November 22, 2024
  • November 22, 2024
Breaking News
November 10, 2019

அருண்மொழி ஆவணப்பட ஆளுமை பற்றிய சில நினைவுகள்

By 0 842 Views

ஆவணப்பட இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் நேற்று (10-11-2019) காலமானார். அன்னாருக்கு அஞ்சலியான அவர் நினைவுகள் பற்றிய தொகுப்பு…

அருண்மொழி – தமிழ்க் குறும்பட வரலாற்றில் இவரது பங்களிப்பு தனித்துவம் மிக்கது. பண்ணையார்கள், அரவாணிகள், கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய இவரது பதிவுகள் மிக முக்கியமானதாகும்.

அருண்மொழி, சிறந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் வரிசையில் தவிர்க்க முடியாதவர். இன்றும் திரைப்படத்திற்கு இலக்கணமாகச் சொல்லப்படும் ருத்ரைய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ (1979) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 1986-ல் ‘காணிநிலம்’ எனும் முழுநீளத் திரைப்படத்தை இயக்கினார். இப்படம், இலண்டன், ஜெர்மனி திரைப்பட விழாக்களில் பங்கேற்றன. 1989-ல் ‘ஏர்முனை’ எனும் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் நாசர் ஹீரோவாக நடித்திருந்தார். உரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது.

அருண்மொழியின் ஆவணப் படங்கள்-

நிலமோசடி : 1985-ல் வெளிவந்த இந்த ஆவணப்படந்தான் பண்ணையார்களைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் விவரணப்படமாகும். வடபாதி மங்கலம் தியாகராச முதலியார், சௌகத் அலி, வலிவலம் தேசிகர், ஜி.கே.மூப்பனார் உள்ளிட்ட பண்ணையார்களின் நில மோசடிகளை அம்பலப்படுத்திய ஆவணப்படம் இது ஜி.கே.மூப்பனாரின் 4600 ஏக்கர் நிலம் பினாமிகள் பெயரில் இருப்பதை இப்படம் அம்பலப்படுத்தியது. மூப்பனாரை எதிர்த்துப் போட்டியிட்ட வலம்புரிஜான் இப்படத்தை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். 55 நிமிட படமிது.

பண்ணை வேலையார் ‘சோடாமாணிக்கம்’, காத்தமுத்து எம்.பி ஆகியோரின் நேர்காணல்கள் இதில் உண்டு. பொதுவுடை இயக்கத் தோழர்கள் பி.மாணிக்கம், சி.மகேந்திரன், ஆகியோரின் தூண்டுதலில் இப்படத்தை எடுத்துள்ளார் அருண்மொழி. கலை இலக்கியப் பெருமன்றம் இப்படத்தை தயாரித்தது. டெல்லி திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.

இசைவானில் இன்னொன்று –

இளையராஜாவைப் பற்றிய இந்த விவரணப்படம் 1992-ல் எடுக்கப்பட்டது. 80 நிமிடப்படம். ஜேசுதாஸ், செம்மங்குடி சீனிவாச ஐயர், கமல், சிவாஜி, மம்முட்டி எனப் பலரது நேர்காணல்கள் இதில் உள்ளன.

திருநங்கைகள் (அரவாணிகள்) பற்றிய விவரணப் படங்கள் :

வேறெந்த குறும்பட இயக்குநர்களை விடவும் திருநங்கைகள் பற்றி நிறைய பதிவு செய்திருப்பவர் அருண்மொழி.

Director Arunmozhi

Director Arunmozhi

மூன்றாவது இனம் –

2003 இல் வெளிவந்த இந்தப்படம் கோயம்புத்தூர் திருநங்கைகளைப் பற்றியது. முஸ்லீம்கள் வீட்டு விழாக்களில் திருநங்கைகள் கலந்து கொள்வது இதில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

அருணா – 2004-ல் வெளிவந்தது. அருணா எனும் திருநங்கை NGO வில் பணிபுரிகிறார். திருநங்கைகள் பிச்சையெடுக்கக் கூடாது. விபச்சாரம் செய்யக் கூடாது, என்கிறார் இவர். இவரது விரிவான நேர்காணல் இப்படத்தில் உள்ளது. திருநங்கைகள் சமூகத்திற்குள் சாதி மதம் கிடையாது என்பதை இவரது நேர்காணல் உணர்த்துகிறது. இவரது வளர்ப்பு மகள் மதுரை திவ்யா (சரவணனாக இருந்து திவ்யாவானவர்) M.Phil படித்துள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.

நூரியின் கதை – 2003-ல் வெளிவந்தது. நூர்முகம்மதுவாக இருந்தவர் ‘நூரி’யானார். அவரைப்பற்றிய ஆவணப்படம் இது. நூரியிடம் பிரீதம் சக்ரவர்த்தி பேட்டி காண்கிறார். பிறகு அவரே நூரியாகவும் இதில் நடித்துள்ளார். நூரி நிறைய பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானவர். பலரால் ஏமாற்றப் பட்டிருக்கிறார். 15 திருமணங்கள் செய்து கொண்டிருக்கிறார். பிராமண சமூகத்தைச் சார்ந்த ‘ஆஷா பாரதி’ எனும் திருநங்கை, இஸ்லாம் சமூகத்தை சார்ந்த நூரியின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் சாதி, மதம் இல்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும்.

‘இரண்டாம் பிறவி’ (1998) ‘கூடவாகம்’ (2004), நிர்வான் (2006) ஆகிய விவரணப்படங்களிலும் திருநங்கைகளைப் பற்றியே எடுத்திருக்கிறார்.

பெண்கள் பூப்பெய்தும்போது தீட்டு என்று ஒதுக்கி வைக்கப்படுவதைப் பற்றி ‘தோழி’ எனும் குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

Beware of commissions –

1998 -ல் திருநெல்வேலியில் தாமிரபரணியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டும் ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டும் 17 பேர் கொல்லப்பட்டனர். இதனை அம்பலப்படுத்தியது. ஆர்.ஆர்.சீனிவாசனின் ‘ஒரு நதியின் மரணம்’ ஆவணப்படம் இப்படுகொலையை விசாரிக்க நியமிக்கப்பட்டது நீதிபதி மோகன் கமிஷன். அந்த கமிஷன் கொடுத்த முரணான பொய்யான செய்திகளை அம்பலப் படுத்தும் ஆவணப்படம் Beware of commissions.

வங்கிகளிலும் கந்து வட்டிக்காரர்களிடமும் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கூட கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளைப் பற்றியும் ‘விடியல் வரும்’ (45 நி) எனும் குறும்படத்தை 2005 -ல் இயக்கியுள்ளார். அத்துடன் ‘Key Maker ‘ , சிறுதுளி ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். வல்லிக் கண்ணன் இன்குலாப், ராஜம் கிருஷ்ணன் போன்ற தமிழின் முக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.

இனி அவருடன் உரையாடியதிலிருந்து…

“திரைப்படத் துறையிலிருந்து குறும்படத்துறைக்கு வந்ததேன்?”

“ஏதேனும் ஓரிடத்தில் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தாக்கம்தான் காரணம். அத்துடன் விவரணப் படங்களில் பிரச்சினைகளை ஆழமாக சொல்ல முடியும். திரைப்படத்திற்கு ஆவதைப் போல் பெரிய செலவெல்லாம் கிடையாது…”

“குறும்படம் – விவரணப்படம் – திரைப்படம் குறித்து?”

“ஒரு சிறுகதையைப் போன்றது குறும்படம், கட்டுரையைப் போன்றது விவரணப்படம். தொடர் கதையைப் போன்றது திரைப்படம். குறும்பட இயக்கம் சனநாயகப் பூர்வமாகி விட்டதால் பெண்களும் இத்துறையில் எளிதாக ஈடுபடமுடிகிறது…”

உங்களுக்குப் பிடித்த குறும்பட இயக்குநர்கள்?

“பி.லெனின், அம்ஷன் குமார், ஆர்.வி.ரமணி, லீனா மணிமேகலை, பிரசன்னா ராமசாமி, ஆனந்த்பட்வர்த்தன், அரூர் கோபாலகிருஷ்ணன்…”

“இன்னும் சிறந்த குறும்படங்கள், விவரணப்படங்கள் வெளிவர உங்கள் ஆலோசனை என்ன?”

“சிறந்த ஆவணப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் தமிழக அரசு பரிசுகள் தரலாம். இயல் இசை நாடக மன்றம் போல் இதற்கென்று தனியாக ஓர் அமைப்பை ஏற்படுத்தலாம். நல்ல பதிவுகள் வரும்.

வெகுஜன மக்களின் எழுச்சி மிக்கப் போராட்டங்களைப் பதிவு செய்து எதிர்கால சமுதாயத்திற்குக் காட்டவேண்டி லத்தீன் அமெரிக்கா, பொலிவியா, சிலி, வியட்நாம் போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகின்ற டாக்குமெண்டரி இயக்கங்களைப் போல இந்தியாவில் நிகழவில்லை. அதுபோன்ற இயக்கங்கள் இந்தியாவிலும் உருவாகவேண்டும்..!” 

– பேட்டியாளர் :யாழினி முனுசாமி