“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ?” என்பது போலவே “என்ன திறமை இல்லை இந்த திருநாட்டில் ?” என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ரவி அரசு.
பல இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் இந்த சமூகத்துக்கு தேவைப்படும் விதத்தில் இருந்தாலும் அவற்றுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதில் அரசு சுணக்கம் காட்டி வருவது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். அதை முன்னிலைப்படுத்தி ஒரு கதையைப் படமாக எடுத்திருக்கிறார் அவர்.
நாமக்கல்லில் நடுத்தர குடும்பத்தில் ஒரு காவலரின் மகனாக இருக்கும் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நவீன அறிவியல் கருவிகளை கண்டுபிடித்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறார். இதற்கிடையில், வட நாட்டு கொள்ளை கும்பல் ஒன்றின் சதித் திட்டத்தில் அப்பாவி சிறுமி ஆழ் துளைக் கிணற்றுக்குள் விழுந்து விட, தன் கண்டுபிடிப்பில் அவளை மீட்டெடுக்க உதவுகிறார் அவர். அதன்பின் என்ன ஆனது என்பது மீதிக் கதை.
அதேபோல கோழிப் பண்ணை உரிமையாளர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் கோழியின் எடையை அதிகரிக்க இரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவதால், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதை ஜி.வி வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் விதத்தையும் இயல்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். இந்த விஷயங்களுக்காக அவரைப் பாராட்டியே தீர வேண்டும்.
நாயகனாக வரும் ஜி.வி.பிரகாஷ்குமார் இளம் விஞ்ஞானி வேடம் ஏற்று இருக்கிறார். படத்துக்குப் படம் வித்தியாசமான வேடம் ஏற்பதில் இவரை மிஞ்சிய இளம் நடிகர் இங்கே இல்லை எனலாம்.
அறிவு நிரம்ப இருந்தும் அங்கீகாரம் கிடைக்காத விரக்தியை உணர்வுகளில் காட்டினாலும் ஆக்ஷன் காட்சிகளிலும் குறை வைக்காத ஜிவியின் பங்களிப்பால் படம் முழுவதும் பரபரப்பாக பறக்கிறது.
ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு இந்தப்படத்தின் பங்களிப்பு அவர் கேரியரில் முக்கியமான இடத்தைத் தரும்.
நாயகியாக மஹிமா நம்பியார் நிறைவாக செய்திருக்கிறார். ஜிவியின் நண்பராக காளி வெங்கட், தந்தையாக ஆடுகளம் நரேன், வில்லனாக ஹரீஷ் பெராடி உள்ளிட்ட அனைவருமே இயல்பாக நடித்து படத்தின் நேர்த்திக்கு உதவி இருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பான ஓட்டத்திற்கு உதவி செய்கிறது.
ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு அசர வைக்கிறது. பெரிய பட்ஜெட்டில் எடுத்த இந்திப்படம் போல ஒரு பிரமை இந்த ஒளிப்பதிவாலும் நேர்த்தியான எடிட்டிங்காலும் ஏற்படுகிறது.
படு த்ரில்லிங்கான க்ளைமேக்ஸ் காட்சி இயக்குனர் ரவிஅரசுவின் திறமைக்கு சான்றாக அமைகிறது.
இந்தியாவில் இருக்கும் இளம் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்புகளையும் இறுதியில் காட்டி அவர்களுக்கு மரியாதை செய்திருக்கும் அவருக்கு எழுந்து நின்று வரவேற்பு கொடுக்கலாம்.
ஐங்கரன் – அறிவாளி..!