உலகம் முழுதும் சமூக வலை தளங்களில் முன்னணியில் இருக்கும் ‘மார்க் ஜூக்கர்பெர்க்’கின், ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் தற்போது புதிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. அது விபரம் –
ஃபேஸ் புக் பயனர்களில் சுமார் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு அது ‘கேம்பிரிட்ஜ் அனாலிடிகா’ என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது. அந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டு பற்றி விசாரணை நடத்த இங்கிலாந்தில் எம்.பி.’டாமியன் கொலின்ஸ்’ என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, ‘ஃபேஸ்புக்’ அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க், 26-ந் தேதிக்குள் தங்கள் முன்பு நேரில் ஆஜராகி, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது.
இது தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூறியதாவது-
“அனைவரின் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரக் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை இந்திய அரசு மதிக்கிறது. ஆனால், இங்கு தேர்தல்களில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உள்ளே நுழைய நினைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..!”
மேலும், ‘கேம்பிரிட்ஜ் அனாலிடிகா’ நிறுவனத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.