November 22, 2024
  • November 22, 2024
Breaking News
December 10, 2021

ஆன்டி இண்டியன் படத்தின் திரை விமர்சனம்

By 0 514 Views

10 வருடங்களுக்கும் மேல் பத்திரிகை சாராத சுதந்திர விமர்சனத் துறையில் சமூக வலைதளத்தில் தவிர்க்கமுடியாத விமர்சகராக இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

அது எத்தனை பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி, எத்தனை பெரிய இயக்குனர் படமாக இருந்தாலும் சரி படம் சரியில்லை என்று அவருக்கு தோன்றினால் கிழித்து தொங்க விட்டு விடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் காரணத்தாலேயே லட்சக் கணக்கில் ஆதரவுகளையும் அதை விட பெரிய அளவில் எதிர்ப்புகளையும் சம்பாதித்து வருபவர்.
 
அவரே ஒரு படம் இயக்கினால் எப்படி இருக்கும் என்ற எல்லோருடைய கேள்விக்கும் பதிலாக அவர் இயக்கியிருக்கும் படம்தான் ‘ஆன்டி இண்டியன்’. படம் வருவதற்கு முன்பே பைசா செலவில்லாத பப்ளிசிட்டிகளை அவர் மூலமாகவே பெற்று இருக்கிறது படம்.
 
“உன் படம் வரட்டும் அதை நான் விமர்சனம் செய்கிறேன்..!” என்று சூளுரைத்த பாரதிராஜாவே இந்த படத்தை பார்த்து விட்டு “நீதான் படத்தை இயக்கினாய் என்று நம்பவே முடியவில்லை. எப்படி இப்படி அருமையான ஒரு படத்தை எடுத்தாய்..?” என்கிற அளவில் பாராட்டித் தள்ள இன்னும் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடுதலாகவே இருந்தது.
 
தயாரிப்பாளர் தயவில் தமிழ் தவிர பிற மொழிப்படங்களின் ஞானம் அறியாத தனிப்பட்ட சில யூடியூப் சேனல்வாசிகளும் சுய லாபத்துக்காக இந்தப் படத்தை ஊது ஊதென்று ஊதி பெரிதாக்கி விட்டனர். ஆப்படியும் இந்தப் படத்தை முன்னிலைப் படுத்த முடியாமல் 
அங்கே தடை, இங்கே தடை என்று நெகடிவ் பப்ளிசிட்டிகளைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை.
 
தன் சேனல் விமர்சனங்களில் படங்களை வாங்கு வாங்கு என்று வாங்குவது போலவே இந்த படத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் வாங்கு வாங்கு என்று வாங்கியிருக்கிறார் நீலச் சட்டைக்காரர்.
 
பல சினிமா இயக்குனர்களும் தங்கள் ஜாதிகளை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க இவரோ இந்து, முஸ்லிம், கிறித்துவ மூன்று மதங்களையும் அதிலுள்ள மதவாதிகளின் முகத்திரையையும் பாரபட்சமில்லாமல் கிழித்துத் தொங்க விட்டிருக்கிறார்.
 
மதம் மட்டும் அல்லாமல் ஆட்சி நடத்தும் அதிகாரம் கொண்ட அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளான கலெக்டர், தாசில்தார், போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்லாமல் மீடியாக்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் கிழி கிழியென்று கிழித்துத் தொங்க விட்டிருக்கிறார்.
 
அதையும் தாண்டி கதைக்கு முக்கியமான ஒரு பாத்திரத்தில் அவர் நடித்தும் இருக்கிறார். அது என்ன பாத்திரம் என்றால் அவரை வெறுக்கும் சினிமா ரசிகர்கள் அவரை எப்படிப் பார்க்க விரும்புவார்களோ அந்த வேடத்தில் அவர் வந்திருப்பதுதான் சிறப்பு.
 
ரஜினி, விஜய், அஜித் படங்களை எல்லாம் அவர் ஓட்டுவதில் பதட்டமாகும் ரசிகர்கள் விரும்புவதைப் போலவே படத்தில் பிணமாக வருகிறார் அவர். குப்பத்தில் வசிக்கும் பாட்ஷா என்ற பெயர் கொண்ட பெயிண்டரான அவரை யாரோ கொலை செய்து விட்டார்களாம். அந்த கொலையைப் பற்றி போலீஸ் துப்பு துலக்கிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் அவர் சார்ந்த மயிலாப்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
 
பாட்ஷாவான மாறனின் அப்பா முஸ்லிமாகவும் அம்மா இந்துவாகவும் இருக்க இப்போது எந்த முறைப்படி அவரது உடலை அடக்கம் செய்வது என்று ஒரு பிரச்சனை ஓடுகிறது அதன் விளைவாக இஸ்லாமியர்களும் அவரது உடலை ஏற்க மறுக்க இந்து மயான பூமியிலும் அவர் இந்துவாக இல்லாத காரணத்தால் அவரது உடலை புதைக்க முடியாமல் போகிறது. அவருடைய அம்மா ஒரு கட்டத்தில் கிறிஸ்தவராக மாறிய காரணத்தால் அவர் உடலை புதைக்க கிறிஸ்தவ பாதிரியார் சுயநலத்துடன் முன்வருகிறார்.
 
யார் யாரெல்லாம் மறுத்தார்களோ அவர்கள் எல்லாம் தங்களின் மத ரீதியான ஆதாயத்திற்காக மீண்டும் அவர் பிணத்தைக் கேட்டு வர மீண்டும் ஒரு மோதல் வெடிக்கிறது. இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் ஆளும் கட்சியும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் எதிர்க்கட்சியும் இந்த பிரச்சினையை பூதாகரமாக்கி எப்படி தாங்களும் ஆதாயத்தை பார்க்கிறார்கள் என்பதுதான் கதை.
 
படத்தின் கதை, அதை நகர்த்திச் செல்லும் திரைக்கதை, அங்கங்கே அரசு திட்டங்களை விமர்சிக்கும் வசனங்கள் என்று அலுப்பில்லாமல் நகர்கிறது படம். ‘அடடே எப்படியும் ப்ளூ சட்டை மாறன் படம் நன்றாக இருக்கிறதே..?’ என்ற எண்ணம் வரும் வேளையில் இந்த படம் அப்படியே அப்பட்டமான ஒரு இந்திப் படத்தின் எடுத்தாண்ட… அதாவது சுட்ட கதை என்று தெரிய வந்தது.
 
2014ம் ஆண்டு வெளியான ‘தேக் தமாஷா தேக்’ என்ற அந்த இந்திப் படத்திலும் ஒரு பெயிண்டர் அகாலமாக இறந்துபோக அதை வைத்து மதவாதிகளும் அரசும் செய்யும் சேட்டைகள்தான் படம் முழுக்க. இந்தப்படத்தின் விக்கி பீடியாவிலேயே இதைக் கொஞ்சம் எடுத்தாண்டு உருவான படம்தான் ஆன்டி இண்டியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நிறைய உலகப் படங்களை பார்க்கும் வழக்கம் உடைய ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனங்களில் எந்தப் படம் எந்த படத்தில் இருந்து உருவப்பட்டது என்பதையெல்லாம் சொல்லி இதை செய்ததற்கு இந்த இயக்குனர் மாடு மேய்க்க போகலாம்… பெட்டிக்கடை வைத்து பிழைக்கலாம் என்றெல்லாம் ஓட்டுவார்.
 
இப்போது அவர் இயக்கிய படமே ஒரு பிராந்திய மொழிப் படத்தின் அப்பட்டமான காப்பி என்பது தெரிய வந்த நிலையில் அவரது ப்ளூ சட்டை கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. படத்தில் வரும் ஒரு புறா கதைக்காக அதைச் சொன்ன தென்கச்சி சாமிநாதனின் பெயருக்கு டைட்டிலில் நன்றி பாராட்டுபவர், இந்திக் கதையை வைத்துதான் இந்தக் கதையை எடுத்தேன் என்று சொல்லாமல் முழு ஆட்டை பிரியாணிக்குள் மறைத்து விட்டார்.
 
இதுதொடர்பான விமர்சனங்களுக்கு அவர் இதுவரை பதில் சொன்னதாகத் தெரியவில்லை. இந்தப் படத்தை பாராட்டிய விமர்சகர்களும் சரி, சினிமா கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் சரி உள்ளூர் படங்களைத் தவிர எந்த சினிமாவின் ஞானமும் இல்லாமல்தான் தன் படத்தை விமர்சித்து வருகிறார்கள் என்று அவர் சொல்ல வாய்ப்பிருக்கிறது.
 
தன் படத்தை திரையிட்டுக் காட்டி பாராட்டு வாங்கியதில் தமிழில் முக்கியமான இளையதலைமுறை இயக்குனர்கள் ‘அப்பா’ என்று அன்புடன் கொண்டாடும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சட்டையையும் சேர்த்து கிழித்து தொங்க விட்டு விட்டார் ப்ளூ சட்டை மாறன். அவருக்கும் கூட பிற மொழிகளில் என்ன படங்கள் எடுக்கப்படுகின்றன என்ற ஞானமே இல்லாமல் இவரை வானளாவ புகழ்ந்து விட்டதில் அவருடைய மதிப்பும் கூட இறங்கித்தான் போய் விட்டது.
 
இறந்து மூன்று நாட்கள் ஆன பிணத்துக்கு ‘சுன்னத்’ செய்யப்போய் அதில் ரத்தம் வழியும் கத்தியைக் காட்டுவது எந்தவிதமான இயக்கம் என்று தெரியவில்லை. அதேபோல் இப்படத்தில் பத்தாயிரம் வாலா வெடி 5 வாங்கி வா என்று சொல்லிக் காசு கொடுத்து அனுப்பினாலும் 100 வாலாக்கள் மட்டுமே படத்தில் வெடித்துக் கொண்டிருக்கின்றன. படத்தின் தரமும் அந்த அளவுக்குதான்..!
 
மூலப்படத்தில் ஹோர்டிங் சரிந்து ஹீரோவான பெயிண்டர் இறந்ததாக வருவதை இயல்பாக இருக்கிறது. ஆனால், இதில் பெயிண்டரை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று இயல்புக்கு முரணாக வைத்ததில் அவரைக் கொன்றது யார் என்பதைக் கடைசிவரை அவரால் சொல்லவே முடியவில்லை. ஒரு பெயிண்டரை யார் கொல்லப் போகிறார்கள்..?
 
படத்தின் இசையையும் நானே அமைக்கிறேன் என்று அவர் கிளம்பியதிலும் படத்தின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதையும் உணர முடிகிறது. படத்தில் வரும் கானா பாடல்களையும் அதன் ஒரிஜினல் பாடகர்களே எழுதி இசைத்து பாடி முடித்து விட அந்த வேலையும் அவருக்கு மிச்சமாகி இருக்கிறது.
 
ஒரு மாநிலத்தின் முதல்வரே 10 பொதுமக்களை கொல்லத் திட்டமிடுவதையும் அதை ஒரு போலீஸ் அதிகாரியே திட்டமிட்டு கொடுப்பதையும் எப்படி ஒத்துக் கொள்ள முடியும்..? இதற்கு சென்சார் தெரிவித்த தடைகளை எலலாம் தாண்டி இப்போது படம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது அரசுக்கே சவால் விடும் வேலைதான்.
 
தன் விமர்சனங்களில் எல்லாம் ரஜினியைத் தாறுமாறாக விமர்சிப்பவர் படத்தில் தன் பெயரை பாட்ஷா என்று வைத்துக் கொண்டிருப்பதிலும், படத்தில் வரும் முகம் தெரியாத ஒரு முன்னணி நடிகருக்கு ‘கபாலி’ என்று பெயர் வைத்து “அவர் 25 வருஷமா அரசியலுக்கு வரேன் வரேன்னு சொல்லி ரசிகர்களையே ஏமாத்துறவர்…” என்றெல்லாம் வசனம் வைத்து ரஜினியை மறைமுகமாகப் பயன்படுத்திக்கொள்வதும் சுயநலம் அல்லது மலிவான விளம்பரம் அன்றி வெறேன்ன..?
 
ஆன்ட்டி இண்டியன் என்ற பெயர் வைத்து விட்டதாலோ என்னவோ ‘ஆன்ட்டி’ வயதை தாண்டிய கிழவிகளைத் தவிர படத்துக்குள் எந்த இளைய வயது பெண்ணுமே இடம்பெறவில்லை.
 
சினிமா விமர்சனம் என்ற பெயரில் பல சினிமாக்காரர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் வழக்கமுடைய ப்ளூ சட்டை மாறன் படத்தில் தான் மட்டும் இறந்தது பத்தாது என்று தான் இறந்ததன் விளைவாக பொதுமக்கள் 13 பேரையும் கதைக்குள் போட்டு தள்ளி இருப்பதையும் என்னவென்று சொல்வது..?
 
அத்துடன் இந்தப் படமும் அப்பட்டமான காப்பி என்கிற அளவில் இனி ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனங்களில் காப்பி அடித்த படங்களை கிழித்துத் தொங்க விடுவதை நிறுத்துவாரா அல்லது அடுத்த படம் எடுப்பதை நிறுத்திக் கொள்வாரா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.
 
ஆன்ட்டி இண்டியன் – கிழிந்தது ப்ளூ சட்டை..!