September 8, 2024
  • September 8, 2024
Breaking News
June 1, 2024

அக்காலி திரைப்பட விமர்சனம்

By 0 214 Views

வித்தியாசமான கதைக்களங்களை அமைக்க நம் இயக்குனர்கள் ரொம்பவே போராடுகிறார்கள் என்பது இந்தப் படத்தை பார்த்தபின் இன்னும் ஒரு முறை உறுதிப்பட்டது. 

போதை மருந்து கடத்தல் கும்பல் ஒன்றை பிடிக்க ஒரு சுடுகாட்டுக்கு போன இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாருக்கு வேறு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. அது சாத்தான்களை வழிபடும் ஒரு கும்பலை பற்றியது. 

அதில் அமானுஷ்யப் பிரச்சனைகள் எழ, அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் திடீர் திடீர் என்று காணாமல் போக, என்னதான் நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்கு முன்னரே அந்த வழக்கில் இருந்து அவரை வெளியேறச் சொல்லி மேல் இடத்தில் இருந்து அழுத்தம் வருகிறது. 

ஆனாலும் விடாமல் அந்தக் கேசை துப்பறிந்த ஜெயக்குமாருக்கு கிடைத்தது என்ன… இதன் முடிவு என்ன என்பதை இந்தப் படத்தில் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. இதன் அடுத்த பாகத்தை பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும் என்கிற ரீதியில் கதை முடிகிறது. 

சாத்தான்கள் வழிபாடு, நரபலி என்கிற விஷயங்கள் எல்லாம் ஏதோ முன்னொரு காலத்தில் நடந்தவையாக படத்தில் காட்டப்படவில்லை. எல்லாமே 2016க்கு பிறகு நம் சென்னையைச் சுற்றியே நடப்பதாகக் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் நாம் நம்புவதற்கும், படத்தோடு நம்மை பொருத்திக் கொள்வதற்கும் கடினமாக இருக்கிறது.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜெய்குமார்தான் கிட்டத்தட்ட படத்தின் ஹீரோ போல வருகிறார். இரண்டாவது பாதிக்கு மேல் அறிமுகமாகும் கிறிஸ்துவ மத போதகர் நாசர் பின் பாதிப் படத்தை ஆக்கிரமிக்கிறார்.

காவல்துறையில் உயர் அதிகாரியாக வரும் தலைவாசல் விஜய்யுடன், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என பல பாத்திரங்கள் படத்தில் உலவுகின்றன. அவர்களை அடையாளம் காண்பதற்கும் புரிந்து கொள்வதற்குமே நிறைய மெனக்கெட வேண்டி இருக்கிறது.

கதை திரைக்கதையில் பேய்க் குழப்பு குழப்பி இருந்தாலும் படத்தின் செய் நேர்த்தி அதிசயிக்க வைக்கிறது.

குறிப்பாக ஒளிப்பதிவாளர் கிரி முர்பியின் கை வண்ணத்தில் இதுவரை பார்க்காத ஒரு தமிழ்ப் பட அனுபவமாக இது இருக்கிறது. தமிழை மட்டும் மாற்றி விட்டால் ஒரு உலக முயற்சி மேற்கொண்ட படம் போல் தோன்றும் வண்ணங்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தோட்டா தரணியின் கலை இயக்கத்தில் கிராபிக்ஸ் கலைஞர்களும் ஒன்றிணைந்து ஒரு அமானுஷ்ய உலகத்தை படைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் தொழில்நுட்ப ரீதியாக பிரம்மாண்டப்படுத்தியிருந்த பல படங்கள் வெற்றி பெற்றதில் நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை இயக்குநர் முகமது ஆசிப் ஹமீத் சொல்ல முயற்சித்து இருப்பது புரிகிறது. 

கதைக்களமே குழப்பமாக இருப்பதுடன் இப்படிப்பட்ட மனிதர்கள் நமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நம்ப முடியாத கதையை… நம்புகிற களத்தில் எடுத்திருப்பது மிகப்பெரிய முரண்பாட்டை ஏற்படுத்துகிறது. 

படம் முடிந்து வந்ததும் எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி “இந்தப் படத்தின் கதை என்ன..?” என்பதுதான். பார்வையாளர்களுக்குப் புரியாத எதுவுமே போய்ச் சேர்வது கடினமான விஷயம். 

முக்கியமாக படத்தின் தலைப்பு. அக்காலி என்று இயக்குனர் சொல்ல வருவது சாத்தான்களை வழிபடும் குழுவை வழிநடத்தும் தலைமைப் பதவியைத்தான்.

இதற்காக நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை அவர் எழுதி இருப்பது புரிகிறது. 

ஆனாலும் யாருக்காக இந்தப் படம் எடுக்கப்பட்டது, எந்தவிதமான ரசிகர்கள் இதை ரசிக்க முடியும் அல்லது படம் சொல்லும் செய்தி தான் என்ன என்ற கேள்விகளுக்கெல்லாம் எந்த பதிலும் இல்லை. 

செய் நேர்த்திக்காக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

அக்காலி – அமானுஷ்யப் பங்காளி..!