‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிக்ளை நீக்க வேண்டுமென்று ஆளும் கட்சியினர் போராட்டங்களை நடத்துவதைத் தொடர்ந்து அந்தக் காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மீடியாக்களிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், இது குறித்து சர்கார் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்தோ, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் தரப்பிலிருந்தோ எந்த விளக்கமும் இல்லை.
ஆனால், சர்காருக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கமலும், ரஜினியும் தணிக்கை செய்யப்பட்ட படத்தின் மீதான போராட்டங்கள் தேவையில்லை என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் இன்று காலை முதலே ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்படலாம் என்று தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வருவதை அடுத்து பரபரப்பு நிலவி வருகிறது. விசாரித்ததில் அவர் வீட்டுக்குப் பாதுகாப்பு தருவதற்காக போலீஸ் வந்ததாகத் தெரிகிறது.
ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் “நேற்று இரவு என் வீட்டுக் கதவை போலீஸ் பலமாகத் தட்டினார்கள். நான் இல்லை என்றதும் சென்று விட்டார்கள்…” என்று செய்தி தெரிவிக்கிறார்.
இதற்கிடையில் உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கேட்டு மனுச் செய்திருப்பதாகவும், அது தொடர்பான விசாரணை மதியம் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன..!
இந்நிலையில் இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டுக்குச் சென்றிருப்பதாக தகவல்கள் வருகின்றன.