April 19, 2025
  • April 19, 2025
Breaking News
October 3, 2019

பிகில் தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல்..?

By 0 791 Views

விஜய் 64 படம் சென்னை பிலிம் சிட்டியில் கோலாகலமாகத் தொடங்கி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியிலிருக்கும் இந்நேரத்தில் அதற்கு முந்தைய வெளியீடாக இருக்கும் ‘பிகில்’ குறிப்பிட்ட நாளில் வெளிவருமா என்பது கேள்விக் குறியாகியிருக்கிறது.

கடந்த ஒவ்வொரு விஜய் பட வெளியீட்டின்போதும் படம் வெளிவருவதில் ஏதோ சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. அது தீபாவளிக்கு வருவதாகச் சொல்லப்படும் ‘பிகில்’ படத்திலும் தொடர்கிறது.

பின்னணியில் இருப்பது அரசியலேதான். ரஜினி தன் ஒவ்வொரு படத்தின்போதும் அரசியல் அஸ்திரத்தைக் கையிலெடுத்து படத்துக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் தந்திரத்தை இப்போது விஜய்யும் கைக்கொள்ள ஆரம்பித்திருப்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 

‘பிகில்’ பட இசை வெளியீட்டில் விஜய் திருக்குறள் சொல்லி ஆட்சியாளர்களை மறைமுகமாகத் தாக்கியதே ‘பிகில்’ பட வெளியீட்டில் அரசியல் புகக் காரணமாக இருக்கிறது என்கிறார்கள். அவரது பேச்சைத் தொடர்ந்து மாநில அமைச்சர்கள் விஜய் பேச்சை விமர்சித்துப் பேசியும் விஜய் தரப்பிலிருந்து மௌனமே பதிலாக இருந்ததில் இப்போது படத்தை சென்சார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம்.

தீபாவளிக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இன்னும் படத்தின் டீஸர் கூட வெளியிடப்படவில்லை. இந்த சிறிய இடைவெளிக்குள் எப்போது சென்சார் முடிந்து எப்போது டீஸர் வெளியிட்டு எப்போது டிரைலர் வெளியிட்டு எப்போது படத்தை வெளியிடுவார்கள் என்பது இப்போது இருக்கும் தலையாய கேள்வி. சென்சாரில் பதற்றமான சூழல் நிலவுவதே முக்கியமான காரணம்.

கடைசி நேர காய் நகர்த்தல்களில் படம் குறித்த நாளில் வெளியானால் மட்டுமே விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி மகிழ்ச்சியாக இருக்கும். நல்லதே நடக்கும் என்று நம்பலாம்..!