தாய்ப் பாசக் கதைகள் நிறைய வந்திருக்கின்றன. ஆனால், மலையாளம் வழியாகத் தமிழுக்கு வந்திருக்கும் இந்தப் படம், தாய்மை குறித்த ஒரு கேள்வியை எழுப்புகிறது.
குழந்தைக்கான ஒரு தாயின் போராட்டம் மற்றும் ஒரு குழந்தைக்கான இரண்டு தாய்களின் போராட்டம்… இவை எல்லாமே நாம் திரையில் பார்த்து இருக்கிறோம்.
ஆனால், இந்தப் படத்தில் பெற்ற தாய்(கள்..?) கைவிட்டு விட, பெறாத ஒரு குழந்தைக்காக வளர்ப்புத்தாய் எதிர்கொள்ளும் போராட்டம் வித்தியாசமானது.
காப்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கவிபிரசாத் கோபிநாத் எழுதிய கதையை திறம்பட இயக்கி இருக்கிறார் செபாஸ்டியன் தோமஸ்.
படத்தின் ஆரம்பமே குழந்தை பெற்றுக்கொள்ள இரண்டு முறை முயற்சித்தும் முடியாமல் போய் மூன்றாவது… இறுதி முறையாக ஒரு முயற்சியை மேற்கொள்ள முடிவெடுக்கும் மீரா வாசுதேவ் நமக்கு அறிமுகப்படுத்தப்பட… கதை தொடங்குகிறது.
அதற்குப் பிறகு மலை கிராமம் ஒன்றில் சாலை அமைப்பதற்காக பொறியாளர் ஒருவர் அங்கு வந்து சேர, அந்த வட்டாரத்தின் வார்டு மெம்பர் அவருக்கான உதவிகளைச் செய்து வருகிறார்.
வந்த சில தினங்களிலேயே அவர் ரோடு போட வந்தவர் இல்லை… வேறு ஒரு ரூட் விட வந்தவர் என்பது நமக்குப் புரிய வைக்கப்படுகிறது.
அதே மலை கிராமத்தில் தன் பேத்தியோடு வசித்து வரும் தேவதர்ஷினியும் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். குழந்தையின் பெற்றோர் சில வருடங்களுக்கு முன் கேரளத்தில் வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள் எனவும், பேத்தியும் பாட்டியும் மட்டுமே தனியாக வசித்து வருகிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
அவர்கள் வழியில் பொறியாளர் வேடத்தில் வந்தவர் குறுக்கிட்டு, அவர்களின் கடந்த கால வாழ்க்கைக்கு நெறியாளராக மாறுகிறார். அது என்ன… ஏன் என்பதுதான் அந்த வித்தியாசமான கதைக்களம்.
ஏற்கனவே பல குணச்சித்திர வேடங்களில் இங்கே கலக்கி வரும் தேவதர்ஷினிக்கு இதில் சீரியஸான பாட்டி வேடம். ஒரு குழந்தையின் நல்வாழ்வுக்காக அவர் மேற்கொள்ளும் போராட்டம் உணர்ச்சிமிக்கது.
பொறியாளராக அறிமுகம் ஆகி பின்னர் போலீசாக உருவெடுக்கும் திலீப் போத்தன் தன் வேடத்துக்குப் பெருமளவு நியாயம் செய்திருக்கிறார். பொறியாளர் வேடத்துக்கு பாந்தமான பார்வையும் போலீஸ் வேடத்துக்கு மிடுக்கான பார்வையுமாக அவர் மாற்றி நடித்திருப்பது நுட்பமான உத்தி.
வார்டு மெம்பராக நடித்திருப்பவரும், பார்வைத் திறனாளியாக நடித்திருப்பவரும் கூட நயம்படச் செய்திருக்கிறார்கள்.
சிறப்புத் திறனோடு வரும் அந்த ஆறு வயதுக் குழந்தை அத்தனை அழகு. அவள் வாழ்க்கையில் இத்தனை பிரச்சனைகளா என்று நினைக்கும் போது மனம் பதறுகிறது.
பேச முடியாத குழந்தைக்கு குயிலி என்று பெயர் வைப்பதில் தொடங்கி, அவள் கைக் குழந்தையாக இருக்கும்போது பெற்ற தாயே அவளைப் பிரிய முடிவெடுக்கும் காட்சி வரை இயக்குனர் செபாஸ்டியன் தாமஸ் முத்திரை பதித்திருக்கிறார்.
யாருமில்லாத தனி வீட்டில் அந்த பச்சைக் குழந்தையை விட்டுவிட்டு அவள் தாய் செல்லும் காட்சி நம்மைக் கண்கலங்க வைத்து விடுகிறது.
நல்ல கதைகளே வருவதில்லை என்று அலுத்துக் கொள்பவர்கள் நிச்சயமாக இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும்.
அம்… ஆ – அம்மம்மா..!
– வேணுஜி