November 23, 2024
  • November 23, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பாரதிராஜா சாரிடம் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டேன் – அருள்நிதி கலகல
April 13, 2023

பாரதிராஜா சாரிடம் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டேன் – அருள்நிதி கலகல

By 0 234 Views

ஏப்ரல் 14 – ஆம் தேதி வெளிவர இருக்கும் படங்களில் முக்கியமானது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் ‘திருவின் குரல்’.

இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, நாயகியாக ஆத்மிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் அருள்நிதியின் அப்பாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார்.

அப்பா மகன் உறவை போற்றும் விதத்தில் அமைந்துள்ள இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஹரிஷ் பிரபு. சாம்.சி.எஸ் இசையில் இந்தப் படத்தில் வரும் அப்பா பாசத்தை விளக்கும் பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கும் நிலையில் இந்தப் படம் பற்றி பேசினார் அருள்நிதி.

“இந்தப் படத்தில் நான் சிறப்புத் திறனாளியாக நடிக்கிறேன். இதில் எனக்கு பேச்சுத்திறன், செவித்திறன் அளவில் மாற்றுத் திறனாளி பாத்திரம். இதற்கு முன் இதே போன்று ராதா மோகன் இயக்கத்தில் ‘பிருந்தாவனம்’ படத்தில் நடித்திருக்கிறேன்.

என்னுடைய கலைப்பயணத்தில் நான் மறக்க முடியாத ஒரு படம் என்றால் அது பிருந்தாவனம் படம்தான். அதற்குப்பின் இந்தப் படத்தில்தான் எனக்கு அதைப் போன்று சவாலான வேடம் கிடைத்திருக்கிறது.

பிருந்தாவனத்தில் அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்ய, செய்கை மொழியை கற்றுக் கொண்டு அதற்கு ஏற்றவாறு நடித்திருந்தேன். ஆனால் இந்தப் படத்தில் அப்படி நடிக்கவில்லை. ஏனென்றால் நான் விஷயத்தைப் புரிய வைப்பதை விட பிற பாத்திரங்கள் எனக்கு புரிய வைக்கும் விதத்தில்தான் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு மருத்துவமனையை மையமாக வைத்து அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் எனது. அப்பாவாக பாரதிராஜா சார் நடித்திருக்கிறார். அவருடன் நான் இணைந்து நடித்ததில் என் குடும்பத்தார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதில் என் அப்பாவும் ஒருவர்.

இந்தப் படத்தில் அப்பாவுக்காக வைரமுத்து எழுதியிருக்கும் பாடல் இப்போது பிரபலமாக இருக்கிறது. அந்தப் பாடல் குறித்து என் அப்பாவிடம் ஒரு முறை வைரமுத்து சிலாகித்து சொல்லியிருக்கிறார்.

பாரதிராஜா சாருடன் நடிக்கப் போகிறோம் என்றதும் முதலில் எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. அவரைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தேன். ஆனாலும் படப்பிடிப்பில் ஒரு குழந்தையைப் போல அவர் இயல்பாக நடந்து கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவரிடம் மிகவும் இயல்பாக பழகிக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் விளையாட்டாக “உங்களைப் பற்றி நிறைய நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் இயக்கும்போது அடிப்பீர்களாமே. ஆனால் உங்களைப் பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லை. பிறகு ஏன் உங்களைப் பற்றி எல்லோரும் அப்படி சொன்னார்கள் என்று தெரியவில்லை..!” என்றேன்.

உடனே அவர் இயக்குனரிடம் நான் ஒரு காட்சியை இயக்குகிறேன் என்று இயக்க ஆரம்பித்து விட்டார். அது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான காட்சி இல்லை. நானும், ஆத்மிகாவும் கடந்து வர வேண்டும் – அவ்வளவுதான். ஆனால் அப்படி நடந்து வருவதற்கே பலமுறை கட் சொன்னவர், “உனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறது. உங்களுடைய உடல் மொழியும் முக பாவங்களும் சரியாக இல்லை..!” என்று மாற்றி மாற்றி எடுத்துக் கொண்டே இருந்தார்.

“ஐயோ போதும் சார்… தெரியாமல் கேட்டு விட்டேன்..!” என்று நானே ஜகா வாங்கிக்கொண்டேன். அவரது இயக்கத்தில் நடிப்பது அத்தனை கஷ்டமாக இருக்கும் போலிருக்கிறது. ஆனாலும் பாரதிராஜா சாரிடம் நல்ல பையன் என்ற பெயரை நான் இந்தப் படத்தில் எடுத்திருக்கிறேன்.

ஆத்மிகா இந்தப் படத்தில் என் உறவுக்காரப் பெண்ணாக நடித்திருக்கிறார். எங்களுடன் இந்த படத்தில் வில்லன்களாக நான்கு பேர் நடித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் என் உயரத்தில் ஒல்லியாக இருந்து நடிப்பில் மிரட்டி விட்டார்..!” 

என்று முடித்த அருள்நிதியுடன் இந்தச் சந்திப்பில் படத்தின் நாயகி ஆத்மிகா, இயக்குனர் ஹரிஷ் பிரபு உடன் இருந்தனர்.

“அருள்நிதியுடன் நடித்தது நல்ல அனுபவம். அவர் ஒரு திறமையான கோ ஆர்டிஸ்ட். அதனால் என் நடிப்பும் கவனிக்கும்படி அமைந்தது..!” என்றார் ஆத்மிகா.

“இந்தப் படத்தில் அருள் நிதி மாற்றுத்திறனாளியாக நடிக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அது ஏன் என்பதை படத்தில் உணர்ந்து கொள்வீர்கள்..!” என்றார் இயக்குனர் ஹரிஷ் பிரபு.

இன்னும் இரண்டு நாட்களில் அதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.