May 1, 2024
  • May 1, 2024
Breaking News
June 25, 2023

பாயும் ஒளி நீ எனக்கு திரைப்பட விமர்சனம்

By 0 146 Views

பாரதியின் வரிகள் பவர்ஃபுல்லானவை என்றாலும்… இந்த படத்துக்கு இந்த தலைப்பு பக்காவாக பொருந்துகிறது என்றாலும்… இத்தனை நீளமான தலைப்பை எழுத முடியாமல் போஸ்டரிலேயே சுருக்கி சுருக்கி எழுதி இருப்பதிலேயே தம் கட்டி இருக்கிறார்கள்.

இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் – இப்படி நீளமான தலைப்புகளை வைப்பதில் இருக்கும் சிரமத்தை. இதையும் படித்து புரிந்து கொண்டு தியேட்டருக்குள் வருபவர்களையாவது படம் திருப்திப் படுத்துகிறதா என்று பார்க்கலாம்.

முழுக்க பார்வைத் திறன் இல்லாத நாயகர்களை சார்லி சாப்ளின் காலத்தில் இருந்தே பார்த்து விட்டதாலோ என்னவோ இப்போதெல்லாம் அரைகுறையான பார்வைத் திறன் கொண்ட ஹீரோக்களைப் (வித்தியாசமாம்) படைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

கடந்த வாரம்தான் சார்லஸ் எண்டர்பிரைசஸ் என்ற படத்தில் இதே குறையுள்ள ஒரு ஹீரோவைப் பார்த்தோம். அதேபோல இந்தப் படத்திலும் நாயகன் விக்ரம் பிரபுவுக்கு அதிக வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவரால் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்தில் பார்க்க முடியாது என்ற குறை.

நண்பர் விவேக் பிரசன்னாவுடன் சொந்தத் தொழில் செய்யும் அவர், ஒரு நாள் இரவு ஒரு பெண்ணுக்கு நடக்கும் பாலியல் கொடுமையை காணச் சகியாமல் அந்தக் கொடுமையைப் புரிபவர்களை அடித்து உதைக்கிறார். அதன் மூலமாக வில்லனின் கோபத்துக்கு ஆளாகி அதன் தொடர்ச்சியாக விக்ரம் பிரபுவின் கண்ணுக்கு கண்ணான சித்தப்பா கொல்லப்படுகிறார்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் விக்ரம் பிரபுவின் சித்தப்பா கொல்லப்படும் போது விக்ரம் பிரபு அதே இடத்தில் இருந்ததுதான். வெளிச்சம் போதாத காரணத்தால் அவரை யார் கொன்றார்கள் என்று அவரால் அடையாளம் காண முடியவில்லை.

இதற்குள்ளே இரண்டு வில்லன்கள் மோதிக்கொள்ளும் கதையும் இருக்கிறது அதில் வேல ராமமூர்த்தியும் அவர் இடத்தைப் பிடிக்க தனஞ்செயாவும் மோதிக்கொள்ள… இந்த தனஞ்செயாவின் ஆட்களைதான் விக்ரம் பிரபு நையப்புடைத்து விட மேற்படி சித்தப்பா கொலை நிகழ்கிறது.

இதையெல்லாம் ஒரு வழியாகக் கண்டுபிடித்து எப்படி விக்ரம் பிரபு தன்னுடைய குறையையும் வைத்துக்கொண்டு வில்லனைப் பழிவாங்குகிறார் என்பது மீதிக் கதை.

முழுக்க பார்வையற்றவராக நடித்து விடலாம். ஆனால் இப்படி அரைகுறை பார்வையில் உள்ளவராக நடிப்பதற்கு என்று எந்த முன்மாதிரியும் இல்லை என்கிற அளவில் விக்ரம் பிரபு அதைத் திறமையாக சமாளித்திருக்கிறார். அதேபோல் ஆக்சன் காட்சிகளிலும் அதிரிபுதிரியாக நடித்திருக்கிறார் அல்லது அடித்திருக்கிறார் எனலாம்.

காதல் இந்தப் படத்துக்கு தேவையில்லை என்றாலும் கதாநாயகி என்ற ஒருவர் தேவை என்பதால் வாணி போஜனை ஃபிக்ஸ் செய்து விக்ரம் பிரபு ஜோடியாக இருக்கிறார்கள். அவரும் அவ்வப்போது வந்து காதலித்து விட்டுப் போகிறார்.

இந்த வாரம் பார்த்த அத்தனை படங்களிலும் நடித்திருக்கும் விவேக் பிரசன்னாவுக்கு தனியாக ஏதாவது விருது தரலாம்.

வேல ராமமூர்த்தியை பல படங்களில் வில்லனாக பார்த்திருக்கிறோம் இதில் இளைய வேல ராமமூர்த்தியையும் பார்க்க முடியும். 

தனஞ்செயாவுக்கு மூக்கை இன்னும் கொஞ்சம் நீட்டி வைத்தால் விக்ரம் பிரபுவுக்கு அவரிடம் அடையாளம் தெரியாதோ என்று தோன்றுகிறது. கிளைமாக்ஸ் இல் இருவரும் சண்டையிடும் போது அரை மற்றும் முழு இருட்டில் யார் யார் என்று புரிந்து கொள்வதில் விக்ரம் பிரபுவின் பிரச்சனை நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

இது போன்ற படங்களுக்கு திரைக்கதை அருமையாக இருக்க வேண்டும் காட்சிக்கு காட்சி சுவாரஸ்யத்தை கூட்டி இருக்க வேண்டும் ஆனால் கண் முன் கதை நடப்பது போல இருக்க வேண்டும் என்று இயக்குனர் கார்த்திக் அத்வைத் விரும்பினாரோ என்னவோ அப்படி அப்படியே ராவாக காட்சிகளை எழுதியிருக்கிறார்.

இதுதான் படத்தின் தலையாய குறையாக இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளராகவும் அவரே இருப்பதால் இந்தக் குறை அவருக்கு தெரியாமல் போய் இருக்கிறது.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் அதுவும் விக்ரம் பிரபுவின் பார்வை திறனுக்கு ஏற்றார் போல் ஒளி அமைத்துப் படம் பிடித்திருப்பது அசகாய சாதனை.

முதல் பாதி படம் வித்தியாசமாக இருக்கிறதே என்று பாராட்டத் தோன்றுகிறது. இரண்டாம் பாதியில் கிளைமாக்ஸ் தவிர பிற காட்சிகளில் வேகம் குறைவு.

சாகரின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில் சுதாரித்து இருக்கிறார்.

பாயும் ஒளி நீ எனக்கு – பாதிப் படத்தில் தீ இருக்கு..!