November 22, 2024
  • November 22, 2024
Breaking News
May 5, 2024

அரண்மனை 4 திரைப்பட விமர்சனம்

By 0 445 Views

திருவிளையாடல் தருமியின் வசனங்களில் “சேர்ந்தே இருப்பது..?” என்கிற கேள்விக்கு “வறுமையும் புலமையும்…” என்று சிவபெருமான் சொல்வதை மாற்றி, “அரண்மனையும் சுந்தர்.சியும்…” என்று கூட பதில் தர முடியும். அந்த அளவுக்கு அரண்மனையும் அவரும் பிரிக்க முடியாத விஷயங்களாக மாறிவிட்டார்கள். 

ஒரு படத்தின் நான்காவது பாகம் என்பது எவ்வளவு நம்பிக்கை தரத்தக்க விஷயம்..? அந்த அயராத நம்பிக்கையிலேயே அரண்மனையின் நான்காவது பாகத்தையும் எடுத்துத் தந்திருக்கிறார் சுந்தர்.சி.

வட மாநில ஆற்றில் அமானுஷ்யம் புள்ளி வைத்து, தென்கோடி அரண்மனையில் (அலங்)கோலம் இடுவதுதான் கதையின் லைன்.

ஜமீன் டெல்லி கணேஷ், தங்கள் அரண்மனையை செப்பனிட்டு விற்க நினைக்கிறார். அது தொடர்பாக அங்கே தங்கிய சந்தோஷ் பிரதாப், அவரது மனைவி தமன்னா அவர்களது இரண்டு குழந்தைகளை அமானுஷ்ய சக்தி தாக்க, அதில் பிரதாப் தமன்னா இறந்து போக குழந்தைகளையும் குறி வைக்கிறது அந்த சக்தி.

தங்கை மீது கங்கை பிரவாகம் போல் பாசம் கொப்பளிக்கும் சுந்தர் சி தங்கையின் குழந்தைகளைச் சூழ்ந்து நிற்கும் ஆபத்தை உணர்ந்து அந்த அமானுஷ்ய சக்தியிடம் இருந்து அவர்களைக் காப்பாற்ற நினைக்கிறார். அதற்கு இடையில் அங்கு தொடர் மரணங்கள் நடந்தேற அவற்றுக்கு இருக்கும் ஒற்றுமையைக் கண்டு அதன் பின்னணியையும் ஆராய முயற்சிக்க, என்னென்ன விளைவுகள் ஆகிறது என்பது மீதிக் கதை.

நியாயமான வழக்குகளை மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்று வறுமையின் பிடியில் இருக்கும் வழக்கறிஞராக சுந்தர் சி. இப்படி இருந்தால் சோற்றுக்கு என்ன செய்வது என்று அவரிடம் மாட்டிக் கொண்டு பணிபுரியும் கோவை சரளா. இந்த இருவரின் அறிமுகமே அமர்க்களமாக இருக்கிறது. 

அறிமுகக் காட்சியிலேயே தங்கையின் பெயர் கொண்ட பெண்ணுக்கு, அடிதடியுடன் காதல் திருமணம் செய்து வைத்து, தங்கைப் பாசத்தில் டிஆராக மிளிர்கிறார் சுந்தர்சி. 

ஆனால் அந்த ஒரு வழக்கில் நடந்த அடிதடியில் பக்கத்தில் இருக்கும் அத்தனை வழக்கறிஞர்களின் மேசைகளும் உடைந்து கேஸ் கட்டுகளும் பீஸ் பீசாக அதற்கு பின் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டு இருக்குமோ என்ற லாஜிக்கை எல்லாம் மறந்துவிட்டுக் கதைக்குள் போகிறோம். 

அங்கிருந்து நேரே அரண்மனை இருக்கும் காட்டுக்குள் பயணப்படுகிறது கதை. 

அரண்மனையைச் சுற்றி இருக்கும் மர்ம முடிச்சுகளைப் புரிந்து கொள்வதில் தொடங்கி அவற்றை அவிழ்ப்பது வரை சற்று சீரியஸ் ஆகவே நடிப்பைத் தந்திருக்கிறார் சுந்தர். சி. அதனால் அவரிடம் வழக்கமாக நாம் எதிர்பார்க்கும் நகைச்சுவை விஷயங்கள் எல்லாம் மிஸ்ஸிங். 

ஆனால் அவரிடத்தில் மட்டும்தான் அப்படியே தவிர அவருடன் இருக்கும் கோவை சரளா அந்த அரண்மனையில் மேஸ்திரி ஆக இருக்கும் யோகி பாபு, கார்பென்டர் ஆக இருக்கும் வி டிவி கணேஷ், ஜமீன் டெல்லி கணேஷ் போன்றவர்களிடையே நிலவும் நகைச்சுவை படத்தை இலகுவாக ரசிக்க வைக்கிறது. 

 

தமன்னாவை சுந்தர் .சியின் தங்கையாக்கி விட்டதால் ராஷி கண்ணாவை இடையிடையே உலவ விட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இருவருக்குள்ளும் எந்த கெமிஸ்ட்ரியும் நிகழ்ந்து விடாமல் இருக்க, ராஷி கண்ணாவின் காதலில் விழ யோகி பாபுவும், விடிவி கணேஷும் முயல்வதெல்லாம் முன்பாதிக் கதைக்குக் காமெடி வலு சேர்க்கிறது.

இதனிடையே அடி வாங்கியதில் ஒரு பக்கம் அவ்வப்போது இழுத்துக் கொள்ளும் கோவை சரளாவின் கண் ஜாடை, தன்னைக் காதலில் வீழ்த்துவதற்காகதான் என்று நினைத்துக் கொள்ளும் சேஷுவின் காமெடி இன்னொரு பக்கம் இன்ஸ்டால்மென்ட் காமெடியில் களை கட்டுகிறது.

சுந்தர்.சி ஒரு பக்கம் தங்கை மீது பாசத்தைப் பிழிய அவரின் தங்கை தமன்னாவோ தன் குழந்தைகளை அமானுஷ்ய சக்தியிடம் இருந்து காப்பாற்றுவதில் தாய்ப்பாசத்தில் நெகிழ வைக்கிறார்.

சுந்தர்.சி யின் சந்தேகத்திற்கு முதல் குறியாகும் சுவாமிஜி, கருடா ராமும் கவனிக்க வைக்கிறார்.

திரைக்கதை வசனம் எழுதி இருக்கும் வேங்கட் ராகவனும் சுந்தர் சி யின் இயக்கத்தன்மை புரிந்து இயங்கியிருக்கிறார். 

ஈ. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்கா பலம் சேர்த்து இருக்கிறது. 

ஹிப் ஹாப் ஆதியின் இசை முன்பாதியில் முறுவலித்துப் பின் பாதியில் பிரவாகம் எடுக்கிறது. இதெல்லாம் எனக்குப் போதாது என்பது போல் கடைசி இரண்டு பாடல்களில் பேயாட்டம் ஆடியிருக்கிறார் ஆதி. 

அதேபோல் இரண்டு கவர்ச்சிக் கன்னிகள் கதையில் இருந்தும் கிளாமரை மனுஷன் கண்ணில் காட்டவே மாட்டேன் என்கிறார் என்று சுந்தர்.சி மீது நமக்கு கொஞ்சம் கோபம் ஏற்படுவது இயற்கைதான். அதையெல்லாம் சேர்த்துக் கடைசிப் பாடலில் பின்னி பெடல் எடுத்து விட்டார்கள். கூடவே சிம்ரன் குஷ்புவும் கை கோர்க்க, சீனியர் சிட்டிசன்களும் சீட்டி அடித்து மகிழலாம்.

துண்டு துண்டாகக் கதை நகர்ந்தாலும் கோர்த்து பார்த்தால் ஒரு கதம்ப ஒற்றுமை இருப்பதும், தாய்ப் பாசம், தங்கைப் பாசம் இவற்றுடன் பேயாட்டமும் இணைந்து கொள்ள குடும்பங்களுக்கான கோடை விருந்தாக அமைகிறது இந்தப்படம்.

இந்தப் பட வெற்றி, அரண்மனை 5 -க்கும் அஸ்திவாரம்  போட வைத்துவிடும் சுந்தர் சியை..?

அரண்மனை 4 – அமானுஷ்யம் ஜோர்..!