தமிழ்சினிமாவுக்கு வெற்றிபெறும் கனவுகளுடன் எத்தனையோ பேர் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கனவு ஒன்றுதான் உறுதுணையாக இருக்கிறது. ஆனால், “உங்களுக்கு மனம் இருந்தால் போதும், வென்று விடலாம்…” என்ற மந்திரத்துடன் தமிழ் சினிமாவுக்குள் வருகிறார் ஒரு தன்னம்பிக்கை மனிதர்.
அவர் ஏ.எல்.சூர்யா. அவரைப் பற்றிக் கொஞ்சம் அறிந்துகொண்டால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
சூர்யா யுடியூபில் பிரபலம். ‘பி பாஸிட்டிவ்’ என்ற பெயரில் அறியப்பட்டு மனவளக் கலையை மக்களுக்கு போதித்துக் கொண்டிருக்கிறார். “என் மூலம் வாழ்க்கையில் வளம் கண்டவர்கள் ஏராளம்…” என்கிற இவரது பேச்சை உலகம் முழுதும் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள்.
மனவளக்கலையை பொருளாக்கி ‘ஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்’, ‘பணமே பணமே ஓடோடிவா’, ‘பேராற்றல் படைத்தவர்களே எழுந்திருங்கள்’ என்ற நூல்கள் எழுதி அதன்மூலமும் பிரபலமானவர். இப்படி வாழ்க்கையை நேர்மறை எண்ணங்களோடு எதிர்கொண்டு வெற்றி கொண்டிருந்தவர் தனக்குத் தெரிந்த இசை மூலம் கோலிவுட்டுக்குள் நுழைந்தார். அந்தப்படம் சில காரணங்களால் தடைபட்டுவிட இசை ஆல்பம் வெளியிட்டு தன் ஆவலை நிறைவேற்றிக் கொண்டார்.
இப்படி பத்து வருடங்களாக இசையும், சினிமாவுமாகப் புழங்கிக் கொண்டிருந்தவர் தூக்கத்தில் ஒருநாள் கனவு ஒன்று வந்திருக்கிறது. கண்ட கனவில் நடிகை ஸ்ரேயாவின் ஜோடியாகி இவரே டூயட் பாடியிருக்கிறார். இது ஏன் என்று சிந்தித்தவர் இதுவரை தான் சினிமாவில் பெற்ற ஆசை, துரோகம், வஞ்சம், கண்டவை, கேட்டவை, அனுபவித்தவை ஆகியவற்றையெல்லாம் தொகுத்து அதையே 560 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலாகவே எழுதி முடித்துவிட்டார். ‘அனிதா பத்மா பிருந்தா’ என்று தலைப்பிட்ட அந்த நாவல் இப்போது விற்பனையில் இருக்கிறது.
சினிமாத்துறையின் பல ரகசியங்களையும், நாமறிந்த விஐபிகளின் உண்மை முகத்தையும் காட்டும் நூலானதால் அது சொல்லும் திரைமறைவு உண்மைகள் ஏராளம்.
இப்படியொரு நாவலை எழுதி விட்டு ஓய்ந்துவிடவில்லை சூர்யா. அதையே திரைப்படமாக்கி கனவில் கண்ட அதே ஸ்ரேயாவை நாயகியாக்கி டூயட் பாடிவிடுவது என்று ‘அனிதா பத்மா பிருந்தா’ என்று நாவல் தலைப்பிலேயே படம் தொடங்கியிருக்கிறார். அவரே கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயாரிப்பு என்று அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் ஏற்கிறார். ஸ்ரேயாவுடன், பூர்ணா, பூனம் பஜ்வா போன்றோரையும் நாயகிகளாக்கும் திட்டமும் அவருக்கு இருக்கிறது. “அவர்களது தேதிகள் ஒத்துவராவிட்டால் மட்டுமே நடிகைகளில் மாற்றங்கள் நிகழும்…” என்கிறார் சூர்யா.
பரபரப்புடன் விற்பனையாகும் நாவல் படமாவதால் அது சினிமாவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.
படத்தில் சூர்யாவேதான் ஹீரோ என்று சொல்லத் தேவையில்லை. “நீங்கள் நடிகனாக வேண்டிய கட்டாயம் என்ன..?” என்றால் “அது பிரபஞ்சத்தின் கட்டளை…” என்கிறார்.
“நான் ஏன் கனவு காண வேண்டும்..? அது ஏன் நாவலாக வேண்டும்…? அது போலவேதான் நான் நடிகனாக வேண்டும் என்பதும். இது நடந்தே தீரும்..!” என்கிறார் உறுதியுடன்.
காஸ்மாஸ் தியரி..?