November 22, 2024
  • November 22, 2024
Breaking News

அன்பிற்கினியாள் படத்தின் திரை விமர்சனம்

By on March 5, 2021 0 617 Views

முதலில் இப்படி ஒரு அருமையான தமிழ்த்தலைப்பு வைத்ததற்காக பாராட்டுகளை தெரிவித்து விட்டு விமர்சனத்தை தொடரலாம் .

மலையாளத்தில் வெளியாகி வெற்றி அடைந்த ‘ஹெலன்’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் கோகுல். தன் மகள் கீர்த்தி பாண்டிய னுக்காக தானே தயாரித்ததுடன் நடித்தும் இருக்கிறார் அவரது தந்தை அருண்பாண்டியன். 

இந்த இரண்டு சுவாரஸ்யங்கள் மட்டுமல்லாது அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் தந்தை மகளாகவே நடித்து இருப்பதும் இந்த படத்தின் ஹைலைட்.

எல்.ஐ.சி. ஏஜெண்டாகப் பணிபுரிந்து வரும் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன், அப்பாவின் கடனை அடைக்க கனடா சென்று வேலை செய்ய முயற்சி செய்வதுடன் அதுவரை ‘சிக்கன் ஹப் ‘ ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இன்னொருபக்கம் பிரவீன் ராஜை காதலிக்கிறார். இவர்களின் காதல் அருண் பாண்டியனுக்கு தெரியவர அவர் ஒரு நாள் முழுவதும் மகளுடன் பேசவில்லை. அந்த வருத்தத்துடன் பிரவீன் ராஜும் வெளி மாநிலத்துக்கு வேலைக்குச் செல்ல இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்குச் செல்லாமல் சிக்கன் ஹப்பிலேயே இருக்கிறார் கீர்த்தி. 

இந்நிலையில் வீட்டுக்கு கிளம்பும் நேரம் எதிர்பாராத விதமாக இறைச்சி குளிரூட்டும் அறைக்குள் மாட்டிக் கொள்கிறார். இறுதியில் அங்கிருந்து கீர்த்தி பாண்டியன் தப்பித்தாரா அவரது தந்தை மற்றும் காதலருடன் இணைந்தாரா என்பதுதான் கிளைமாக்ஸ்.

ஹீரோவாக நடிப்பதை நிறுத்திய பின் இடையில் விஜயகாந்த் மற்றும் அஜித் படங்களில் தலைகாட்டிய அருண் பாண்டியன் கீர்த்தி பாண்டியனுக்காக இந்தப் படத்தில் இணைந்துள்ளார். 

கட்டுடலை இன்னும் காப்பாற்றி வரும் அருண் பாண்டியனுக்கு இந்தப் படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் வைத்திருக்க முடியும். ஆனால் இது ஒரு பாசப் போராட்டக் கதை என்பதால் அதை  மட்டுமே உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார் அருண்பாண்டியன்.

மகள் மீது பாசத்தை பொழிவதாகட்டும், அவள் காணாமல் போன பிறகு ஏற்படும் தவிப்பை காட்டுவதாகட்டும் தந்தைக்குரிய பொறுப்பை உணர வைக்கிறார் அவர். தமிழ் சினிமாவுக்கு பாசம் பொருந்திய இன்னொரு வசீகரமான அப்பா இந்தப்படம் மூலம் தயாராகிவிட்டார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம்  கிடைத்து இருப்பதில் கீர்த்தி பாண்டியன் பெருமை கொள்ளலாம். அவரது குற்றமற்ற முகம் காதலிக்கும் போதும் அப்பாவின் பாசத்தை இழந்துவடுவோமோ என்று பதட்டப் படும்போதும் மிகப்பொருத்தமாக இருக்கிறது. குளிரூட்டும் அறைக்குள் சிக்கிக் கொண்டாலும் தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ளும் விதம் ரசிக்க வைக்கிறது .

கீர்த்தி பாண்டியனின் காதலனாக வரும் பிரவீன் ராஜ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். எஸ்.ஐ.யாக நடித்த ரவீந்திர விஜய், சிக்கன் ஹப் மேனேஜராக நடித்த பூபதி ராஜா, மால் செக்யூரிட்டியாக நடித்த ஜெயராஜ் (ஒரிஜினல் மலையாள படத்திலும் இவர்தானாம்) என அனைவரும் அவரவர் பாத்திரங்களுக்கு பொருத்தமாக இருக்கிறார்கள்.

முக்கியமான ஒரு கீ ரோலில் வந்து, கைத்தட்டல் வாங்கிக் கொண்டு போகிறார் இயக்குனர் கோகுல்.

இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்களும் பாராட்ட வைக்கின்றன. குளிரூட்டும் அறைக்கு சரியான ஒளியூட்டி நம் உணர்வுகளை சில்லிட வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி.

நீண்ட இடைவெளிக்குப்பின் வந்திருக்கும் பாசக் கதை என்பதால் குடும்பங்களை தியேட்டர்களில் பார்க்க முடியும். இந்தப்படத்தின் மூலப் படமான ஹெலன் எடுத்தவர்களே பார்த்தால் கூட பாராட்டத்தான் செய்வார்கள் .

அன்பிற்கினியாள் – அப்பா பொண்ணு..!