November 23, 2024
  • November 23, 2024
Breaking News
June 8, 2023

பெல் (BELL) திரைப்பட விமர்சனம்

By 0 314 Views

வருடத்துக்கு சராசரியாக 200 தமிழ் படங்கள் வருகின்றன. அதில் தமிழர் பெருமையைச் சொல்லும் படங்கள் எத்தனை என்று எண்ணினால் பல விரல்கள் மிச்சம் இருக்கும்.

பழந்தமிழர் பெருமைகளைப் பற்றியும் குறிப்பாக பழந்தமிழ் மருத்துவ முறைகளைப் பற்றியும் உயர்வாகப் பேசுகிறது இந்தப் படம். 

படத்தில் நாயகன் பெயர்தான் பெல். (உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் கிரகாம் வெள்ளை நினைவில் கொள்ளுங்கள்)

சிங்கவனம் என்ற காட்டில் வசிக்கும் மக்கள் அடுத்தடுத்து இறந்து கொண்டிருக்கும் நிலையில் பெல்லும் அவரது நண்பனும் மட்டும் உயிரோடு இருக்கிறார்கள். அதைப் பற்றி போலீஸ் நடத்தும் விசாரணைதான் முழுப் படமும்.

பெல் சொல்லும் கதையில் தமிழகத்தில் வணங்கப்படும் தெய்வங்களில் ஒன்றான நிசும்ப சூதனி, உண்மையில் ஒரு மூலிகையின் பெயர் என்றும் இறந்தவர்களை உயிர்ப் பிக்கும் வல்லமையுள்ள அந்த மூலிகையின் பெயரைத்தான் பின்னாளில் தெய்வத்துக்கு வைத்து வணங்கி வருகிறார்கள் என்றும் பெல் சொல்கிறார்.

பெல்லின் அப்பாவுக்கு மட்டுமே நிசும்ப சூதனியைப் பற்றிய ரகசியம் தெரியும் என்பதால் அவர் தன் மகனுக்கும் அது பற்றிய அறிவைத் தந்திருக்கிறார் என்ற நிலையில் அந்த மூலிகையை கண்டுபிடித்துத் தரும்படி படத்தின் வில்லன் நிர்பந்திக்க அது நடந்ததா என்பதுதான் மீதிக் கதை.

காலம் சென்ற நடிகர் ‘நித்திஷ் வீரா’தான் சிறப்பு பார்வை திறனுடன் இதில் பெல்லாக நடித்திருக்கிறார். அவரது அர்ப்பணிப்பான நடிப்பு மெச்சும்படி இருக்கிறது. அதிலும் நிசும்ப சூதனியைப் பற்றிய விளக்கத்தை அவர் சொல்லும் ஒரே ஷாட் கிட்டத்தட்ட பத்து பதினைந்து நிமிடங்களுக்கு நீள்கிறது.

ஒரே டேக்கில் வசனங்களை மனப்பாடம் செய்து கேமரா கோணத்துக்கும் தன்னைப் பொருத்திக் கொண்டு நடித்திருக்கும் நித்திஷ் வீரா சபாஷ் பெறுகிறார். இப்படிப்பட்ட நடிகன் இப்போது உயிரோடு இல்லையே என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

கிட்டத்தட்ட சஞ்சீவி மூலிகையை போன்ற நிசும்ப சூதனியைப் பெறுவதே தன் லட்சியம் என்று அலையும் வில்லனாக குரு சோமசுந்தரம் நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் செய்யாத வில்லனாக வரும் அவரது நடிப்பு, முதிர்ச்சியுடன் பாராட்ட வைக்கிறது.

இந்தப் படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி இருக்கிறார் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர். முதல் படம் என்றாலும் தன்னுடைய வேடத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் ஸ்ரீதர். நடனத் திறமை மிக்க அவருக்கு இந்த வேடம் அதற்கு வாய்ப்பளிக்காதது வருத்தமே.

இரண்டு நாயகிகளுக்கு பெரிதாக வேலை இல்லை.

ஒரு படம் எடுத்தாலும் அதை உருப்படியான படமாக எடுத்து விட வேண்டும் என்று இதனை இயக்கியிருக்கும் வெங்கட் புவன் நினைத்திருப்பார் போல.

நல்ல சிந்தனைதான் என்றாலும் இதைப் போன்ற முயற்சிகளுக்கு பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் இடம் கொடுத்தால் மட்டுமே பெருவாரியான மக்களைச் சென்றடைய முடியும்.

படத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவையும் இசையையும் தந்திருக்கிறார்கள், ஒளிப்பதிவாளர் பரணிக் கண்ணனும், இசையமைப்பாளர் ராபர்ட்டும்.

தமிழர் பெருமையை சொல்லும் படத்துக்கு தமிழிலேயே இன்னும் நல்ல பெயர் வைத்திருக்கலாம்.

என்றாலும் நல்ல ஒரு விஷயத்தை சொன்னதற்காக இந்தப்பட தயாரிப்பாளர் பீட்டர் ராஜ் உட்பட்ட படக்குழுவைப் பாராட்டலாம்.

பெல் – தமிழர் பெருமையை உலகுக்கு அறிவிக்கும் மணி ஓசை..!