வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் டேனி திரைப்படம். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு ‘மக்கள் செல்வி’ என்னும் பட்டப்பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது .
நேரடியாக ஓடிடியில் ஆகஸ்ட் 1ல் வெளியாவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது. இதன் ஒளிபரப்பு உரிமையை ஜீ 5 நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இந்த திரைப்படத்தை சந்தான மூர்த்தி இயக்கியிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் உடன் சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார்.
ஆன்லைனில் ரிலீசான இரண்டு திரைப்படங்களும் முதன்மை கதாபாத்திரத்தில் பெண்கள் நடித்த திரைப்படம் என்பதும் இதில் இரண்டாவதாக ரிலீஸான பெண் குயின் கொஞ்சமும் சோபிக்காமல் போனதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது வெளியாகும் படத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படி பெண்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்து பிரபல விநியோகஸ்தரிடம் பேசிய போது, ‘இப்படி ஒரு படத்தை வாங்கி மூனு, நாலு மொழிகளில் ரிலீஸ் பண்ணி ஹிட் அடிக்கறாங்க. உண்மையில் இந்த கொரோனாவின் தாக்கத்தால் ஓடிடி பார்வையாளர்களின் எண்ணிக்கை 500 மடங்கு அதிகரிச்சிச்சு இருக்குது.
இச்சூழல் மாறியதும் ஓடிடி படுத்து விடும் என்பது உண்மை. ஆனாலும் குறைச்சலா இன்வெஸ்ட் பண்ணி எதிர்பார்த்ததுக்கு அதிகமா இலாபம் பார்க்கறாங்க ஓடிடி. சினிமா என்பது வியாபாரந்தானே.
இப்பக் கூட ஒரு கோடி ரூபாய்-க்குள்ளே பட்ஜெட்-டில் எடுத்த டேனிக்கு தியேட்டர் கிடைக்கிறதே கஷ்டமா இருக்குன்னு ஓடிடியில் ரிலீஸ் செய்யறாய்ங்க. இப்ப ராம் கோபால் வர்மா தொடங்கி சிவி குமார் வரைக்கும் ஆளாளுக்கு ஓடிடி ரெடி பண்ணிட்டதா நியூஸ் வருது.
போற போக்கைப் பார்த்தா சினிமா தயாரிக்கறதை விட ஓடிடி ஓப்பன் பண்ணி வச்சிக்கிட்டு துட்டு பார்க்க நினைக்கும் சினிமாவாலாக்கள் அதிகமாகிடுவாய்ங்க போலிருக்கு…” என்றார்.
அப்படித்தான் போலிருக்கு..!