ஏற்கனவே அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கித் தயாரித்துள்ள பூமராங், டிசம்பர் 21ல் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘அடங்க மறு’ வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் சமீபமாக பாலாஜி தரணீதரன் இயக்கி விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’யும் அவர்களுக்கு ஒருநாள் முன்னதாக அதாவது டிசம்பர் 20-ல் வெளியாகுமென்று அறிவித்தார்கள்.
இவை போதாதென்று இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாரி 2 உலகம் முழுவதும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருப்பதாக வுண்டர்பார் அறிவித்துள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப்பட டிரைலர் நாளை வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் இப்படத்திலிருந்து ‘ரௌடி பேபி’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நல்ல படங்கள் வெளியாவதும், அவற்றுக்குள் போட்டி இருப்பதும் நல்லதுதான். ஆனால், மேலே குறிப்பிட்டுள்ள நான்கு படங்களுமே தனித்தனியாக வெளியானால் நான்குமே வெற்றிபெறக் கூடியவைதான்.
ஆனால், ஒரே நாளில் வெளியாவதால் போதுமான திரைகளும், நேரமும் நான்கு பேருக்குமே சரியாக அமையாது. இதனால் படங்களின் வெற்றி கண்டிப்பாக பாதிக்கப்படும்.
இதில் படங்களின் படைப்புத் திறனில் போட்டி அமைவது மாறி, தியேட்டர்களைப் பிடிப்பதில் யார் வல்லவர் என்ற போட்டியே அதிகம் நிலவப் போகிறது. அது அவர்களுக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி நிறைவைத் தரப்போவதில்லை..!