February 27, 2021
  • February 27, 2021
Breaking News
March 8, 2019

கபிலவஸ்து திரைப்பட விமர்சனம்

By 0 873 Views

திரைப்படங்களில் ஒன்று ஏழைகளின் பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும்… இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது நடுத்தர வர்க்க பிரச்சினை. அவ்வப்போது பணக்காரர்களின் வாழ்வியல் படங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதில் தெருவோரம் வாழும் மனிதர்களைப் பற்றி சிந்திக்க யாருக்கு நேரம் இருக்கிறது..?

அதற்கு நான் இருக்கிறேன் என்று கிளம்பியிருக்கிறார் இயக்குநர் ‘நேசம் முரளி’. அவரே நாயகனாகவும் நடித்திருக்கும் படத்தின் களம் ஒரு பொதுக் கழிப்பிடம்.

பொதுக்கழிப்பிடத்திலேயே பிறந்த அவருக்குத் தாய் தந்தை யாரென்றே தெரியாது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கேயே பாதுகாவலராக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்க, அவரைப்போலவே வீடில்லாத ஒருசிலரும் அந்த கழிப்பிடத்தின் அருகிலேயே தங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள்தான் மொத்தப்படமும். மகிழ்ச்சி, சோகம், காதல், மோதல்… ஏன் கல்யாணமாகிய நாயகனின் முதலிரவு கூட அந்தப் பொதுக் கழிப்பிடத்தில்தான் நடக்கிறது.

அந்தக் கழிப்பிடத்திலிருந்து நேசம் முரளி பலவந்தமாக வெளியேற்றப்பட அழுது புலம்பிக்கொண்டே செல்லும் அவர் தன் குடும்பத்தைத் தேடி வடமாநிலங்களுக்கெல்லாம் பயணப்பட, அவரை அங்கே பிரசவித்த தாயான மீராகிருஷ்ணா ஏறக்குறைய 30 வருடங்களுக்குப் பிறகு அவரைத் தேடி வர… பிளாஷ்பேக்கில் விரிகிறது கதை.

நேசம் முரளிக்கு அவர் ஏற்றுக்கொண்டிருக்கும் வேடம் மிகவும் பொருந்துகிறது. அத்துடன் முழு ஸ்கிரிப்டும் அவருக்குள்ளேயே இருப்பதால் அதில் ஒன்றி நடித்திருக்கிறார். இப்படியொரு கதையை எடுக்கத் துணிந்ததற்கே அவரைத் தனியாகப் பாராட்டலாம்.

அவராவது சிந்தித்ததை எடுக்க கழிப்பிடத்துக்குள் கஷ்டப்பட்டார். ஆனால், அவரது காதலியாகவும் பின்னர் மனைவியாகவும் ஆகும் நந்தினிதான் மிகவும் பாவம்… அவருடனேயே மொத்தப்படத்தையும் கழிப்பிடத்துக்குள்ளேயே உருண்டு புரண்டு படுத்து எழுந்து… பரிதாபம். ஆனால், அந்த அர்ப்பணிப்புக்கு பாராட்டியே ஆக வேண்டும்.

இவர்களைத் தாண்டி முரளின் தன் தங்கையாக சுவீகரித்துக் கொண்டிருக்கும் பேபி ஐஸ்வர்யா கவனிக்க வைக்கிறார். சற்றே மிகையான நடிப்பு என்றாலும் அதுவே ஒரு திறமைதான்.

ஒரு ரேஷன் கார்டு வாங்கக் கூட வக்கில்லாத நிலையில் இருக்கும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பேபி ஐஸ்வர்யா நன்றாகப் படித்தால்தான் முடியும் என்ற நிலையில் பாதிநேரம் பள்ளிக்கூடம் பஒவதும், மீதி நேரம் தண்ணீர் கேன் போடுவதுமாக இருக்கும் ஐஸ்வர்யாவொய்ன் முடிவும் எல்லா நம்பிக்கைகளையும் சுக்கு நூறாக்குகிறது. அந்தக் காட்சி கொடூரம்.

தங்கள் நிலையை நினைத்து எல்லோரும் சதா அழுது கொண்டே இருக்கிறார்கள். அதை மாற்றி நம்மை அழச் செய்திருந்தால் இன்னும் நெகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

மொத்தப்படமும் கழிப்பிடத்திலேயே நடக்கும் உலகின் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். ஒருசில காட்சிகளுக்கு மட்டும்தான் வெளியே வருகிறார்கள். 

அதிலும் ஒரு காட்சியில் கழிவுக் கோப்பைக்கருகே அமர்ந்து அழுதுகொண்டே மலத்தைக் கையால் துடைக்கும் காட்சி மிகவும் அருவறுக்க வைக்கிறது. அப்படிப்பட்ட காட்சிகளை தவிர்த்திருக்க முடியும்.

நேசம் முரளி புத்தரின் பக்தர் போலிருக்கிறது. அவர் பிறந்த கபிலவஸ்துவின் பெயரை படத்துக்கும் வைத்து கம்பெனிக்கும் புத்தர் பெயரை வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் விஜிக்கு கழிவறையைவிட்டு வெளியே வந்து படமெடுக்க சில காட்சிகளே இருக்கின்றன. ஸ்ரீகாந்த் தேவா பாடல்களுக்கான இசையில் அடையாளம் தெரிகிறார்.

இப்படியான தெருவோர மக்கள் உலகெங்கும் இருப்பதைக் காட்டும் இடத்தில் இயக்குநர் அடையாளம் தெரிகிறார்.

பதற வைத்திருக்க வேண்டிய படம்… பதட்டமில்லாமல் நகர்வதற்கு மொத்தப்படமும் கழிவறைகுள்ளேயே நடப்பதும் காரணம்.

தெருவோர மனிதர்களின் வாழ்க்கையை ஆவணப் படுத்திய விதத்தில் நேசம் முரளியின் முயற்சியை விருதுகளுக்கு முன்மொழியலாம்..!