உலகம் எப்போதும் நிலையாக ஒளியுடன் இருந்தாலோ அல்லது முற்றிலும் இருளாக இருந்தாலோ பேய் பற்றிய பயமே இல்லாமல் இருக்கும். ஒளியும், இருளும் கலந்து நிற்பதுவே பயத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல்தான் ஒலி விஷயத்திலும்..!
இந்த உண்மையைச் சரியாக புரிந்து, அதை லாவகத்துடன் பயன்படுத்தினால் ஒளி, ஒலியை அடிப்படையாகக் கொண்ட சினிமா செல்லுலாய்டில் பேய் பற்றிய பயத்தை ஏற்படுத்த இயலும் எனபதைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் அஷ்வின் சரவணன் இந்தப் படத்தின் மூலம்.
ஆனால், பேய்ப் படங்கள் பலவற்றையும் பார்த்து சலித்துவிட்ட நமக்கு இதில் ஏதும் புதிதாக இருக்கிறதா..? இருக்கிறது..!
இதுவரை ‘லைவ்’வாக பயமுறுத்திக் கொண்டிருக்த பேய், இந்தப்படத்தில் ஆன் லைனில் வர, அதை ஓட்டுவதும் ஆன் லைனில்… என்பது கண்டிப்பாக புதுமைதான்.
அப்பா சத்யராஜ், கணவர் வினய் மற்றும் பெண் குழந்தை ஹனியா நபீசாவுடன் ஆனந்தமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு கொரோனா லாக் டவுன் ஒரு பேரிடியாக அமைகிறது.
மருத்துவரான வினய், கொரோனா வார்டில் போராடி நோயாளிகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் தானும் கொரோனா பாதித்து பலியாகிறார். திடீரென்று அப்பா இறக்கவே அவரை ஒரு ஆவித் தொடர்பாளர் மூலம் அழைத்துப் பேசப் போய், ஆன்லைன் வழியே ஒரு கொடூரப் பேயை வீட்டில் நுழைய விட்டு சிறுமி ஹனியா நபீசா பயங்கரத்துக்கு உள்ளாகிறார்.
அதனிடமிருந்து எப்படித் தன் மகளை நயன்ஸ் மீட்கிறார் என்கிற மெல்லிய லைன்தான் கதை. ஆனால், அதை நவீன தொழில் நுட்ப உத்திகளைக் கைக்கொண்டு மிரட்டி இருக்கிறார் இயக்குனர்.
நயன்தாரா நன்றாக நடிப்பார் என்பது உலகுக்கே தெரிந்த விஷயம். ஆனால், அவரே இன்னும் கனவுக் கன்னியாக இருக்கும் நிலையில் ஒரு பதின்பருவ வயதுப் பெண்ணுக்கு அம்மாவாக நடிக்க ஒத்துக் கொண்டது அபார அர்ப்பணிப்பு.
பாசம், அன்பு, பயம், பதற்றம் எல்லா உணர்ச்சிகளையும் அழகாக அதே சமயம் அளவாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் நயன்ஸ்.
அதே சமயம் அவருக்கு இணையாக அற்புத நடிப்பில் அசத்தி இருப்பது அவரது மகளாக வரும் ஹனியா நபீசாதான். என்ன ஒரு அசுர அல்லது பேய்த் தனமான நடிப்பு..?
தனியாக வெளிநாடு சென்று தன்னால் வாழ்ந்து விட முடியும் என்று அம்மாவிடம் வாதம் செய்யும் தைரியம் என்ன..? ஆனால், ஒரு பேயிடம் சிக்கிக் கொண்டு படும் துன்பங்கள்தான் என்ன..? ஒவ்வொரு கட்டத்திலும் அந்தச் சின்னப் பெண் படும் துன்பங்கள் கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள்.
சின்னக் கேரக்டர் என்றாலும் அளவாக, ஆழமாக செய்திருக்கிறார் வினய். சமீப காலமாக வில்லனாகப் பார்க்க நேர்ந்த அவரை இதில் நேர்மறையாகப் பார்க்க நேர்ந்தது சிறப்பு.
சத்யராஜின பாத்திரமும் அப்படியே. மகள் மற்றும் பேத்தியின் நிலை கண்டு நிலை குலைந்து போகும் அவர் நடிப்பு … கட்டப்பாவா இவர் என்று சந்தேகிக்க வைக்கும் அப்பப்பா நடிப்பு..!
இவர்களுடன் மும்பைப் பாதிரியாராக வரும் இந்தி நடிகர் அனுபம் கேர். உட்கார்ந்த இடத்தில் இருந்தே அத்தனை உணர்வுகளையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கும் அனுபம் கேர் நடிப்பில் அனுபவமும், குழந்தை மீதான care-ம்..!
ப்ருத்வி சந்திரசேகரின் இசை, மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் ஒளிப்பதிவு, ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பு மற்றும் ஒலிப்பதிவு என்று எல்லா அம்சங்களுமே அதனதன் அதிகபட்ச நேர்த்தியுடன் பங்களித்திருக்கின்றன.
பாராட்ட இத்தனை அற்புதங்கள் இருந்தும் நம்மைப் படத்துடன் கனெக்ட் ஆக விடாமல் செய்யும் விஷயம், நாம் அறிந்த வாழ்க்கை முறையில் இல்லாமல் மேல்நாட்டு நாகரிக வாழ்க்கை முறையில் அமைந்த நயன்ஸ் வாழ்க்கைதான்.
துணை இல்லாமல் தனியாக வசிக்கும் நிலையில் உடல் மற்றும் மனநிலை பாதித்த குழந்தையை அப்படியா இருள் அடைந்த தனியான மாடி அறையில் வைத்திருப்பார் நயன்ஸ்?
மாடி ஏறி அந்த அறைக்குச் செல்வதற்குள்ளேயே பேய் இல்லாவிட்டாலும் கூட நம்மை பயம் பற்றிக் கொள்வது நிச்சயம்.
வெளிநாடு அனுப்புவதில் அத்தனை தயக்கம் காட்டும் தாய் அப்படியா உணவு, தண்ணீர் கொள்ளாமல் கிடக்கும் குழந்தையைத் தனியாக விட்டிருப்பார்..? அதைவிட அந்த லாக் டவுனில் தனி வீட்டில் அவருக்கு அப்படி என்ன வேலை..?
அதேபோல் நயன்சுடன் ஆன் லைனில் பேசும் அத்தனை பேருக்கும் அந்த வீட்டில் பேய் இருக்கும் அடையாளம் தெரிந்து விட, மகளும் இனம் புரியாத பீதியில் இருக்க, நயன்ஸுக்கு மட்டும் எந்தப் பதட்டமும் இல்லை என்பது நம்பும்படி இல்லை.
செல்போன் சார்ஜ் செய்ய மட்டும் இருக்கும் மின்சாரம், மற்ற நேரங்களில் இல்லாமல் எந்நேரமும் அந்த வீட்டில் மெழுகு வர்த்தி மட்டுமே எரிந்து கொண்டிருக்கிறது.
நம்மை பயமுறுத்துவது மட்டுமே நோக்கம் என்பதை மாற்றி இன்னும் நம்பகத்தை ஏற்படுத்தி இருந்தால் நம்மை நன்றாகவே ‘எங்கேஜ்’ செய்திருக்கும் படம்.
கனெக்ட் – அங்கங்கே ஆகிறது டிஸ்கனெக்ட்..!