இதுவரை வந்த சாதியக் காதல் சொல்லும் படங்களில் ஒரு பக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், இன்னொரு பக்கத்தில் வேறுபட்ட சாதியினரும் இருந்திருக்கிறார்கள். அந்த இன்னொரு பக்க சாதியினர் பிராமணர்களாக அதிகம் இருந்ததில்லை.
அப்படி இருந்த படங்களிலும் பிராமணர்கள் அமைதியான போக்கை மேற்கொள்பவர்களாகவும், எதிர்தரப்பு சாதியினர் மட்டுமே வன்முறை மிகுந்தவர்களாகவும் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில்தான் முதல்முறையாக தங்கள் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு போன இன்னொரு சாதியைச் சேர்ந்த ஆணை பிராமண சமூகத்தினர் வன்முறைப் பாதையில் கொலை செய்யும் அளவுக்குப் போகும் ஒரு கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஜயகுமார்.
இது ஒன்றுதான் இந்தப் படத்தின் வித்தியாசம் எனலாம்.
மற்றபடி வழக்கமான காதல் கதைதான். கதையின் நாயகனான லியோ சிவகுமார் எதிர்வீட்டு பிராமணப் பெண்ணான சஞ்சிதா ஷெட்டியைக் காதலிக்க கோபம் கொள்ளும் அந்த குடும்பத்தினர் எப்படி பிரச்சனையைக் கொடுக்கிறார்கள் என்பதுதான் கதை.
பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன்தான் இந்தப் பட ஹீரோ லியோ சிவக்குமார். புரட்சிகரமான நாடகங்கள் நடத்துவதும் எதிர்காலத்தில் திரைப்பட இயக்குனர் ஆகும் லட்சியம் கொண்டவருமாக வரும் இவர் தன் பாத்திரத்தைச் சரியாகவே சுமந்து இருக்கிறார்.
சண்டை, நடனம் எல்லாமே முறையாகக் கற்று இருப்பது தெரிகிறது.
சஞ்சிதா ஷெட்டியை பிராமணப் பெண்ணாக ஒத்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் அவருடைய நடிப்பை ரசிக்க முடிகிறது. காதலுக்காக எதையும் எதிர்கொள்ளும் இப்படிப் பட்ட காதலி கிடைப்பவர்கள் பாக்கியவான்கள்.
சிவகுமாரின் அம்மாவாக வருபவரை விட தங்கையாக வரும் பெண் ரசிக்க வைத்திருக்கிறார்.
சிவகுமார் பணிபுரியும் இயக்குனராக பிரபு சாலமன் நடித்திருப்பது ஒரு சுவாரசியமான விஷயம். ஆனால் அவரால் ஏதாவது நன்மை நடக்கிறதா என்றால் ஒன்றும் இல்லை.
அதேபோல்தான் சிறப்புத் தோற்றத்தில் வரும் விஜய் சேதுபதியின் பாத்திரமும். சிவகுமார் சொல்லும் கதையை நன்றாக இருக்கிறது என்று கேட்கும் விஜய் சேதுபதி, அந்தக் கதைக்கு “பாசிட்டிவ் கிளைமாக்ஸ்தானே..?” என்று கேட்கிறார். “ஆமாம்…” என்று சிவகுமார் சொன்னதாலேயே அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொள்கிறார்.
…என்று இருக்க இந்தப் படத்தின் கிளைமாக்ஸை மட்டும் ஏன் நெகட்டிவ் ஆக வைத்திருக்கிறார் இயக்குனர் விஜயகுமார் என்பது புரியவில்லை.
மற்றபடி திடீர் வில்லனாக ராஜ்கபூரும், சிரிக்க வைக்க முடியாத சிங்கம் புலி, அமுதவாணன், ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
ஏ.ஆர். அசோக் குமாரின் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது. வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி பாடல்களை என்.ஆர்.ரகுநந்தன் இசையில் கேட்ட போதும், எந்தப் பாடலும் மனதில் நிற்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.
புரட்சிகரமான பாடல்களில் சென்சார் நிறைய மியூட் செய்து இருக்கிறார்கள். நிசப்தமாகவே ஒரு பாடலைக் கேட்பதற்கு அந்தப் பாடலையே வெட்டி இருக்கலாம்.
அழகிய கண்ணே – அவாளும் கத்தியைத் தூக்கிட்டா..!