ரஜினி, ஜோதிகா, நயன்தாரா நடித்த சந்திரமுகி படம் ஒரு பிராண்ட். அந்த பிராண்டின் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை முறையே ராகவா லாரன்ஸ், லட்சுமி மேனன் போன்ற இடைநிலை நடிகர், நடிகைகளை வைத்து ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பி.வாசு.
கதை அப்படியே முந்தைய சந்திரமுகியை நகலெடுத்ததுதான் என்றாலும் அதில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்.
சம்பவம் நடந்த அதே சந்திரமுகி பங்களா இப்போது வடிவேலு வசம் இருக்கிறது.
பல காலம் வழிபடாமல் விட்ட தங்கள் குலதெய்வம் துர்க்கை அம்மனை வழிபட்டு விட்டு வந்தால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும் என்று குடும்ப சாமியார் ராவ் ரமேஷ் சொல்லிவிட இந்த சந்திரமுகி பங்களாவுக்கு காட்டன் மில் ஓனர் ராதிகாவின் ஒட்டுமொத்தக் குடும்பமும் வந்து சேர்கிறது.
ராதிகாவின் மூத்த மகள், இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கிறார்கள். இப்போது அவர்களின் இரண்டு குழந்தைகள் மட்டுமே எஞ்சி இருக்க அவர்களையும் அங்கே வரச் சொல்லி குலதெய்வ வழிபாட்டில் கலந்து கொள்ள வைக்க ஏற்பாடு செய்கிறார்கள்.
அந்த இரண்டு குழந்தைகளுடன் அவர்களது கார்டியனான ராகவா லாரன்சும் வருகிறார்.
அந்த பங்களாவில் எங்கு வேண்டாமானாலும் யாரும் போகலாம் – வரலாம். ஆனால், சந்திரமுகி முதல் பாக கிளைமாக்ஸ் நடந்த அந்த அறையும் , சந்திரமுகி இருந்த அறையும் இருக்கும் தெற்கு திசைப் பக்கம் யாரும் போக வேண்டாம் என்று வடிவேலு எச்சரிக்கிறார்.
ஆனால் யாராவது அங்கே போனால் தானே படமே நகரும்..? அப்படி துர்க்கை அம்மன் கோவிலில் சுத்தம் செய்ய போய் வேட்டையனை உயிர் கொண்டு எழுந்து வரச் செய்ய, சும்மா இருந்த சந்திரமுகி ஆவி மீண்டும் வேட்டையனை விதி முடிக்க கிளர்ந்து வருகிறது.
எல்லா ஆவிகளும் யார் மீதாவது வரத்தானே வேண்டும்? அப்படி சந்திரமுகியின் ஆவி யார் மீது வருகிறது, வேட்டையன் ஆவி யார் மீது வருகிறது என்பது சஸ்பென்ஸ். ஆமாம்… பெரிய சஸ்பென்ஸ் என்பவர்கள் நீங்களே யூகித்து உங்களுக்கு மார்க் போட்டுக் கொள்ளுங்கள்.
தான் உண்டு, தன் விக் உண்டு, கலர் கலரான தன் சட்டைகள் உண்டு, தன்னைப் பார்த்து கெக்கே, பிக்கே என்று சிரிக்கும் ரசிக்கப்பட்டாளங்கள் உண்டு என்று ராகவா லாரன்ஸ் எல்லாப் படங்களிலும் எதைச் செய்வாரோ அதையே இதிலும் செய்திருக்கிறார். கூடவே நடனம் போன்ற சண்டையும், சண்டை போன்ற நடனமும் கூட செய்திருக்கிறார்.
போன படத்தில் ஆவியும் இல்லை பேயும் இல்லை எல்லாம் உளவியல் சிக்கல் என்று கதை சொன்ன பி.வாசு, இந்த பாகத்தில் எல்லாமே விதியின் செயல் என்று ஆவியின் தலையில் சாத்தியம் செய்து நம்மை நம்ப வைத்து விடுகிறார்.
அதனால் வாழ்ந்த சந்திரமுகிக்கு ஒரு உருவம் தேவைப்பட அந்த வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். கொடி போன்ற உடலும் அதை அசைத்து அசைத்து கங்கனா நடக்கும் அழகும் ஒரு பூச்செடியே நடந்து வருவது போல் இருக்கிறது.
லக்ஷ்மி மேனன் படத்தில் இருப்பதையே கொஞ்சம் மறைத்து வைத்தது போல் இருக்கிறது. அவருக்கு சிறப்பான பாத்திரம் வாய்த்திருக்க இருக்கிற கண்களை உருட்டி உருட்டி அவரும் பயமுறுத்தியிருக்கிறார்.
எப்பேர்ப்பட்ட சவாலான பாத்திரங்கள் ஆனாலும் அதை ஊதி தள்ளிவிடும் ராதிகாவுக்கு இதில் வந்து நின்று வசனம் பேசும் வேடம் மட்டுமே. அதை மூச்சு விடுவது போல சாதாரணமாக செய்துவிட்டு போகிறார். அவருடன் சுரேஷ் மேனன், ரவி மரியா விக்னேஷ் இன்னும் இரண்டு புது முகங்கள் என்று ஒரு பட்டாளம் இருக்கிறது.
கடந்த சந்திரமுகியில் வந்த அதே பாத்திரத்தில் இதில் வடிவேலு வருகிறார். ஆனால் அதில் சிரிக்க வைத்ததை போல் இதில் சிரிக்க வைக்க அவரால் ஏனோ முடியவில்லை.
இந்தப் படத்துக்கு இடையில்தான் மாமன்னன் படத்தில் போய் சீரியஸாக நடித்து விட்டு வந்தார் போலிருக்கிறது. அந்த சாயல் நிறையவே தெரிகிறது.
வீட்டில் பூஜை செய்ய வேண்டும் என்று சாமியார் கிடைக்காமல் கையில் கிடைத்த டுபாக்கூர் சாமியார் மனோபாலாவை வைத்து பூஜை நடத்துகிறார்கள். பேயிடம் அடிவாங்கி பேய்மென்ட் கூட வாங்கி கொள்ளாமல் பறக்கிறார் அவர்.
பிறகுதான் குடும்ப சாமியார் ராவ் ரமேஷ் உள்ளே வருகிறார். மனோபாலாவை வைத்து அடித்த கூத்துக்கு இவரையே ஒரு டிக்கெட் போட்டு கூப்பிட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆர் டி ராஜசேகரின் கேமரா அந்த பங்களாவுக்குள் வளைந்து நெளிந்து பறந்து தவழ்ந்து எல்லா வேலையும் பார்த்து இருக்கிறது.
கடந்த படத்தை நினைவுபடுத்த அதேபோன்ற செட் அமைத்திருக்கும் தோட்டா தரணியின் கைவண்ணத்தைப் பாராட்டலாம்.
ஆஸ்கர் நாயகன் எஸ் எஸ் கீரவாணி இசையமைப்பில் பின்னணி இசை பிரம்மாண்ட படுத்தியிருக்கிறது. கங்கணா பாடும் பாடல் கர்நாடக இசை மிளிர கற்கண்டாக இருக்கிறது.
கடந்த படத்தில் வந்த பாடல்களின் பிலேஸ்மெண்டிலேயே இந்த படத்திலும் பாடல்களை வைத்திருக்கிறார் பி வாசு அத்துடன் கிட்டத்தட்ட அதே போன்றதொரு கிளைமாக்ஸ்.
ரஜினி இருந்த இடத்தில் ராகவா லாரன்ஸ் தான் இருக்கிறார் என்றாலும் அந்த மைண்ட் செட் உடனேயே வரும் பி அண்டு சி ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விடுமுறை விருந்தாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.
சந்திரமுகி 2 – அதே இடம்… நிரந்தரம்..!