September 16, 2024
  • September 16, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஜெயம் ரவியை சுற்றியே என் பயணம் – அகிலன் இயக்குனர் கல்யாண்
March 4, 2023

ஜெயம் ரவியை சுற்றியே என் பயணம் – அகிலன் இயக்குனர் கல்யாண்

By 0 250 Views

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. இப்படத்தை Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மார்ச் 10 அன்று இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. 

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. 

தயாரிப்பாளர் சுந்தர் பேசியதாவது…

“பத்திரிகை, ஊடக நண்பர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி, எனக்கு இது மிகப்பெரிய பயணம் என்னை நம்பிய ரவி சாருக்கு நன்றி, இந்தப் படத்தை உருவாக்குவது சற்று கடினமாகத்தான் இருந்தது ஏனென்றால் படப்பிடிப்பு முழுக்க துறைமுகத்தில் நடைபெற்றது, சில கப்பல்கள் வருவதற்கும் சில கப்பல்கள் செல்வதற்கும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது, ஆனாலும் படக்குழு இதை சமாளித்து, அருமையாக படத்தை எடுத்துள்ளனர். படத்தில் ஸ்டண்ட் குழு சிறப்பாக செயல்பட்டுள்ளது.

ஒரு காட்சியில் சென்று கொண்டிருக்கும் படகில் ஏற வேண்டியிருந்தது, டூப் போட்டு எடுத்துக் கொள்வோம் என்று சொன்னேன் ஆனால் ரவி சார் தானே அதை செய்தார், இது போன்று பல இடங்களில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார், பிரியா காக்கி சட்டையில் கலக்கியுள்ளார், தான்யா ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சாம் சி எஸ் இசையை பற்றி நான் சொல்லத் தேவையில்லை, படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்,.!”

நடன இயக்குநர் ஈஸ்வர் பாபு பேசியதாவது…

“முதலில் என் இயக்குநர் கல்யாண் சாருக்கும், வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் ரவி சாருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், நான் ஜனா சாரிடம் பணிபுரியும்போதிலிருந்தே கல்யாண் சாரின் அபார திறமையை பற்றி எனக்கு நன்கு தெரியும். அவருக்கு வாய்ப்பளித்ததற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. சாம் சி எஸ் சிறப்பான இசையை அளித்துள்ளார்,

நான் பணிபுரிந்துள்ள பாடல் மிகவும் அழகாக வந்துள்ளது, படத்தின் திருப்புமுனையாக இந்தப் பாடல் இருக்கும். இதற்கு நான் ஜெயம் ரவி சாருக்கும் சாம் சி எஸ் சாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், ரவி சார் யார் தவறு செய்தாலும் சிரமம் பார்க்காமல் பொறுமையாக வெயிலிலும் கூட நின்று, இந்த பாடலை முடித்துள்ளார்..!”

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…

“ஒரு படத்திற்கு கதைக்களம் மிக முக்கியம் கதை நடக்கும் இடம் படத்தின் தன்மையை மாற்றும், இந்தப்படத்தில் ஹார்பரில் நாம் பார்க்காத ஒரு வாழ்கையை, ஒரு புதிய உலகத்தை காட்டியுள்ளார்கள். கல்யாண் மிகப்பெரிய ஆராய்ச்சி செய்துள்ளார். பாடல்கள் பற்றி விவரிக்கும் போது கூட இந்த ராகத்தில் போடலாம் என்பார். எனக்கு ராகம், இசை எல்லாம் தெரியாது இப்போது தான் கற்றுக்கொள்கிறேன். ஆனால் இசையை எனக்கு பிடித்த வேலையாக விரும்பி செய்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது. ரவி சார் மிக நல்ல மனிதர், அவர் எந்த கதாப்பாத்திரமாகவும் மாறிவிடுவார். இந்தப்படத்திலும் கலக்கியுள்ளார்,.!”

நடிகை பிரியா பவானி சங்கர் பேசியதாவது…

“எல்லோருமே சொன்னது தான்… இந்தப்படத்தில் உழைத்த அத்தனை பேரும் பிடித்து மிக அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளார்கள். ஃபிஸிகலாக எல்லோருமே ரொம்ப கஷ்டப்பட்ட படம். தான்யாவுடன் நான் நடிக்கவில்லை ஆனால் அவருக்கு வாழ்த்துகள். ஜெயம் ரவி நிறைய உழைத்திருக்கிறார்…!”

நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசியதாவது…

“இந்தப்படத்தில் அருமையான வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் குழுவிற்கு நன்றி. என் கதாப்பாத்திரத்தை எல்லோரும் ரசிப்பீர்கள். சாம் நல்ல இசையை தந்துள்ளார்..!”

இயக்குநர் கல்யாண்கிருஷ்ணன் பேசியதாவது…

“நான் பேச நினைத்ததை எல்லாம் அனைவரும் பேசி விட்டனர், நான் பேசுவதற்கு ஒன்றுமில்லை, இந்த படம் துறைமுகத்தில் நடப்பவைகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது, அதனால் அனைவருக்கும் இது புதிதாக இருக்கும் என்று கூறினார்கள், ஆனால் அப்படி இல்லை, என்னை சுற்றியுள்ள நிறைய நண்பர்கள் துறைமுகத்தை சுற்றித்தான் இருக்கிறார்கள், அவர்கள் எளிய மக்கள் தான். எனவே படம் பார்க்கும் அனைவரும் தங்களுடன் எளிதாக தொடர்புபடுத்தி கொள்ளும் ஒரு எளிமையான வாழ்வை சொல்லும் வண்ணம் தான் இப்படம் இருக்கும்.

இப்படத்தை ஜெயம் ரவி தன்னுடைய நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார். எல்லா படங்களுக்கும் கேப்டன் இயக்குநர் என்றுதான் கூறுவார்கள் ஆனால் இந்தப் படத்தின் கேப்டன் எங்கள் தயாரிப்பாளர் சுந்தர் தான், என் அனுபவத்தில் நிறைய தயாரிப்பாளர்களை பார்த்துள்ளேன் ஆனால் சுந்தர் அளித்த ஆதரவு நம்ப முடியாத ஒன்று , நான் இதனை கூறுவதற்கான காரணங்கள் நீங்கள் படத்தை பார்த்த பிறகுதான் தெரியும். 

அதன் பிறகு ஜெயம் ரவி சார், என்னுடைய திரைப்பயணம் என்பது ரவி சாரை சுற்றியே அமைந்துள்ளது, பேராண்மை முதல் இன்று வரை நாங்கள் ஒன்றாய் பணிபுரிந்துள்ளோம். பேராண்மையில் திரைக்கதை, பின் பூலோகம், இப்போது அகிலன், இந்த மூன்று படங்களும் பெரிய கருத்துகளை கொண்ட படம் இந்த மூன்று படங்களிலும் எனக்கு ரவி சாருடன் கிடைத்த அனுபவம் மிகவும் பெரியது ,

அதை இன்னும் பல மணி நேரம் கூறலாம், பிரியா மற்றும் தான்யா சிறப்பாக நடித்துள்ளனர், இந்தப் படத்தில் சிராக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சாம் சி எஸ் அருமையாக இசையமைத்துள்ளார். இப்படத்தின் VFX காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன, படம் வெளியான பின்னர் நீங்கள் இந்த VFX காட்சிகள் பற்றி பேசுவீர்கள்..!”

நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது…

“20 வருட திரை வாழ்க்கையில் உங்களது ஒத்துழைப்பு, பாராட்டு நிறைய கிடைத்துள்ளது எப்போதும் நண்பர்களாக இருக்கலாம் என ஆசைப்படுகிறேன். மேக்கிங் பொறுத்தவரை அகிலன் ரொம்ப கஷ்டமான படம், இதெல்லாம் கிடைக்குமா, இதெல்லாம் எடுக்க முடியுமா, என நினைத்தபோது, தயாரிப்பாளரால்தான் இதை எடுக்க முடிந்தது. இந்த படத்தை சாத்தியமாக்கிய என் படக்குழு அனைவருக்கும் நன்றி.

பாபி மாஸ்டர் பேராண்மையிலிருந்து தெரியும். இயக்குநருடன் இணைந்து பயணித்துள்ளார். விவேக், பிசி ஶ்ரீராம் சாரின் செல்லப்பிள்ளை, அயராத உழைப்பாளி, என் அடுத்த படத்திலும் அவர் தான் ஒர்க் பண்ணுகிறார். சிராக் என் பிரதர், அவருக்கு வாழ்த்துகள். பிரியா தமிழ் பேசி நடிக்கும் ஹீரோயின், ஒவ்வொரு படத்திலும் மெருகேறிக்கொண்டே போகிறார், வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் சுந்தர் சார் சகோதரர் மாதிரி தான், நிறைய படங்கள் சேர்ந்து பயணிக்க போகிறோம். இயக்குநர் கல்யாண், மிகப்பெரிய திறமைசாலி, கடின உழைப்பாளி, நல்ல சிந்தனையாளர் மக்களுக்கு நல்ல விசயம் சொல்ல ஆசைப்படும் நபர். அவருக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கட்டும். இந்தப்படம் நல்லா வந்ததற்கு காரணம் அவருடைய டீம் தான். தான்யா இந்தப்படத்தில் சர்ப்ரைஸ் ஆக இருப்பார். சாம் CS அட்டகாசமான இசையை தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது..!”

இப்படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடிக்க, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நயாகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் சிராக் ஜனி, ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

 

தொழில்நுட்பக் குழு விபரம் –

தயாரிப்பு : Screen Scene Media Entertainment Pvt Ltd

இயக்கம் : கல்யாண கிருஷ்ணன் 

இசை : சாம் CS

ஒளிப்பதிவு : விவேக் ஆனந்த்  

படத்தொகுப்பு : N. கணேஷ் குமார்

கலை இயக்கம் : விஜய் முருகன்

உடை வடிவமைப்பு : பல்லவி சிங்

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : பூஜா பிரியங்கா

தலைமை விநியோகம் : கிரண் குமார் S

பப்ளிசிட்டி டிசைனர் – தண்டோரா சந்துரு

டீசர் கட்ஸ் : விக்னேஷ் RK 

விளம்பரம் & திட்டமிடல் – ஷ்யாம் ஜாக் 

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்