யூடியூப்பில் சக்கைப்போடு போட்ட அம்முச்சி சீசன் 1 வெற்றியை தொடர்ந்து இப்போது ஆஹா ஓடிடி தளத்தில் அம்முச்சியின் இரண்டாவது சீசன் திரைப்படமாகவே வெளியாகி இருக்கிறது.
அதே கொங்கு மண்டல குழு இந்த படைப்பிலும் அசத்தி இருப்பதுடன் யூடியூப் நேர்த்தியை தாண்டி திரைப்பட நேர்த்தியையும் கொண்டிருப்பது நல்ல வளர்ச்சி.
தங்கள் ஊர் அலப்பறை வழக்கப்படியே அம்முச்சியின் ஊரான கோடாங்கி பாளையத்தில் பிரசன்னா பாலச்சந்திரனின் குடும்ப மானம் அவர் மகன் சசி வடிவில் பஞ்சாயத்துக்கு வந்து நிற்க… இங்கே நாயகன் அருண், வெட்டியாகப் பொழுது போக்கிக்கொண்டு நேரம் கெட்ட நேரத்தில் அம்முச்சி ஊரிலிருக்கும் காதலிக்கு போன் போட்டு டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார்.
அதன் காரணமாக அவளது கல்லூரி செல்லும் கனவும் தகர்ந்து போக அருணுக்கு போனை போட்டு வாட்டி, வதக்கி எடுக்கிறாள். அவளது காதலையும், கல்வியையும் காபந்துப்படுத்துவதற்காக அம்மாவிடம் கோவா போகிறேன் பேர்வழி என்று சொல்லிவிட்டு கோடாங்கி பாளையம் சென்று அருண் அடிக்கும் லூட்டிகள்தான் மொத்த கதையும்.
சினிமாவுக்கான ஹீரோவும், ஹீரோயினும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பவுடர் பூச்சுகளை எல்லாம் கலைத்துப் போட்டு விட்டு, நிஜம் எப்படி இருக்கிறதோ… அதை அப்படியே பிரதி எடுத்துப் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜேஸ்வர் காளி சாமி.
அதிலும் ஹீரோயின் நடிப்பு கூட அத்தனை இயல்பாய் அழகியல் குறித்த எந்த நிபந்தனையும் வைத்துக் கொள்ளாமல் வாங்கு வாங்கென்று வாங்குகிறது. காதலனுடன் சேரக்கூடாது, பேசக் கூடாது என்று தடுக்கும் பெற்றோரை புறங்கையால் ஒதுக்கி வி்ட்டு அவர் காட்டும் அலப்பறை அமளி.
அருணும் அப்படியே. கூச்சம் நாச்சம் இல்லாத அவர் கேரக்டர் தமிழுக்குப் புதிதாகவே இருக்கிறது. அம்முச்சி சின்னமணி, மாகாளியாக வரும் சந்திரகுமார், வில்லன் மசநாய் மணியாக வரும் ராஜேஷ் பாலசந்திரன் எல்லோருமே பண்பட்ட நடிகர்களாகப் பின்னி எடுத்திருக்கிறார்கள்.
வயதை கணக்கு வைத்துக் கொள்ளாமல் பார்த்தால் படத்தின் ஹீரோ பிரசன்னா பாலச்சந்திரன்தான் என்று சொல்லலாம். அங்கங்கே மணிவண்ணனை நினைவு படுத்துபவர், முன்னவரது இழப்பால் நேர்ந்து விட்ட திரை வெற்றிடத்தை நிரப்ப இயலும்.
பஞ்சாயத்து அடிதடி பிரச்சனை விவகாரங்களில் யார் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டுமென்பதை எப்படித்தான் திட்டமிட்டு படமாக்கினார்களோ, அத்தனை இயல்பு.
அதில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் திறமை பளிச்சிடுகிறது. விவேக் சரோவின் இசையும் உணவுக்கு உப்பைப் போல சரிவிகிதத்தில் உணர்வுக்குப் பயன் பட்டிருக்கிறது.
சற்றே நீளமான கதை சொல்லல் மட்டும் அங்கங்கே நெளிய வைத்தாலும், அதை நகைச்சுவை இட்டுக் கட்டி நிரப்பி விடுகிறது.
கிளைமாக்சில் பெண்கல்வியை முன்னிலை படுத்துவதைக் கைத்தட்டி வரவேற்கலாம்.
அம்முச்சி – இன்னும் நிறைய சீசன்கள் எதிர்பார்க்கலாம்..!
Related