பணம் போட்டுப் பணம் எடுக்கும் தொழில்களில் பிரதானமானதும், துரிதமான லாபம் பார்க்கும் தொழிலும் சினிமா மட்டும்தான். அதனால்தான் பல கார்ப்பரேட் கம்பெனிகள் கூட படமெடுக்க முன்வருகின்றன.
அப்படி லாபம் பார்க்கக் கூடிய சினிமாவில் தொண்ணூற்றுக்கும் அதிகமான பேர் லாபத்தை மட்டுமே முக்கியமாகக் கொண்டு மக்களுக்கு இதுதான் பிடிக்கும் என்கிற வகையில் அவர்கள் கிறங்கிச் சரிகிற செல்வாக்கு பெற்ற ஒரு ஹீரோ, ஒரு காதல், மூன்று ஃபைட், நான்கு பாடல்கள் என்று ஃபார்முலாவில் படமெடுத்தது போக இன்று டாஸ்மாக்கில் லாபம் பார்க்கும் கவர்ன்மென்ட் போல ‘அடல்ட் கன்டென்ட்’டில் ஆபாசமாகப் படமெடுத்து பணம் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், மற்ற பெரும் தொழில்களுக்கும் இந்த சினிமாவுக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசமே இந்தத் தொழில் கலையை அடிப்படையாகக் கொண்டதால் இதன் மூலம் சமுதாயத்துக்குத் தேவையான ஆரோக்கியமான கருத்துகளைச் சொல்ல முடியுமென்பதுதான். இன்னும் கேட்டால் உலகில் சமூகப் புரட்சிக்கே சினிமா வித்திட்டிருக்கிறது.
இங்கே நம் சினிமாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்படி சமுதாயத்துக்கு நன்மை செய்யும் படங்கள் வந்து கொண்டிருப்பதும் ஆரோக்கியமான விஷயம்தான். அப்படியொரு அரிதான படம்தான் ‘பூமராங்’.
‘பூமராங்’ என்ற ஆதிமனிதக் கண்டுபிடிப்பான கருவி இலக்கை நோக்கி எறியப்பட்டால் அதைத் தாக்கிவிட்டு மீண்டும் எறிந்தவர் கைக்கே வந்து சேர்ந்து விடும் தன்மை படைத்தது. அப்படித்தான் வாழ்க்கையும். வாழ்வில் நாம் செய்த நன்மை மட்டுமல்ல, தீமையும் எப்படியாவது மீண்டும் நம்மை வந்தே சேர்ந்து விடும் என்பதைத்தான் நெற்றியில் அடித்ததைப் போல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.
இப்படி நல்ல விஷயம் சொன்ன படங்களில் இயக்குநருக்கே முழுப்பெருமையும் சேர்ந்தாலும் அதன் பின்னணியில் இன்னொரு தயாரிப்பாளர் பணம் போட்டிருப்பார். இப்போது பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளே அந்த வேலையைச் செய்கின்றன.
ஆனால், இந்த பூமராங்கைப் பொறுத்தவரையில் முழுப்பெருமையும் கண்ணனுக்கே சேர வேண்டியது. காரணம், விவசாயத்தையும், பெருகி வரும் நீர்த்தேவைக்கு நதிகளின் நீரை இணைக்க வேண்டியதன் அவசியத்தையும் உரக்கப் பேசியிருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவரே என்பதுதான்.
படத்தில் ஒரு வசனம் வருகிறது… வீணாகக் கடலில் கலக்கும் நதிநீரை நீரில்லாத வறண்ட பூமிக்குத் திருப்பிவிட முடிவுசெய்து கால்வாய் வெட்ட அனுமதி மறுக்கும் அதிகாரியிடம் “ஒரு நடிகை கண்ணடிச்சா கோடி லைக் கிடைக்குது. ஆனா, விவசாயப் போராட்டம் பற்றிப் பேசினா ஒரு லைக் போட ஆளில்லை…” என்று நாயகன் அதர்வா முரளி ஆதங்கப்பட்டுப் பேசுவது அது.
அப்படி இருக்கும் விவசாயம் பற்றி வட்டிக்கு வாங்கிப்பணம் போட்டுப் படமெடுக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும்..? அதற்காகத்தான் கண்ணனைப் பாராட்ட வேண்டியிருக்கிறது. ஆனால், இப்படிப் படமெடுப்பவர்கள் கூட அதை ஆர்ட் பிலிம் பாணியில் சொல்லி நாலைந்து விருதுகளைப் பெற்றுப் போய்விடும் நிலையில் முழுநீள கமர்ஷியல் படமாகவும் இதை பெரும் பொருட்செலவில் கொடுத்திருக்கிறார் அவர்.
சரி… படம் எப்படி என்று பார்ப்போம். முதல் பாதிக்கதை முழுவதும் அதர்வாவின் வாழ்க்கை (அதை அப்படிச் சொல்லலாமா என்று தெரியவில்லை. ஏனென்றால் அதர்வா யார் என்பதும் அவர் என்ன செய்கிறார் என்பதும் பின்பாதிக் கதையில்தான் வருகின்றன…) அப்படியானால் முன்பாதிக் கதையில் வரும் அதர்வா, அது அவரே அல்ல. அது எப்படி என்பது ஒரு சுவாரஸ்யம் கலந்த… இதுவரை எந்தப்படங்களிலும் சொல்லாத ஒரு ‘மெடிக்கல் அட்வான்ஸ்மென்ட்’ சுவாரஸ்யம்.
அவரும், அவரது நண்பராக வரும் சதீஷின் அலப்பறைகளும், நாயகி மேகா ஆகாஷுடனான அதர்வாவின் காதலுமாக கைக்கடக்கமாக முடிகிறது இன்டர்வெல் வரையான நகர்த்தல். அடையாளம் மாறிப்போன அதர்வாவை அடையாளம் தெரியாத கும்பல் கொல்லத் துரத்த அது ஏன் என்பது இரண்டாவது பாதி.
அங்கே ஆரம்பிக்கிறது எதிர்பாராத ஆச்சரியம். தன் வாரிசுகள் யாரும் தன் தொழிலுக்கு வந்துவிடக் கூடாதென்று நினைக்கும் முதல் தொழிலாளி விவசாயிதான். அப்படி எல்லோரும் நிலங்களை விட்டுவிட்டுப் பட்டணத்துக்குக் குடிபெயர்ந்து கொண்டிருக்க, பார்த்துக்கொண்டிருந்த கார்ப்பரேட் வேலையில் இருந்து நீக்கப்பட்ட அதர்வாவும், ஆர்ஜே பாலாஜி மற்றும் இந்துஜாவும் சொந்த கிராமத்தில் விவசாயம் பார்க்க வருகிறார்கள்.
அதற்கு நீராதாரம் வேண்டுமென்று ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் பெருகி ஓடும் ஆற்றிலிருந்து கால்வாய் மூலம் நீரைத் தங்கள் ஊருக்குக் கொண்டு வருவது திட்டம். அதையே ஒரு ‘செயலி’யாக உருவாக்கி இன்றைய தேவைக்கேற்ற ஆய்வுகளுடன் செயல்படுத்த முனைவது பாராட்டத்தக்க செயல்.
ஊழலில் திளைத்த அரசியல் அமைப்பால் மட்டுமல்லாமல், உள்ளூர் விவசாய ஆதாரங்களை அழித்து கோடிக்கணக்கில் லாபம் பார்க்க நினைக்கும் பெரும் கார்ப்பரேட் கம்பெனியின் கொடுங்கரங்களுக்கு எதிராகவும் அந்தத் திட்டம் வெற்றிபெற முடிந்ததா என்பது கதை.
அதர்வாவுக்கென்றே அளவெடுத்த வேடம். அவர் அறிமுகமாகும் முதல் காட்சி ஹாலிவுட் படங்களுக்கேற்ற த்ரில்லானது. அதற்கான ஒப்பனையும் அபாரம். குறும்படமெடுக்கும் மேகா ஆகாஷின் படத்தின் ஸ்கிரிப்டை ‘காலங்களால் மாறாதிருப்பது ஊழல் மட்டும்தான்’ என்று அவர் திருத்தித் தருவது பின்பாதியில் அவர் செய்யவிருக்கும் செயலுக்கான நியாயம் கற்பிக்கிறது. இப்படிப்பட்ட கதைகளில் நடிக்க அதர்வா பெருமைப்படலாம்.
மேகா ஆகாஷ் அழகுப்பதுமையாக வருகிறார். அதர்வாவின் காதலைப்பெற அவர் துடிப்பதும், அதை அதர்வா நிராகரிக்க… அதற்குப் பின்னாலிருக்கும் பிளாஷ்பேக் காரணங்களும் ரசிக்கத்தக்கவை.
பின்பாதியில் மட்டுமே வந்தாலும் ஆர்ஜே பாலாஜியின் என்ட்ரி படத்துக்கு பத்து யானை பலத்தைக் கொடுக்கிறது. “இங்க தண்ணி ஏதுடா… எல்லாத்தையும் வித்துட்டு நாங்களே சென்னைக்கு வரப்போறோம்…” என்று அதர்வாவின் அப்பா சொல்ல, “அங்க மட்டும் தண்ணி இருக்குன்னு யார் சொன்னா..?” என்று பாலாஜி கேட்கும் இடத்தில் அரங்கம் அதிர்கிறது. அப்படியே அவர் வரும் காட்சிகள் அனைத்தும் பொறிபறக்கின்றன. அவரது முடியும் எதிர்பாராத அதிர்ச்சி…
இந்துஜாவுக்கும் பெருமைப் பட்டுக்கொள்ளும் பாத்திரம். கதைப்படி அதர்வா மேகாவுக்கா, இந்துஜாவுக்கா என்ற சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் புத்திசாலித்தனமாக ‘எஸ்’ ஆகிவிடுகிறார் இயக்குநர்.
அடையாளம் மாறிய அதர்வாவின் வாழ்வில் அப்படி மாறியதற்கு உதவிய சுஹாசினி மணிரத்னத்தின் பங்கு பெரிதாக இருக்கும் என்று நம்புகிறோம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இரண்டாம் பாதி முழுதும் மந்திரத்தில் கட்டுண்டது போல் இருக்கிறது தியேட்டர். சொல்லப்பட்டிருக்கும் விஷய்ங்கள் அவ்வளவு அழுத்தமானவை. நதிநீர் இணைப்புக்கான கால்வாய் வெட்டும் காட்சியும் அபாரம். விவசாயத்தின் அவசியத்தினூடே கார்ப்பரேட் கம்பெனிகளின் வெறியாட்டத்தையும் தோலுரித்திருக்கிறார் இயக்குநர். அதன் அங்கமாக வரும் வில்லன் ‘உபேன் பட்டேலு’ம் சரியான தேர்வு.
ரதனின் இசையில் ‘முகையாழி’ பாடல் மென்மையாகவும், ‘தேசமே’ பாடல் வன்மையாகவும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் கவனிக்க வைக்கிறார் ரதன். பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவில் படத்தின் நேர்த்தி பிரமிக்க வைக்கிறது.
சதிகளை வென்று… விட்ட இடத்தில் தொடர அதர்வா பேருந்தில் வந்து இறங்குவதோடு முடிகிறது படம். ஒரு கிராபிக்ஸாவது போட்டு நதிநீர் ஊர் வந்து சேர்ந்ததைக் காட்டியிருந்தால் கூலாக இருந்திருக்குமே, இயக்குநர்..?
மேகா செய்த தவறு அவரிடமே வந்து சேர, அதர்வா அவர் மீது வைத்த காதல் அவரிடம் வந்து சேர, அதர்வா அழிந்தே போனார் என்று வில்லன் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் செய்த பாவம் அவரை வந்து அடைய… நாம் கைவிடும் நிலையில் இருக்கும் விவசாயம் நம்மிடமே நம்மிடமே பத்திரமாக மீளும் என்று புரிய வைக்கிறது ‘பூமராங்’.
நல்லது சொன்ன கண்ணனுக்கும் நிச்சயமாக நன்மையே மீளும்..!
– வேணுஜி