November 22, 2024
  • November 22, 2024
Breaking News
October 1, 2024

செல்ல குட்டி திரைப்பட விமர்சனம்

By 0 210 Views

பெரிய ஹீரோக்கள் கிடைக்காத சின்ன பட்ஜெட் படங்களுக்குக் கதைதான் ஹீரோ. இந்த உண்மையைப் புரிந்து கொண்டிருக்கும் இயக்குனர் சகாயநாதன் நமக்கு நன்றாகத் தெரிந்த களத்தில்… ஆனால் சற்றே வித்தியாசமான கதையைச் சொல்லி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். 

அவருக்கு மிகவும் கை கொடுத்திருக்கிறது ‘சிந்து நதிப்பூ’ பட இயக்குனர் செந்தமிழனின் திரைக்கதை, வசனம். 

90களில் நடக்கிறது கதை. அதனால் படத் தொடக்கத்திலேயே ‘தகவல் தொடர்புக்கான சாத்தியங்கள் இல்லாத சூழலில் இளைஞர்கள் எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள சிரமப்பட்டார்கள் என்பதுதான் களம்…’ என்பதைச் சொல்லியே தொடங்குகிறார் இயக்குனர். 

பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் நாயகி தீப்ஷிகா அவரது உறவுக்காரர் டிட்டோ, மற்றும் வசதி இல்லாத மாணவன் ஶ்ரீ மகேஷ் இருவரிடமும் நெருங்கிப் பழகுகிறார். மகேஷின் ஏழ்மைக்காக தீப்ஷிகா அவரிடம் காட்டும் பரிவு, மகேஷால் காதலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையில் தீப்ஷிகா காதலிப்பது டிட்டோவைத்தான்.

இந்தத தவறான புரிந்துகொள்ளல் மூவரின் வாழ்க்கையையும் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதுதான் முழுக் கதை. 

ஆரம்பத்தில் நல்லவராகவும்  புத்திசாலியாகவும் இருக்கும் மகேஷ் எப்படி காதல் உள்ளே வந்ததும் தறி கெட்டுப் போய் தவறுகளை அடுக்கடுக்காக செய்கிறார் என்று புரியும்போது நமக்கே அவரைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. அது எல்லை மீறிப் போகும்போது கோபமாகவும் வருகிறது.

நியாயப்படி பார்த்தால் டிட்டோதான் வில்லனாக மாறியிருக்க வேண்டும். ஆனால் அவர் பக்கா ஜென்டில்மேனாக நடந்து கொண்டு நிஜ ஹீரோ ஆகிறார். என்னதான் தீப்ஷிகா, மகேஷைக் காதலிக்கவில்லை என்றாலும் நண்பன் காதலித்த பெண்ணைத் தான் மணந்து கொண்டால் அது நண்பனுக்கு செய்யும் துரோகம் என்று அந்த திருமணத்தையே மறுக்கும்போது உயர்ந்து விடுகிறார் டிட்டோ. 

காதலிக்கத் தோதான அழகும், பருவமும் ஒருங்கே அமையப் பெற்று இருக்கிறார் தீப்ஷிகா. கையருகே காதலன் இருந்தும் அவனைக் கைப்பிடிக்க முடியாமல் போய், யாரையோ திருமணம் செய்து அந்த வாழ்க்கையும் கைநழுவிப் போகும் அவரது நிலை பரிதாபம். 

இன்னொரு மாணவியாக வரும் சிம்ரனும் அழகில் தீப்ஷிகாவுக்கு குறையாமல் இருக்கிறார். அவரும் அடுத்தடுத்த படங்களில் நாயகியாக முயற்சி செய்யலாம்.

கல்லூரி முதல்வராக மதுமிதா, பேராசிரியராக சாம்ஸ் இருந்தால் அந்தக் கல்லூரி எப்படி இருக்கும் என்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. அவர்களும் நம்மை சிரிக்க வைக்க பெரும் முயற்சி செய்திருக்கிறார்கள்.

பிற வேடங்களில் திடியன், சாப்ளின் சுந்தர், மணி, லட்சுமி, புஷ்பதா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

டி.எஸ்.முரளிதரனின் இசையில் பாடல்கள் 90களில் நாம் கேட்டு ரசித்த பாடல்களின் தரத்திலேயே அமைந்திருப்பது சிறப்பு.

ஒளிப்பதிவாளர் பால் லிவிங்ஸ்டன் தன் பணியைச் செவ்வனே செய்து இருக்கிறார்.

பெரிய நிறுவனங்களே சரியான கதை அமையாமல் தடுமாறிக் கொண்டிருக்க, சிறிய பட்ஜெட்டில் நியாயமான கதையுடன் களம் இறங்கி இருக்கும் இந்தக் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். 

இந்தப் படத்தின் கடைசி 20 நிமிடம் யாரும் யூகிக்க முடியாமல் செல்வது பெரிய பலம். 

இப்படிப்பட்ட சிறிய முயற்சிகளை கண்டிப்பாகக் கைகொடுக்க வேண்டும்.

செல்ல குட்டி – திரைக்கதை கெட்டி..!

– வேணுஜி