கொஞ்ச காலமாகவே ஹாலிவுட்டை ஆக்கிரமித்திருக்கும் டைம் மெஷின், டைம் லூப் விஷயங்கள் தமிழ் சினிமாவிலும் வியாபித்து இருக்கின்றன.
டைம் லூப் எல்லாம் இங்கே எடுபடுமா என்ற தயக்கததை மாநாடு வெற்றி துடைத்து எறிந்தது. ஆனால் இது அதற்கும் முன்பு திட்டமிடப்பட்ட படமோ என்னவோ, டைம் லூப் என்று கமிட் செய்து கொள்ளாமல் நாயகன் காண்கிற கனவு எல்லாம் அப்படியே நடக்கும் என்ற நிலையில் அதை சரி செய்து கொள்ள முயலும் அவரது போராட்டமும் தான் கதை.
போலீசாக வேண்டும் என்ற லட்சியக் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் விதார்த்துக்கு குப்பை லாரி ஓட்டும் தந்தையே தாயுமானவன் ஆகவும் இருக்க, வேலைக்குப் போய் முதல் சம்பளம் வாங்கிய பின்தான் உன்னிடம் பேசுவேன் என்ற வைராக்கியத்தில் இருக்கிறார்.
வழக்கமாக அவர் கனவில் வருவதெல்லாம் நடக்க, அவரது அன்றைய நாள் உறக்கததில் வரும் கனவில் அவரது தந்தை விபத்துக்கு உள்ளாவதாக வர, அப்பாவைக் காக்க அவர் எடுக்கும் முயற்சி என்ன ஆனது என்பது படத்தின் ஒன் லைன். எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.சீனிவாசன்.
வில்லனாகி விட்ட விதார்த்துக்கு நாயகனாக வந்திருக்ரும் படம். அவரது சீரியசான முகத்துக்கு இந்த வேடம் பொருத்தமாகவே இருக்கிறது. அப்பாவுக்கு விபத்து ஏற்படும் என்று அறிந்த நிலையிலும் அதைத் தவிர்க்க இயலாத நிலையை அற்புதமாக நடித்து தாங்கி இருக்கிறார்.
அதேபோல் அது விபுத்து அல்ல கொலை என்று தெரிந்து கொலையாளி யார் என்று தெரியும்போது தெரியும் தவிப்பையும் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அம்மாவை ஈடுசெய்ய மனைவி வருவா. ஆனா அப்பாவுக்கு இணையா யாரும் வரமாட்டார்கள் என்று அவர் சொல்வது நெகிழ்ச்சி.
ஸ்வப்னாவின் அறிமுகத்தில் நாயகி இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஆனால், அடுத்தடுத்து வரும் காட்சிகளில் அவர் பொருந்தி விடுகிறார். ஹோம்லி உடையை விட மாடர்ன் உடைகள் அவருக்குப் பொருந்துகிறது
விதார்த்தின் அப்பாவாக நடித்திருக்கும் மாரிமுத்துவின் பாசம் நெகிழ வைத்திருக்கிறது. நேரில் பேசாத மகன் போன் அடித்ததும் புரிந்து கொண்டு அவனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைக்கும் போது அப்பா பாசமும் அன்னைக்கு ஈடானது என்று புரிந்து கொள்ள முடிகிறது.
போலீஸ் அதிகாரி மூணார் ரமேஷ், இளநீர் விற்கும் விக்ரம் ஜெகதீஷ், இன்ஷுரன்ஸ் ஏஜென்ட டவுட் செந்தில், ஏடிஎம் வாட்ச்மேன் மூர்த்தி என்று எல்லோருமே சரியாகப் பயன்பட்டு இருக்கிறார்கள்.
இருந்தாலும் கிளைமாக்ஸ் இயல்பானதாக இல்லை. வில்லததனத்தை காதல் வெல்கிறது என்பதுவும் சினுமாத்தனம்.
விவேகானந்த் சந்தோசம் ஒளிப்பதிவும் சாம்.சி.எஸ்ஸின் இசையும் ஓகே.
மாநாட்டுக்கு முந்தி வராததால் அதன் கார்பன் காப்பி என்று இப்போது சொல்லப்படக் கூடும்…