வடசென்னைக் கதைகள் என்றாலே கால்பந்து விளையாடுவதும், வன்முறைக் களத்தில் ஈடுபடுவதும்தான் என்ற இலக்கணம்தான் தமிழ் சினிமாவில் எடுத்தாளப்படுகிறது.
இதிலும் அதேதான் என்றாலும் இளைஞர்களின் கால்பந்தாட்டக் கனவையும், வன்முறைக் களத்தையும் உள்ளது உள்ளபடி நடப்பது நடந்தபடி காட்டியிருப்பதுடன் இன்றைய தலைமுறை அந்த அடையாளங்களிலிருந்து மீண்டு சாதிக்க விரும்புவதைக் காட்டியிருக்கிறார் தமிழில் அதிக பட்ச விளையாட்டுப் படங்கள் எடுத்த இயக்குநர் சுசீந்திரன்..
இதில் ‘சாம்பியன்’ என்ற தலைப்புக்கு அவர் சொல்ல வரும் பொருளே வேறு. அடுத்த வேளைச் சோற்றுக்கும், அடுத்து என்ன என்ற கேள்விக்கும் விடை தெரியாத வாழ்க்கையில் பெயர்பெற்ற ஒரு அணியில் ஒரு இளைஞன் விளையாடத் தகுதி பெறுவதே ஒரு சாதனைதான் என்கிறார் அவர்.
அப்படி ஒரு சாம்பியனாகிறார் விஷ்வா எனும் புதுமுகம். அவர் முகம் பரிச்சயமாகாமல் இருப்பதாலேயே அவரைப் புதுமுகமாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றபடி கால்பந்து ஆட்டத்தில் ‘கில்லி’யாகக் களம் கண்டிருக்கிறார். அவர் அடிக்கும் ஷாட் ஒவ்வொன்றும் அவரது அயராத பயிற்சிக்கான நற்சான்றிதழ்கள்..!
நல்ல குரல் வளம் பொருந்திய அவர் இயல்பான இந்த வேடத்துக்குப் பொருந்தியிருக்கிறார். மற்ற பாத்திரங்களை ஏற்பதற்கான சாத்தியத்தை அவர் பெறப்போகும் அனுபவங்களே கற்றுத் தரும்.
செளமிகா பாண்டியன், மிருணாளினி ஆகிய இரு நாயகிகள் படத்தில் இருக்கிறார்கள். ஆனால், நாயகனின் ‘காலு’க்கு இருக்கும் வேலை இவர்களுடனான காதலுக்கு அவ்வளவாக இல்லை.
கால்பந்து பயிற்சியாளராக நடித்திக்கும் நரேனுக்கு ‘கைதி’ படத்துக்குப் பின் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு. அவரும் அற்புதமாக நடித்து பாராட்ட வைக்கிறார். பழிதீர்க்க நாயகன் எடுக்கவேண்டிய கத்தி அவர் கைக்கு வரும்போது ஆறுதலாக இருக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் ‘ஸ்டன் சிவா’ மிரட்டுகிறார். இவர்களைப் போன்ற சிலரால்தான் வடசென்னையைப் பார்த்தாலே மக்கள் நடுங்குகிறார்கள். நைச்சியமாகப் பேசுவதிலும் விஷ்வாவின் பார்வையை வைத்தே அவரால் பிரச்சினை வரும் என்று யூகிப்பதிலும் வில்லத்தனத்துக்குப் பெருமை (!) சேர்க்கிறார்.
நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் மனோஜ் பாரதிராஜாவுக்கு சின்னவேடம் என்றாலும் அவர் நாயகனாக நடித்ததைவிட பெருமை தரும் வேடம்தான், அவருடைய நண்பராக நடித்திருக்கும் வினோத்தும் நன்றாக நடித்திருக்கிறார்.
நாயகனின் அம்மாவாக வரும் ஜெயலட்சுமி நடிப்பு வியக்க வைத்திருக்கிறது. “என் புருஷன் எப்படி செத்தாருன்னு எனக்குத் தெரியும். என் மகனுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னுதான் அமைதியா இருந்தேன்..!” என்று கணவனைக் கொன்ற வில்லனிடமே அமைதியாக வெளிப்படுத்தி அவரைக் கலவரப்படுத்தும் காட்சி அதில் உச்சம்.
சுஜித்சாரங்கின் ஒளிப்பதிவும் இயல்பாக இருக்கிறது. கால்பந்து வீரர்களுடன் கண்ணுக்குத் தெரியாமல் அவரும் ஓடியிருக்கிறார்..
அரோல்கரோலியின் இசை படத்தின் பலம். பாடல்கள் சுகம். அதிலும் “வா… வீரனே…” பாடல் உற்சாகமளிக்கிறது.
வாழ்க்கை அனுபவங்களாக இருக்கும் வெங்கட்ராஜின் உரையாடல்கள் இயக்குநருக்கு பெரிதும் உதவியிருக்கின்றன.
விளையாட்டுத் துறையின் பல நிலைகளைத் தன் படத்தின் மூலமாகப் பதிவு செய்திருக்கும் சுசீந்திரன் தனது வழக்கப்படியே நேர்த்தியான ஒரு திரைக்கதையை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.
வெற்றிக் கோப்பையை தூக்கிப் பிடிக்கும் கிளைமாக்ஸ்களைப் பார்த்து போரடித்துப்போன நமக்கு இந்தப் படத்தின் இயல்பான கிளைமாக்ஸ் நெஞ்சில் நிறைகிறது.
சாமானிய மனிதனின் சாதனை என்பது இந்த அளவில்தானே சாத்தியம் என்ற கேள்வியும் எழுந்து, அதற்கான நியாயங்களும் நெகிழ வைக்கின்றன.
சாம்பியன் – குறி தப்பாத கோல்..!