November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கேப்டன் படத்தில் ஆர்யா எதிர்கொள்வது ஏலியன் அல்ல – சக்தி சௌந்தர்ராஜன் விளக்கம்
September 1, 2022

கேப்டன் படத்தில் ஆர்யா எதிர்கொள்வது ஏலியன் அல்ல – சக்தி சௌந்தர்ராஜன் விளக்கம்

By 0 412 Views

தன் ஒவ்வொரு படங்களிலும் சயின்ஸ் பிக்ஷன் விஷயங்களை அடிநாதமாகக் கொண்டு படங்களை இயக்கி வரும் சக்தி சௌந்தர்ராஜன் இப்போது ஆர்யாவை வைத்து இயக்கி வரும் ‘ கேப்டன் ‘ படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஏலியன் கதையை சொல்லி இருக்கிறார் என்ற பேச்சு இதுவரை இருந்து வந்தது.

இந்நிலையில் படம் குறித்து விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள கேப்டன் டீமைச் சேர்ந்த, கேப்டன் சக்தி சௌந்தரராஜன், நாயகன் ஆர்யா மற்றும் படத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் உத்தமன், பரத், கோகுல் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் சக்தி சௌந்தர்ராஜன், “இந்தப் படத்தில் ஆர்யா எதிர்கொள்வது ஏலியன் அல்ல…” என்றார். “அப்படியானால் படத்தில் வருவது என்ன..?” என்ற கேள்விக்கு “அது ஒரு வகையான கிரியேச்சர். தமிழில் சொல்வதானால் வினோத விலங்கு என்று சொல்ல முடியும். அது ஏன் வந்தது… அதனுடைய தேவை என்ன… அதை எப்படி அழிப்பது போன்ற விஷயங்களை படம் சொல்லப்போகிறது…” என்றார்.

அப்படியானால் அதுதான் கதையா என்றால் “இல்லை. இந்தப் படத்தின் லைன் ராணுவம் சம்பந்தப்பட்டது. ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்களை விளக்கிச் சொல்லும் படமாக இது அமைகிறது. வழக்கமாக ராணுவம் சம்பந்தப்பட்ட படம் என்றால் அது எதிரி நாடுகளுடன் போர் புரிந்து நம் நாட்டை காப்பாற்றுவதாக இருக்கும். ஆனால் இதில் அந்த விஷயத்தை நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. இந்தக் கதைக்குள் தான் அந்த வினோத விலங்கு வருகிறது. அதனுடனான போராட்டம் எப்படி என்பதை கதை விளக்குகிறது…” என்றார்.

படம் பற்றி மேலும் அவர் கூறியதிலிருந்து…

“வழக்கமாக இது போன்ற படங்களில் மினியேச்சர்கள், மாடல்கள் இவற்றுடன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸும் பயன்படும். ஆனால் இந்தப் படத்தில் அப்படியெல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க அந்த கிரியேச்சரை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் மட்டுமே உருவாகி இருக்கிறோம். அதனால் படம் பிடிக்கும் சமயத்தில் அந்த இடத்தில் அந்த விலங்கு இருக்காது. அதன் உயரம் உருவத்தில் இருக்கும் ஒரு மனிதனை நடிக்க வைத்து அந்த இடத்தில் அந்த வினோத விலங்கின் கிராபிக்ஸை பொருத்தி படத்தை முடித்து இருப்பது பெரிய சவாலாக இருந்தது..!”

இந்த அனுபவம் குறித்து ஆர்யாவிடம் கேட்டபோது…

“உண்மையிலேயே இது ஒரு பெரிய சவால்தான். அந்த கிரியேச்சர் எப்படி இருக்க வேண்டும் என்று முன்பே நாங்கள் முடிவு செய்து இருந்தோம். அதன்படி அதன் உயரம் ஏழு அடியாக இருந்தது. அதனுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்றெல்லாம் ஏற்கனவே நாங்கள் முடிவு செய்து வைத்திருந்தபடியால் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் எப்படி இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு என்னுடைய நடிப்பு அமைந்திருந்தது.

நான் எதிர்கொள்ளும் அந்த விலங்கு நேரில் இல்லாததால் அந்த 7 அடி உயரத்தில் ஒரு மனிதனைத் தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்து தோல்வியே கிடைத்தது. அதனால் ஆறு அடி மனிதனுக்கு மேல் ஒரு அடியில் தலையில் தொப்பி போல் வைத்து அதை மிருகமாக கற்பனை செய்து கொண்டு அதன் கண்ணை பார்த்து நான் நடிக்க வேண்டி இருந்தது. அதன் கண் வரும் இடத்தில் ஒரு மார்க் செய்து அதை பார்த்து நடித்த முடித்தேன்.. இல்லாத ஒன்றை நினைத்து நடிப்பது பெரும் சவாலாக தான் இருந்தது.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் ராணுவ நடவடிக்கைகள் பற்றி முழுமையாக ரிசர்ச் செய்த அதைப் படமாக்கி இருக்கிறோம். எங்களுடைய சீருடை, கிட்டத்தட்ட ராணுவம் என்று இல்லாமல் ராணுவத்தில் என்ன நிறம், என்ன விதமான உடை பயன்படுத்தப்படுகிறதோ, அதே நிறத்தில்,  அப்படியே அளவெடுத்து, எங்கே தைக்கிறார்களோ அங்கேயே தைத்து முழுக்க முழுக்க ராணுவ உடையை ஒத்த சீருடையை அணிந்து நடித்திருக்கிறோம்.

ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்ட போதெல்லாம் உண்மையிலேயே ஓய்வு பெற்ற ஒரு ராணுவ அதிகாரியின் துணை கொண்டு அந்த காட்சிகளை இயக்குனர் எடுத்தார். அந்த ராணுவ அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் எந்த காட்சியும் எடுக்கப்படவில்லை. அதனால் இந்த படத்தில் வரும் ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் துல்லியமான ராணுவ நடவடிக்கைகளை ஒத்திருக்கும்…” என்றார்.

படத்தில் ஆர்யாவுடன் ஹரிஷ் உத்தமன், பரத், கோகுல், காவியா ஷெட்டி நடித்திருக்கிறார்கள்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஹரிஷ் உத்தமன், “நிறைய தெலுங்குப் படங்களில் நடித்து விட்டேன். இனி தமிழில் முதன்மையாக நடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் நல்ல படங்களை தேடிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தப் படம் கிடைத்தது. அதனால் இப்போது தெலுங்கில் ஒன்றும் தமிழில் இந்தப் படமும் நடித்திருக்கிறேன்..!” என்றார்.

இந்தப் படம் எடுக்க நேர்ந்த அடிப்படை காரணமாக சக்தி சௌந்தரராஜன் சொன்னது “காலத்துக்கு காலம் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் ஒரு தியேட்டரில் படம் பார்க்கும்போது அதில் அதிகபட்ச தொழில்நுட்பம் எவ்வளவு இருக்க வேண்டுமோ அதை ஒரு ரசிகன் ரசிக்க வேண்டும் என்ற வகையில் ஒரு சிறந்த தியேட்டர் அனுபவத்தை கொடுப்பதற்காகவே இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்தேன்..!” என்றார்.

நல்ல முயற்சி. இன்னும் ஒரு வாரத்தில் இந்த அனுபவம் நமக்கு கிடைக்க இருக்கிறது. கேப்டன் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கும் படம் இது.

 

ஆர்யாவின் ‘ தி ஷோ பியூப்பிள் ‘ தயாரித்திருக்கும் கேப்டன் படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிடுகிறது.