்தான் பின்னணியாக இருக்கும், ஆனால் சில மாற்றங்களைக் கொண்டிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பொறுப்பு எனக்கு இருக்கிறது..!” என்கிறார் பொன்ராம்.
நடிகர்கள் மற்றும் படக்குழுவினரைப் பற்றி பேசும்போது, “படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பே சமந்தா தனது கதாபாத்திரத்திற்காக, முழு முயற்சியில் ஈடுபட்டார். அவர் சிலம்பம் பயிற்சி பெற்று, கேமராவின் முன்பு அதை நேர்த்தியாக செய்து காட்டினார். சூரி நிச்சயமாக எங்கள் குழுவில் மிகப்பெரிய பலம். உங்களை விலா நோக சிரிக்க வைப்பார்.
குழுவினர் அனைவரும் சீமராஜா ஒரு திருவிழா உணர்வைத் தருவதாக சொல்வதைக் கேட்பதில் மகிழ்ச்சி. அதற்கு முக்கியமான காரணம் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணிபுரிந்த நண்பர்கள்தான் என்று நான் கூறுவேன். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், கலை இயக்குனர் முத்துராஜ் மற்றும் இசையமைப்பாளர் டி இமான் இல்லாமல் இது நடந்திருக்காது..!” என்கிறார்.
சிம்ரன், நெப்போலியன், லால் மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருப்பதால் படம் முழ்தும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் என நம்பலாம். அத்துடன் ’24 ஏஎம் ஸ்டூடியோஸ்’ சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருப்பதோடு, தனது தனித்துவமான விளம்பரங்களால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.
விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 13) அன்று விநாயகர் ஊர்வலம் போலவே ஆர்ப்பாட்டமாக வெளியாகிறது ‘சீமராஜா’.