September 20, 2024
  • September 20, 2024
Breaking News
March 4, 2023

இன் கார் திரைப்பட விமர்சனம்

By 0 464 Views

அன்றாடம் செய்தித்தாள்களில் யாரோ ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் செய்தி வந்து கொண்டிருக்கிறது. 

ஒன்றல்ல… ஜென்டில்மேன்..! இந்தியாவெங்கும் ஒரு நாளில் இப்படி பாலியல் பலாத்காரத்துக்காக 100 பெண்கள் கடத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம். ஒவ்வொரு வருடமும் 36 ஆயிரம் பேர்.

நெஞ்சு அடைகிறதா..? இது ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கம் கடத்தினார்கள் கற்பழித்தார்கள் என்பதுடன் அந்த செய்தியை நாம் கடந்து விடுகிறோம். ஆனால் பாலியல் பலாத்காரம் நடைபெறுவதற்கு முன் எத்தனை மணி நேரம் எத்தனை விதமான சித்திரவதைகளை அனுபவித்து அந்தப் பெண் கடத்தப்பட்டு இருப்பாள் என்பதை நாம் ஒரு கணமும் சிந்தித்துப் பார்த்ததில்லை.

அதைச் சிந்திக்க வைத்திருக்கிறது இந்தப் படம்.

ஒரு அண்ணனும் தம்பியும் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கிளம்புவதிலிருந்து தொடங்குகிறது கதை. அப்படி ஒன்றும் அவர்கள் நல்லவர்கள் இல்லை என்கிறது அவர்களுக்கு இடையேயான உரையாடல்.

அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு வரும் வரை வாசலில் காத்திருக்கிறார் மாமன் முறை கொண்ட ஒரு உறவினர். மூவரும் காரில் தங்கள் ஊருக்கு புறப்படும் போது கார் மக்கர் செய்ய… இன்னொருவர் ஓட்டி வரும் ஒரு காரை கையகப்படுத்துகிறார்கள்.

அத்துடன் இல்லாமல் போதை பொருள்களை உபயோகித்துக் கொண்டு அதன் விளைவாக ரித்திகா சிங்கை பாலியல் பலாத்காரம் செய்ய கடத்துகிறார்கள்.

கடத்தப்படும் இரண்டு மணி நேரமும்தான் இந்தக் கதையும் பயணிக்கிறது. இரண்டு மணி நேரமும் மூன்று ஆண்களுக்கு இடையே ஒரு பெண் ஒரு காரில் பயணப்பட நேரும்போது என்னென்ன விதமான அவஸ்தைகளை அனுபவிக்க நேரிடும் என்பதை அனுபவபூர்வமாக நமக்கு உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் ஹர்ஷ் வர்தன்.

இந்தக் கதையின் ஆழமும் , அவசியமும் புரிந்ததாலேயே இதில் நடிக்க ஒத்துக் கொண்டு கடத்தப்படும் பெண்களின் வலியை நமக்கு அங்குல அங்குலமாக உணர்த்தி இருக்கிறார் ரித்திகா சிங்.

அவர்களிடமிருந்து தப்பிக்க எப்படி எல்லாமோ முயற்சி செய்து அத்தனை முயற்சியும் அற்றுப் போன சூழலில் சிறுநீர் கழிக்கவாவது அவர் அனுமதி கேட்கும் போது நம் உச்சி மண்டையில் அந்தப் பெண்ணின் வலி சுரீர் என்று உரைக்கிறது.

அப்போதும் அவள் சிறுநீர் கழிப்பதை பார்ப்பதற்காக ஒருவன் தயாராக, காரிலிருந்து இறங்காமல் உடையிலேயே ரித்திகா சிங் சிறுநீர் கழிக்கும் போது பாலியல் பலாத்காரத்துக்கு இதுவரை உள்ளான ஒவ்வொரு பெண்ணின் வலியும் வேதனையும் நமக்கு உரைக்கிறது.

ரித்திகா சிங் கடத்தப்படும் வழியில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவர் பார்த்திருந்தும் அவருக்கு உதவ யாரும் முன் வரவில்லை என்பது இந்த சமுதாயத்தின் அவலம் என்றே கொள்ள வேண்டும்.

கிளைமாக்சில் என்ன ஆகிறது என்று தெரிந்து கொள்ள நீங்களும் படத்தைப் பார்த்து விடுங்கள்.

“உன்னுடைய தங்கையை ஒருவன் இப்படிக் கடத்தினால் நீ ஒத்துக் கொள்வாயா..?” என்று ஒரு கட்டத்தில் தன்னைக் கடத்தியவனிடம் ரித்திகா கேட்க, “என் தங்கையை முறைத்துப் பார்த்த ஒரே காரணத்துக்காக அவனை கத்தியால் குத்தினேன்..!” என்கிறான் அவன்.

அப்படி அதனால் குத்தப்பட்டவனும் இறந்து போக அவன் மீதான வழக்கின் பிடி இறுகுகிறது என்பதை கதையின் ஊடே நமக்குப் புரிய வைக்கிறார் இயக்குனர்.

அத்தனை கொடுமையும் முடிந்த பொழுதில் தெருவோர இருக்கையில் ஓய்வுக்காக ரித்திகா அமர இன்னொரு காரில் வரும் சிலர் அவரை மீண்டும் கடத்த முடிவெடுக்க, அப்போது ரித்திகா கத்துகிறார் பாருங்கள் ஒரு கத்து… அது ஒட்டு மொத்த பாதிக்கப்பட்ட பெண்களின் கோபாவேசக் குரல் என்று கொள்ள முடிகிறது.

கதை நடக்கும் பகுதி, நடிகர்கள் எல்லோருமே வடக்கத்திய முகங்கள் என்பதால் இது நம் சம்பந்தப்பட்ட கதை இல்லை என்பதான உணர்வு எழுகிறது. 

ஆனாலும் ஆணின் வக்கிரம் – பெண்ணின் வலி எல்லா ஊரிலும் எல்லா மாநிலத்திலும் எல்லா கண்டங்களிலும் ஒன்றுதான் என்பதால் அதை புரிந்து கொள்ளவும் முடிகிறது.

இன் கார் – பால் பாகுபாட்டால் பெண் படும் பாடு..!