July 7, 2020
  • July 7, 2020
Breaking News
January 9, 2020

தர்பார் திரைப்பட விமர்சனம்

By 0 318 Views

கிராமப்புறங்கள் நகர்மயமாக்கப்பட்டு திருவிழாக்கள் போன்ற பெருவிழாக்கள் வழக்கொழிந்துவிட்ட எந்திர வாழ்வில் சாமானியர்களுக்கு ரஜினி போன்ற நட்சத்திரங்களின் பட வெளியீடுகள்தான் திருவிழாக்கள் என்றாகிவிட்டது. அப்படி பொங்கல் விழாவை முன்னிட்டு வந்திருக்கும் திருவிழாக் கொண்டாட்டம்தான் ரஜினியின் ‘தர்பார்.’

உலகம் முழுக்க மலிந்துவிட்ட போதை மருந்து மாபியாக்கள் இந்தியா போன்ற நாடுகளைக் குறிவைத்து தன் கோரக்கரங்களை விரித்து பெருநகரங்களில் வியாபித்து விட்டார்கள். அப்படி மகாராஷ்டிரத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் போதை சாம்ராஜ்யத்தை போலீஸ் கமிஷனரான ஆதித்யா அருணாசலம் என்ற ரஜினி எப்படி வீழ்த்தினார் என்பதுதான் படத்தின் கதைக்களம்.

அதற்காகவே டெல்லியிலிருந்து மும்பைக்கு மாற்றலாகி வரும் அவர் உள்துறை அமைச்சகத்திடம் அந்தப்பணியை ஒத்துக்கொள்ளும்போதே முழுதும் முடிக்காமல் இங்கு திரும்பி வர மாட்டேன் என்கிறார். ‘முழுதும் முடிக்க’ அவரை விட்டுவிடுவார்களா சக்தி படைத்தவர்கள்..? அவருக்கு பல வகையிலும் தொல்லை கொடுக்க, அவர் எப்படித் தன் பணியை முடிக்கிறார் என்று அதகள அமர்க்களமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

காக்கியில் ரஜினியயைப் பார்த்து காலம் பலவாயிற்று. காக்கி இல்லாது போனாலும் ரஜினியின் கம்பீரம் மட்டும் எப்போதும் போல் ‘கிழி’தான்..! யாருக்கும் அடங்காத காட்டாற்று வெள்ளமாக அவர் ஒவ்வொரு கட்டத்திலும் வில்லத்தனத்துடனே தன் ஹீரோயிஸத்தைக் காப்பாற்றிக் கொள்கிறார். ‘போலீஸைப் பகைத்துக்கொள்ளாதே..!’ என்பதை அவர் “நீ போலீஸை ரைட்ல வச்சுக்கோ, லெஃப்ட்ல வச்சுக்கோ… ஆனா ஸ்டெயிட்டா வச்சுக்காதே..!” எனும்போது விசிலில் காது ‘கிழி’கிறது.

“நாலே நாள்ல உங்க ஃபிட்னஸை ப்ரூவ் பண்றது இந்த வயசுல சாத்தியமில்லை..!” என்று சொல்லும் மேலதிகாரியிடம், “உங்களை வச்சு நீங்க சொல்றீங்க. என்னை வச்சு நான் முடியும்னு சொல்றேன்..!” என்று அவர் பதிலடி கொடுப்பது அவரது சாதனைகளுக்காகவே எழுதப்பட்ட வசனம். 70 வயதில் என்ன வேகம்..? என்ன விவேகம்..?

கையசைவிலும், காலசைவிலுமே ஒட்டுமொத்த ரௌடி சாம்ராஜ்யத்தைத் தகர்த்துவிடக் கூடிய சாகசக்காரருக்குக் காதல் என்றாலே கால்கள் உதறுவதும், கைகள் டைப் அடிப்பதும் வாய் குழறுவதுமான போபியா வந்துவிடுவதை சூப்பர் ஸ்டார் அந்தஸ்து படைத்தவர்களைத் தவிர வேறு யாரும் செய்துவிட முடியாது. அதிலும் ஹீரோயிஸ  காமெடியிலும் ரஜினியே கிங் என்பதால் அந்தப் போர்ஷன்களை ‘ரென்ட்’ கொடுக்காமல் ரசிக்க முடிகிறது.

நடையிலும், அணியும் உடையிலும் கையிலிருக்கும் பொருள்களை அப்படித் தூக்கி வீசி லாவகமாகப் பிடிக்கும் ஸ்டைலையும் இந்த 40 வருடங்களில் எந்த ஹீரோவும் அவருக்குப் பின் செய்து ரசிக்க வைக்கவில்லை என்பதால் அவை இன்னும் புதிதாகவே இருக்கின்றன. அது இருக்கும்வரை அவர் நூறு கோடி என்ன.. அதற்கு மேல் கேட்டாலும் கொடுக்கும் ‘சினிமா இந்துஸ்தான்..!’

சூப்பர் நட்சத்திரங்களின் மகளாவதற்கு ஒரு சுழி வேண்டும் போல் இருக்கிறது. பாபநாசத்தில் சூப்பர் ஆக்டர் கமலுக்கு மகளான ‘நிவேதா தாமஸ்’. இதில் சூப்பர் ஸ்டாருக்கு மகளாகியிருக்கிறார். தான் மணமாகிப் போனபின் அப்பா தனிமரமாகப் போய்விடுவாரே என்று நிவேதா ரஜினியைக் காதலிக்கத் தூண்டுவது ‘2020 மகள்கள் ஸ்பெஷல்’. கடைசியில் அப்பாவுக்கு உருக்கமாக அவர் பதிவிடும் வீடியோ காட்சி ‘நெகிழ்ச்சி நம்பர் ஒன்..!’

மகளின் வேண்டுகோளின்படி ரஜினி காதலிப்பது நயன்தாராவை. தன்னைப் பின்தொடர்பவரைப் பற்றி போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுக்க நயன்தாரா கமிஷனர் ஆபிஸுக்கு அவர், அங்கே கமிஷனராக ரஜினியே இருக்க… அந்தக் காதல் எபிஸோட்கள் ‘கல கல’. அப்படி அவர் காதலிக்கும் சொதப்பல்களை வர்ணனை செய்து கொண்டிருக்கும் யோகிபாபு வரும் காட்சிகளும் ‘லக லக…’ அதிலும் காபி ஷாப்பில் 420 ரூபாய் ஆன பில்லுக்கு ரஜினி 210 ரூபாய் வைத்து மீதி ஷேரை நயன்ஸை வைக்கச் சொல்ல… அதை ஃபாலோ செய்து கொண்டிருக்கும் யோகிபாபு ஆகிறாரே ஒரு ஷாக், அது நமக்கு ‘காமெடி மில்க் ஷேக்..!’

ஆனால்… நயன்ஸுடன் ஒரு அவுட்டோர் டூயட் கூட இல்லாமல் இருப்பது வெறிச்சென்றிருக்கிறது. அப்படி ஆடும் ஒரு இன்டோர் டூயட்டைப் பார்க்கும் நயன்ஸின் கஸின் பிரதர் ஸ்ரீமன் அவர்கள் காதலுக்கே ‘டோல்’ போடுவதும் தேவையற்ற காட்சி.

ரஜினி – நயன்ஸின் காதலை நாம் ஏற்கனவே பார்த்திருக்க, இப்போது யார் வந்து என்ன கேட்க முடியும்..?

‘ரஜினியிஸம்’ என்ற ‘பினாமினனே’ லாஜிக் மீறிய ரசிப்புதான் என்றிருக்க, அவர் மோட்டா மோட்டாவான 30 பேரை இன்னும் அடித்துத் துவைப்பதை ரசிகர்கள் ஆரவாரித்து ரசித்துக்கொண்டிருக்க, அவருக்கும், நயன்ஸுக்குமான ஜோடிப்பொருத்தமும் நம்மை உறுத்தாமலிருக்க அவர் படத்திலேயே அவர் வயது குறித்து அங்கங்கே.. அதிலும் குறிப்பாக காதலிலும் விவாதிப்பது பொருந்தவில்லை.

அதுவும் யோகி பாபு முதற்கொண்டு “உங்களைவிட இங்கே பெரியவர்னா அது போதிதர்மர் மட்டும்தான்..1” என்று காமெடி செய்து ரஜினியை ஓட்டுகிறார். ரஜினிக்கும், ரஜினியிஸத்துக்கும் மூப்பு வர வாய்ப்பேயில்லை முருகதாஸ் சார்..!

ஹீரோ ரஜினியே செய்யும் வில்லத்தனங்களுக்கு இடையில் முக்கிய வில்லன் சுனில் ஷெட்டியின் வில்லத்தனங்கள் எடுபடவில்லை. உலகின் போதை சாம்ராஜ்யத்தின் அடுத்த தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளும் அவர், ரஜினியைப் பழிதீர்ப்பது எப்படி இருக்கும் என்று நாம் பயந்து கொண்டிருக்க, அவரோ ரஜினி போகும் காரின் மீது லாரியை ஏற்றிக் கொல்ல முனைகிறார். இதைச் செய்வதற்குதானா ஃபாரீனிலிருந்து இந்தியா வந்தார் ஷெட்டி..? உள்ளூர் டிப்பர் லாரி டிரைவரே சில ஆயிரங்களில் அந்த வேலையை முடித்திருக்கக் கூடும்.

மெயின் வில்லன் ரஜினிக்கு செய்யும் கெடுதல்களை விட ஒரே காட்சியில் வரும் ஸ்ரீமன் நயமாகப் பேசியே ரஜினியின் காதலுக்கு ‘கத்திரி’ போட்டு கவனிக்க வைக்கிறார்.

படத்தில் அரசியலே இல்லையே என்று யோசித்து ஓரிடத்தில் “சௌத்ல கூட ஒரு குற்றவாளி இப்படி ஜெயில்லேர்ந்து வெளிய போய்ட்டு வர்ராங்கன்னு கேள்விப்பட்டேன்…” என்று ஒரு அதிகாரி பேசுவதாக வசனம் எழுதி திருப்திப்பட்டிருக்கிறார் இயக்குநர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு ரஜினியின் கிளாமரைக் குறிவைத்தே பயணப்பட்டிருக்கிறது. அனிருத்தின் இசை ரஜினியின் பிரமாண்டத்துக்கு ஈடு செய்யவில்லை. பின்னணி இசையில் திரை ‘கிழி’ந்துவிடுமோ என்று பயமேற்படுகிறது. 

போதையில் இளைய சமுதாயம் சீரழிவதும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் இன்றைக்கு பெற்றவர்களை பயமுறுத்தும் சமுதாய சீரழிவுகள். அதை வேரறுக்க சங்கநாதம் முழங்கியிருக்கும் முருகதாஸும், ரஜினியும் பாராட்டுக்குரியவர்கள்.

ரஜினிக்காக… ரஜினியால்… நிறுவப்பட்ட ‘ஆக்‌ஷன் தர்பார்..!’

– வேணுஜி